போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 14

ஒரு சில என்ஐpயோக்கள் மிகவும் பயனுள்ள உதவிப் பணிகளைச் செய்தார்கள் இதில் ஒக்ஸ்பாம் என்ற சர்வதேசப் புகழ் பெற்ற நிறுவனமும் இங்கிலாந்து  அரச குடும்பத்தினர் ஆதரவு பெற்ற சிறுவர் காப்பு நிதியம் என்று பெயரிடப்பட்ட தொண்டர் அமைப்பும் முதலிடம் வகிக்கின்றன.

ஈழத் தமிழர்கள் தமது தாயக மக்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கிய இரு தொண்டு அமைப்புக்கள் பற்றி இவ்விடத்தில்  குறிப்பிட வேண்டும் முதன்மையானது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனது பணிகளை இயன்றளவு திறனுடன் வழங்கியது.

சீடொற் என்ற தமிழர்களுக்கான சமூக பொருளாதார நிறுவனம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்று சர்வதேச மட்டத்தில் அறியப்படாமல் இருந்தாலும் இறுதி வரை அரும்பணி ஆற்றியது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கல் பள்ளிச் சிறுவர்களுக்கு கல்விக்கான உபகரணங்களை வழங்குதல் சமைத்த உணவு வகைகளை  வசதி குறைந்தவர்களுக்கு வழங்குதல்  குடிசைகள் அமைத்துக் கொடுத்தல் என்பன சீடொற் நிறுவனத்தின் பங்களிப்பாகும்

ஐ.நாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான யூ.என்.டி.பி என்று அழைக்கப்படும் ஐநா மேம்பாட்டுத் திட்ட அமைப்பு தாயகத்தின் விவசாய மேம்பாட்டிற்கு உதவியுள்ளது இதே வகையில் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட கெயர் நிறுவனமும் சிறப்பான பணியாற்றியுள்ளது.

2008 செப்ரெம்பர் 8ஆம் நாளுடன் தாயகத்தில் பணி புரிந்த அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் சிறிலங்கா அரசின் கட்டளைக்கு அமைவாக வெளியேறி விட்டன

ஈழத் தமிழர்களுக்கு  எதிராகக் கொடிய இனப் படுகொலையைச் சாட்சியங்கள் இல்லாமல் நடத்துவதற்கு தொண்டு அமைப்புக்கள் ஐநா கிளை அமைப்புக்கள் ஆகியவற்றின் வெளியேற்றம் வாய்ப்பு அளித்தது எம்.எஸ்.எப் என்ற மருத்துவ சேவை வழங்கும் தொண்டு நிறுவனத்தின் வெளியேற்றம் போரில் காயமடையும் மக்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பேரிழப்பாகும்.

நினைவுப் பகிர்வு என்று வகைப் படுத்தலுக்கு உட்படும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஐநா கிளைகளின் வெளியேற்றம் பற்றி முக்கிய வினா எழுப்பம் தேவை இருக்கிறது.

அரசியல் ஆய்வாளர்கள் நோக்கில் சமகால உலக ஒழுங்கில் என்.ஐP.ஒ எனப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன இறையாண்மை பெற்ற நாடுகள் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு இந்தத் தொண்டர் அமைப்புக்களும் முக்கியத்துவம் உண்டு என்பது ஆய்வாளர் நிலைப்பாடு.

ஐநாவுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியும் சிறப்பும் இவற்றிற்கு இருக்கிறது அதே சமயத்தில் இந்த அமைப்புக்களின் ஆலோசனையைப் பெற்று முக்கிய தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு ஐநாவுக்கு உண்டு.

ஐநாவின் முக்கிய ஆலோசனை மற்றும் தீர்மானம் எடுக்கும் அமர்வுகளில் பங்குபற்றும் உரிமையும் அந்தஸ்தும் தொண்டர் அமைப்புக்களுக்கு உண்டு இது இன்றைய உலக நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். இப்படியான சிறப்பு வாய்ந்த தொண்டு நிறுவனங்கள் தமது நலனில் கூடுதல் கவனம் செலுத்தியவாறு அல்லற்படும் மக்களை நடாற்றில் தள்ளிவிட்டு வெளியேறுவதை நியாயப் படுத்த முடியவில்லை.

தொண்டர்  அமைப்புக்களின் வெளியேற்றம் சமகால உலக ஒழுங்கில் மிக முக்கியமான அடிக்குறிப்பாக அமைகிறது சம்பந்தப்பட்ட அமைப்புக்களின் கண்களில் இது படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஐநாவின்  கிளை அமைப்புக்களின் வெளியேற்றம் மிகவும் பாரதூரமான விடயம் ஐநாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அவர்கள் மிக வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார் செப்ரெம்பர் 2008ல் வன்னியில் இருந்து வெளிநாட்டுப் பணியாளர்களை முழுவதுமாக விலக்கிக் கொண்டது மிகப் பெரிய தவறு என்று அவர் சாடியுள்ளார்.

சிறிலங்காவின் போர் குற்றங்களில் ஐநாவுக்கும் பங்கு இருப்பதாக ஆர்பர் அம்மையார் சுமத்திய குற்றச்சாட்டு கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் நாட்களின் இறையான்மையா ஐநாவின் வலுவா எது முக்கியம் என்ற வினாவின் விடையில் ஐநாவின் எதிர்காலம் தங்கியுள்ளது. 

நாம் இரட்டை வாய்க்கால் நோக்கி நடந்த போது கடும் தாக்குதலுக்கு உள்ளானோம் மக்களைக் குறிவைத்து ஆட்டிலறி ஷெல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் நடத்தப்பட்டன ஏப்ரல் மாதம் 2009ம் ஆண்டின் இறுதி நாட்கள் சிறிது நாட்களில் வரப்போகும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குக் கட்டியம் கூறின.

கொத்துக் குண்டுகள் பாரிய வட்டத்திற்குள் வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள் வெள்ளைப் பொஸ்பரஸ் எரி குண்டுகள் இந்த அப்பாவி மக்கள் மீது ஏவப்பட்டன. நாங்கள் பொதுமக்களை கொல்லவில்லை பயங்கரவாதத்தை மாத்திரம் தாக்கி அழித்தோம் என்று போர் முடிந்த காலத்தில் ஒரு உயர்மட்ட சிங்கள இராணுவ அதிகாரி  கூறினார் இந்த விசித்திர வாதம் இனப் படுகொலையை நியாயப் படுத்தும் தன்மை வாய்ந்தது ஆனால் உலகம் அதை நம்புவதற்குத் தயாராக இருந்தது தான் மிகவும் கொடூரமானது.

இராணுவ நடவடிக்கை மூலம் தமிழர்களுக்கு நாம் விமோசனம் அளித்தோம் இதற்காக அவர்கள் எமக்கு நன்றி கூறாமல் வெறுப்பைக் காட்டுகிறார்கள் இது எமக்கு மிகவும் கவலை அளிக்கிறது இவ்வாற அதே அதிகாரி தனது பத்திரிகை நேர்காணலில் கூறினார்.

இரணைப்பாலையில் இருந்து இரட்டை வாய்க்கால் வரை ஈழத் தமிழர்களின் பிணங்களும், கால்நடைகளின்  சடலங்களும் சாலையோரமாகப் பரவிக் கிடந்தன அவசர அவசரமாக ஆழம் குறைந்த புதைகுழிகளைத் தோண்டி உறவினர்களும் பொதுமக்களும் அடக்கம் செய்தனர் கால் நடைகளின் சடலங்கள் வீழ்ந்த இடத்தில் விடப்பட்டன. தமிழர் புனர் வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கைவிடப்பட்ட  சடலங்களைத் தமது செலவில் அடக்கம் செய்தனர் முள்ளிவாய்க்காலில் அவர்கள் பணிநிறைவுறாமல் ஸ்தம்பித நிலைக்கு வந்து விட்டது காரணத்தை ஏற்கனவே கூறிவிட்டோம்.

இனப் படுகொலையின் முக்கிய பகுதியை இது வரை கூறாமல் வந்துள்ளேன் ஐனவரி 21ம் திகதி தொடக்கம் அரச வானொலி மக்களை அரசு நியமித்த தாக்குதலுக்கு உட்படாத பாதுகாப்பான பகுதிக்குள் செல்லுமாறு மீண்டும் மீண்டும் கூறியது இவை உண்மையில் மக்களுக்கு உயிராபத்து நிறைந்த பகுதிகளாக இடம் பெற்றன நோ பயர் சோன் அதாவது தாக்குதல் நடத்தப்படாத பகுதி என்று அரச வானொலி குறிப்பிட்ட பகுதிக்குள் மிகக் கூடுதலான பொது மக்கள் உயிரிழப்புக்கள் நடைபெற்றன

தமிழில் கட்டி வைத்து அடித்தல் என்ற பிரயோகம் காணப்படுகிறது இதே வாக்கியம் கட்டி வைத்துத் தோல் உரித்தல் என்றும் சொல்லப்படுகிறது இந்த நிலையில் தான் வன்னி மக்கள் இருந்தனர் குறிப்பிட்ட எல்லைக்குள் வந்த மக்கள் மீது ஆட்டிலறி ஷெல் வீச்சு மற்றும் விமானக் குண்டு வீச்சு ஆகியவற்றை நடத்தியது

இதன் காரணமாக உயிரிழப்புக்கள் உச்சம் அடைந்தன மக்கள் அரசு குறிப்பிட்ட பகுதிக்குள் நுளையயாமல் இருந்திருந்தால் உயிரிழைப்பைக் குறைத்திருக்கலாம் என்று சிலர்  வாதிடுகிறார்கள் முதலாவது நோ பயர் சோன் ஐனவரி 21ம் நாள் 2009ம் வருடம் அரசினால் பிரகடனம் செய்யப்;டது கிளிநொச்சியில் இருந்து விசுவமடு வரை விரட்டப்பட்ட வன்னி மக்களின் செவிகளில் இந்தப் பிரகடனம் மிகவும் இனிமையான செய்தியாக வீழ்ந்தது

பாதுகாப்பான வலயம் என்று கூறப்படும் நோ பயர் சோன் ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசு ஏற்றிய மரணப் பொறியாக இடம்பெற்றது அரசின் உயர்மட்டத்தினர் அயல் நாட்டின் ஆலோசனையோடு இந்த உத்தியைக் கையாண்டது.

சிங்கள அரசுகள் இன்று நேற்றல்ல நெடுங்காலமாக கோயில்கள் பள்ளிக்கூடங்கள் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன வடமராட்சி ஒப்பரேசன் என்ற நடவடிக்கையை நடத்திய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் முதலி இந்த உத்தியை நடைமுறைப் படுத்தினார்

வடமராட்சியைக் கைப்பற்றியபின் யாழ் குடா நாட்டின் மிகுதிப் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் செயற்பட்ட இராணுவ நடவடிக்கை 1987ல் மேற் கொள்ளப்பட்டது இப்போது சர்வ வல்லமை பொருந்திய பாதுகாப்புச் செயலராகப் பதவி வகிக்கும் மகிந்த ராஐபக்சவின் இளவல் கொத்தபாயா ராஐபக்ச வடமராட்சி ஒப்பரேசனில் ஈடுபட்ட படையில் லெப் கேணலாக இருந்தார். வடமராட்சி ஒப்பரேசன் இராணுவ நடவடிக்கை இந்திய படையின் வருகையோடு இடை நிறுத்தப்பட்டது. கொத்தபாயா இராணுவ சேவையில் இருந்து விலகியபின் அமெரிக்கா சென்று விட்டார்
 
காலப்போக்கில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கொத்தபாயா நெடுங்காலமாக அங்கேயே தங்கி விட்டார் மகிந்த ராஐபக்ச நாட்டின் அதியுயர் பதவியான சனாதிபதிப் பதவியைக் கைப்பற்றியவுடன் கொத்தபாயா நாடு திரும்பி விட்டார் அண்ணன் அவருக்குக பாதுகாப்புச் செயலர் பதவியை வழங்கினார்.

அமெரிக்கா சிறிலங்கா ஆகிய இரு நாட்டுக் குடியுரிமை பெற்ற கொத்தபாயா இரு நாடுகளின் உறவுப் பாலமாகத் திகழ்கிறார் இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேயில் சீனா, ரசியா ஈரான், லிபியா உட்பட இருபது நாடுகள் ஈழத் தமிழர்கள் அமெரிக்க வாழ் ஈழத் தமிழர்கள் அமெரிக்க அரசின் உதவியுடன் போர் நிறுத்தம் கொண்டு வரலாம் என்று பகற்கனவு கண்டனர்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு என்ற ஈழத் தமிழர் அமைப்பினர் அமெரிக்கா சனாதிபதியின் உதவியோடு போர் நிறுத்தம் கொண்டு வரலாம் என்று மனப்பால் குடித்தனர் அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் ஒன்று மாத்தரமே

ஈழத் தமிழர்களின் மீட்பிற்காக பசுபிக் பெருங்கடலில் உலாவும் அமெரிக்கக் கடற்படையை அமெரிக்கா அனுப்ப போவதாக முள்ளிவாய்க்காலில் செத்துக் கொண்டிருத்த மக்கள் எண்ணினர் கடல் மார்க்கமாக அமெரிக்கக் கடற்படையினர் முல்லைத்தீவுக் கரையில் வந்து இறங்கப் போகிறார்கள் என்ற கதை பரவலாக அடிபட்டது சிலர் வானத்தைப் பார்த்தபடி இருந்தனர் அமெரிக்க இரட்சகர்கள்  வானூர்தி மூலம் வருவார்கள் என்று அந்த அப்பாவிகள் நம்பினார்கள்

அமெரிக்க அதிகாரிகள் மிக நுட்பமான இராசதந்திரத்தைக் கையாண்டார்கள் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டியவாறு சிறிலங்கா அரசுக்கு ஒத்தாசையாகச் செயற்பட்டார்  இந்த இராசதந்திரத்தை முன்னெடுத்தவர்களில் கிலரி கிளின்ரன் என்ற இராஐhங்கச் செயலர் அடங்குவார்

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ் நாட்டின் மக்கள் தொலைக் காட்சியும் அமெரிக்க அரசின் கபட நடவடிக்கையால் ஏமாற்றப்பட்டுள்ளது ஒரு அமெரிக்க கப்பல் முல்லைத்தீவுக் கரையை நோக்கி வருவதாக அது தவறான தகவலை வெளியிட்டது.

மூன்று நோ பயர் சோன்களை அரசு ஒன்றின் பின் ஒன்றாக அறிவித்தது ஒவ்வொன்றும் முந்தியதிலும் பார்க்கப் பரப்பளவில் சிறியதாகவும் மனித வாழ்வுக்கு மிகவும் கடினமான பகுதியாகவும் இருந்தன அரசு வன்னி மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டிய படி இருந்தது உணவு வழங்கல் மருத்துவ சேவை என்பனவற்றைக்  குறைக்கும் உத்தியாகவும் சிறிய பகுதிக்குள் பெருந்தொகை மக்களைத் தள்ளும் உத்தியாகவும் இது அமைந்தது

இது பற்றி விரிவாகப் பார்ப்போம் ஐனவரி 21ம் திகதி பிரகடனப் படுத்தப்பட்ட பாதுகாப்பான பிரதேசத்தின் பரப்பளவு 35.5 சதுர கி.மீ இது விசுவமடுவில் தொடங்கி சுதந்திரபுரம் வரை அமைந்தது

பெப்ரவரி 12ம்  திகதி பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியின் பரப்பளவு 14 சதுர கி.மீ மாத்திரமே இது கடற்கரைக் கிராமங்களான புது மாத்தளன் வலைஞர்மடம் ஆகியவற்றை உள்ளடங்கியது இதில் பாதிக்கு மேல் கடற்கரை மணல் மேடுகளாகும்

மே 08 நாள் அரசு பிரகடனப் படுத்திய பாதுகாப்பான பிரதேசத்தின்  பரப்பளவு 05 சதுர கி.மீ மாத்திரமே இது கடலோரப் பிரதேசமாகும்

இடம் பெயர்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 03 இலட்சம் அரசு வெளியிட்ட எண்ணிக்கை 60,000 தொடக்கம் 75,000 மாத்திரமே 03 இலட்சம் மக்கள் மேற்கூறிய மூன்று பாதுகாப்பான  பகுதிகள் என்று கூறப்பட்ட நிலப்பரப்பிற்குள் அனுபவித்த துன்பத்தை சொல்லில் வடிக்க இயலாது,..

தொடரும்…

அரசியல் ஆய்வாளர் க. வீமன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.