யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வான் மாரவிலவில் விபத்து! ஐந்து வயது சிறுவன் உட்பட இருவர் பலி!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று சிறைச்சாலை பஸ் வண்டியின் பின்புறமாக மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மாரவில நகருக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரில் 5 வயதுடைய கமலராஜன் சந்தூஷ் எனும் சிறுவனும் அடங்குவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மாணிக்கம் சண்முகலிங்கம் எனும் 60 வயதுடையவர் உயிரிழந்த மற்றவராவார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த வான் சாரதி உட்பட மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  காயமடைந்த மேலும் 7 பேர் மாராவில தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலைக்கு வந்த அவர்களது உறவினர்கள் காயமடைந்தவர்களை நல்லூர் வைத்தியசாலைக்கு மாற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த பஸ் வண்டி மாராவில பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளையில் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வானே இவ்வாறு பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸ் நிலைய மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.