இந்திய உதவியுடனான வீடமைப்புத் திட்டம் – கிளிநொச்சியில் இன்று முக்கிய கூட்டம்

வடக்கில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளை அமைக்கப்படவுள்ளன. இதற்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான சிறப்புக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த 10,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான இன்றைய கூட்டம் வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெறும். இதில் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. அடுத்து உடல்உறுப்புகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ள 10,000 வீடுகளில் கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் 5000 வீடுகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் 5000 வீடுகளும் கட்டப்படவுள்ளன.

இந்தத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதும் சிறிலங்கா அதிபரின் செயலணி இதுதொடர்பான அறிக்கையை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கும்.

அதன் பின்னர் வீடமைப்பு நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.