நயனதாராவை காதலிக்கிறேன், கல்யாணம் செய்யப் போகிறேன் – பிரபுதேவா

ஆமாம், நயனதாரா வைக் காதலிப்பது உண்மைதான். அவரை கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன். திருமணத்திற்குப் பின்னர் நயனதாரா வீட்டுப் பறவையாக இருப்பார் என்று அதிரடியாக கூறியுள்ளார் பிரபுதேவா.

தமிழ் சினிமா வின் ஹாட்டஸ்ட் காதல் விவகாரங்களில் பிரபுதேவா-நயனதாரா கள்ளக் காதலும் ஒன்று.
தனது காதல் விவகாரத்தை ஆரம்பத்தில் ரகசியமாக வைத்திருந்தார் பிரபுதேவா. பின்னர் இது வெளியே தெரிய ஆரம்பித்து அவரது முதல் மனைவி பூகம்பமாக வெடித்தார். இதையடுத்து தனது காதலை இன்னும் இறுக்கமாக பொத்திக் காத்து வந்தார் பிரபுதேவா. இருப்பினும் இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள்  வந்தன. இந்த நிலையில் தனது வாயாலேயே காதலை ஒத்துக் கொண்டுள்ளார் பிரபுதேவா.

இதுகுறித்து உருமி படப்பிடிப்பின்போது அவர் ஒரு பேட்டி அளித்தார். அப்போது விரிவாகப் பதிலளித்துள்ளார்.

கேள்வி: நயனதாரா உங்கள் வாழ்க்கையில் வர என்ன காரணம்?

பதில்: ஒரு விஷயம் அல்ல, நிறைய இருக்கிறது. நான் கஷ்டப்பட்டபோது ஆறுதலாக இருந்தார். பாலைவனத்தில் எனக்கு சோலையாக தெரிந்தார். பொதுவாக நான் முன்கோபி. என்னை மாற்றிவிட்டார். நான் முன்புபோல் இல்லை என்று என் உதவியாளர்களே சொல்கிறார்கள்.

அவர் தைரியசாலி. என்னையும் அவரைப்போல் ஆக்கி விட்டார். நிபந்தனைகள் இல்லாதது காதல் என்பதையும் அவர்தான் புரிய வைத்தார். நயனதாரா அற்புதமான மனிதபிறவி. அவர் சார்ந்த எல்லாவற்றையுமே விரும்புகிறேன்.

கேள்வி: நயனதாராவுக்கும், உங்களுக்கும் காதல் என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதற்கு பதில் சொல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்? உங்களுக்குள் உள்ள உறவுதான் என்ன?

பதில்: என் சினிமா வாழ்க்கையில் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் என்னைப் பற்றி வந்து விட்டன. அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. விளக்கங்கள் சொல்வதையும் தவிர்த்தேன். மறுப்புகளும் சொல்லவில்லை.

ஆனால் நயனதாராவை பொறுத்தவரை அவர் எனக்கு விசேஷமானவர். ஆமாம். நான், நயனதாராவை காதலிக்கிறேன். விரைவில் நாங்கள் திருமணம்  செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம்.

இது எனது தனிப்பட்ட சொந்த விஷயம். இதை பற்றி விளக்கமாக மீடியாக்களுக்கு சொல்ல அவசியம் இல்லை. மனம் திறந்து எதையும் பேச விருப்பமும் இல்லை.

கேள்வி: உங்களால் நயனதாரா சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக கூறப்படுகிறதே?

பதில்: நயனதாரா வீட்டுப்பறவை போன்றவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். எந்த ஒருவளையும் காதலிப்பவன் அவளுடன் அதிக நேரத்தை செலவிடத்தான் விரும்புவான். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை. நயனதாரா சினிமாவில் நிறைய சாதித்து விட்டார். முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இதுவும் எல்லோருக்கும் தெரியும்.

நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பைபகிர்ந்து கொள்ளாமல் பிசியாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

இதன் மூலம் விரைவில் நயனதாராவை கல்யாணம் செய்யப் போகிறார் பிரபுதேவா என்பது தெளிவாகியுள்ளது.

அதேசமயம், அவரது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யப் போகிறாரா அல்லது அவரது சம்மதத்துடன் 2வது மனைவியாக நயனதாராவுடன் குடித்தனம் நடத்தப் போகிறாரா என்பது தெரியவில்லை.

தனது மனைவி ரமலத்தையும் கூட இப்படித்தான் காதலித்து அதிரடியாக கல்யாணம் செய்தார் பிரபுதேவா. அந்தக் கல்யாணத்திற்கும் ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர்தான் சமாதானமாகினர் என்பது நினைவிருக்கலாம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.