நாங்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல!.புதிய அரசியல் புரட்சி மூலம் எமது நிலத்தில் கால் பதிப்போம்: சிறிதரன் எம்.பி

இலங்கையின் வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக மண்ணில் தன்னைத்தானே ஆளுகின்ற அரசியல் புரட்சி ஒன்றின் மூலம் எமது நிலத்தில் நாம் உறுதியோடு கால் பதிப்போம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுவிசர்லாந்து வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தின் சுற்றத்து முற்றம் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். 

நாங்கள்தோற்றுப்போனவர்கள் அல்ல.. அதேவேளை மீண்டும் ஆயுதப்போராட்டம்தான் தீர்வை தரும் என்றும் நான் சொல்லவில்லை. புதிய இராஜதந்திரத்தின் ஊடாக இஸ்ரேலியர்கள் எப்படி தங்கள் இழந்த மண்ணை மீட்டார்களோ எப்படி கட்டி எழுப்பினார்களோ அதேபோன்று இலங்கையின் வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக மண்ணில் தன்னைத்தானே ஆளுகின்ற அரசியல் புரட்சி ஒன்றின் மூலம் எமது நிலத்தில் நாம் உறுதியோடு கால் பதிப்போம் என அவர்  தெரிவித்தார்.

சுவிஸ் சூரிச் நகரில் வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணபிள்ளை உதயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஊடகவியலாளர்கள் ந.வித்தியாதரன், இரா.துரைரத்தினம் ஆகியோர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தொடர்ந்து உரையாற்றுகையில் வளமோடு தன்னிறைவோடு வாழ்ந்த வட்டக்கச்சி மண் இன்று அன்னியர்களின் கால்பட்டு நசிந்து கிடக்கிறது. அன்று நாங்கள் கெட்டிபொல் அடித்து ஓடி விளையாடி திரிந்த போது எங்களை யாரும் தடுக்கவில்லை. கோயில் குளங்களுக்கு சுதந்திரமாக சென்று வந்தோம். எங்கள் மண்ணில் நாங்கள் தலைநிமிர்ந்து நின்றோம். ஆனால் இன்று கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சிக்கு செல்லும் வழியில் பல இடங்களில் அடையாள அட்டையை காட்டியே செல்ல வேண்டியிருக்கிறது.

இந்த நாட்டில் எங்கள் ஊர் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்து போன என்மனதை தாயை இழந்து பிள்ளையை இழந்து தவிக்கும் எங்கள் உறவுகளின் கண்ணீர் மறைக்கிறது.
அங்கே என்ன நடந்தது என நீங்கள் எல்லாம் தவித்ததை நாங்கள் அறிவோம். எங்கள் குழந்தைகள் கஞ்சிக்காக காத்திருந்த போது அவர்கள் மீது கொத்துக்குண்டுகளையே வீசினார்கள். அந்த பிஞ்சுகளைக் கூட அழிப்பதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம். அந்த நேரத்தில் வீதியில் இறங்கி போராடினீர்கள், துடித்தீர்கள், அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. நாங்கள் ஒரு உன்னதமான பயணத்தை மேற்கொண்டோம். ஆனால் அதை சர்வதேசம் சரியாக புரிந்து கொள்ளவில்லையா என்ற ஆதங்கமே எங்கள் மனங்களில் மேலோங்கியிருக்கிறது.

இன்று நாங்கள் இலக்கை நோக்கி நகரமுடியாது திணறுகிறோம். ஆனாலும் நாங்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல. புதிய இராஜதந்திரத்தின் ஊடாக வடகிழக்கு பூர்வீக மண்ணில் தமிழன் தன்னைத்தானே ஆளுகின்ற அரசியல் புரட்சி ஒன்றே எம்முன் இருக்கின்ற ஒரேஒரு வழி. அந்த வழியில் நாங்கள் உறுதியோடு செல்ல வேண்டும்.

வளமோடு வாழ்ந்த எமது மக்கள் இன்று ஒரு நேர கஞ்சிக்காக கையேந்தி நிற்கிறது. எமது மக்கள் நிவாரணத்தை நம்பி வாழ்ந்தவர்கள் அல்ல. தாங்கள் உழைத்து தன்நிறைவோடு வாழ்ந்தவர்கள்.

பருத்தித்துறையிலிருந்து கொக்குத்தொடுவாய் வரையான கடற்பிரதேசமே பாக்கு நீரிணைப் பகுதியில் அதிக மீன்வளம் உள்ள பிரதேசமாகும். தமிழனுக்கு சொந்தமான இந்த கடற்பிரதேசத்தில் இப்போது அவனுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை. அந்த பிரதேசத்தில் இந்தியன் மீன்பிடிக்கிறான். சீனாக்காரன் மீன்பிடிக்கிறான். சிங்களவன் மீன்பிடிக்கிறான். ஆனால் தமிழனுக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதியில்லை. இதுதான் எங்கள் மக்களின் நிலை இந்த நெருக்கடிகளிலிருந்து நாங்கள் மீளவேண்டும். அனைத்தையும் இழந்து வானமே கூரையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாங்கள் வாழ்வோம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. வீழ்ந்து போன உறவுகளுக்கு உதவுங்கள்.

வடக்கு கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள். 25ஆயிரத்திற்கு மேற்பட்ட அங்கவீனர்கள் இருக்கிறார்கள். தாய் தந்தையை இழந்த சிறார்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மறுவாழ்வு கொடுங்கள் என்றுதான் உங்களை அன்போடும் உரிமையோடும் கேட்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.