18 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணிதிரட்டி கூட்டம் நடத்தினார் ரணில்

ஜனநாயகத்துக்கு விரோதமான 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டிருப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவருடன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, சிரேஷ்ட தலைவர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோசப் மைக்கல் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ரூவான் ஜயவர்த்தன, நிரோசன் பெரேரா ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர்,

“18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் நாம் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். இன்று நடப்பது ஆரம்பக்கட்ட கூட்டமே. 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

18ஆவது அரசியல் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாத நிறைவில், எமக்கு ஜனநாயகம் வேண்டும்’ என்ற செய்தியை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

18ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியல் யாப்புக்கும் முரணானது. அதிகாரத்தைக் குவித்து வைத்து நீண்டகாலம் ஆட்சி செய்யப் போவதாக கூறிய எத்தனையோ பேர், குறுகிய காலத்தில் வீழ்ச்சி கண்ட வரலாறுகள் நிறையவே உண்டு.

ஐக்கியத் தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு யோசனைகள் தற்போது செயற்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக இதுதொடர்பில் நடடிவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.