குமரன் பத்மநாதனை இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கொழும்பில் விசாரணை?

சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை இந்தியாவிலிருந்து வந்திருந்த உயர் மட்ட புலனாய்வுக் குழு ஒன்று கொழும்பில் வைத்து விசாரணை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதிலும் இது தொடர்பாக இந்தியத் தரப்போ அல்லது, சிறிலங்கா தரப்போ செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. இரகசியமான முறையில் இந்த விசாரணைகளை நடத்திவிட்டுச் செல்வதுதான் இந்தியாவின் திட்டமாக இருந்துள்ளது என சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இராணுவத் தளபதி கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த காலப் பகுதியிலேயே இந்திய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் கொழும்பு வந்திருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த புதன்கிழமை கே.பி. மீதான விசாரணைகள் ஆரம்பமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கே.பி.யும் தொடர்புடையவராக இந்தியத் தரப்பால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் அவர் மீது விசாரணை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கத்தை புதுடில்லி ஏற்கனவே கோரியிருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.