இலங்கையில் சர்வாதிகாரம் தலைதூக்குகின்றது: கனேடியத் தமிழர் பேரவை

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள 18 ஆவது திருத்தச்சட்டமானது நாட்டினை முற்றுமுழுதாக சர்வாதிகார நடைமுறைக்கு இட்டுச் செல்வதற்கான சமிக்ஞையாகும் என்றும் திருத்தச்சட்டம் தொடர்பில் தாம் பெரிதும் அக்கறை கொண்டுள்ளதாகவும் கனேடிய தமிழர் பேரவை தெரிவிக்கின்றது.

மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாட்டின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களானது தற்போதைய ஜனாதிபதிக்கு பதவியில் இருப்பதற்கான கால எல்லையை நீடிப்பதுடன் அவரின் அதிகாரத்தின் கட்டுப்பாடுகளையும் இல்லாமல் செய்யும்.

இதன் காரணமாக, துன்பப்படப் போகும் இலங்கையில் உள்ள எமது தமிழ் உறவுகள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக கவலையடைகின்றோம்.

இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமை, பேச்சுரிமை, ஊடகவியலார்கள் மற்றும் தமிழ் இனம் ஆகியவை மதிக்கப்படாமையே இதற்கான காரணமாகும்.

இலங்கையின் தற்போதைய சர்வாதிகார நிலை தொடர்பாக சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் தற்போது புதிய அதிகாரங்கள் சேர்ந்துள்ளன.

பொலிஸ் மற்றும் சட்ட நிர்வாகங்கள், உயர் பதவிகளுக்கான நியமனங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரம் போன்றவையும் அவற்றில் அடங்குகின்றன.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய 17 ஆவது திருத்தச்சட்டமும் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரங்கள் இழக்கப்படும் அபாயமும் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.