சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை: பான் கீ மூனை சந்திக்கிறது நிபுணர்குழு!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவானது, இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளது. இதற்கான வேலைகளை பூர்வாங்கமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்திக்கவுள்ளதாக ஐ.நா சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில் நிபுணர் குழுவிலுள்ள உறுப்பினர்கள் மற்றும் ஏனைய ஐ.நா உத்தியோகத்தர்கள் ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இதனுடைய வழமையான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்காக ஐ.நா செயலாளருடனான சந்திப்பு இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் ஐ.நா செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் வளர்ச்சி உள்ளடங்கலாக ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கு 4 மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 18 ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம் தொடர்பில் கேட்டபோது, அது இலங்கையின் உள்விவகாரம் என்பதுடன், விமர்சனங்கள் எதுவும் இல்லை எனவும் ஐ.நா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.