ஐ.தே.க.வில் தொடர்ந்து இழுபறி: மூத்த தலைவர்கள் சமரச முயற்சி

தயாசிறி ஜயசேகர தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சுயாதீனமாக இயங்க எடுத்திருக்கும் முடிவை தவிர்ப்பதற்கான முயற்சிகளை கட்சியின் பிரதித்தலைவர் கருஜயசூரிய, தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர்களானஜோசப் மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற சிவில் அமைப்புகளுடனான சந்திப்பின்போது இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவினால் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் சிவில் அமைப்புகள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் சுயாதீனமாக இயங்கப் போவதாக தெரிவித்திருக்கும் தயாசிறிஜயசேகர ரோசிசேனாநாயக்க ஆகியோரையும் காணக்கூடியதாக இருந்தது.

சிவில் அமைப்புகளுடனான சந்திப்பு முடிவடைந்ததும் கரு ஜயசூரிய, ஜோசப் மைக்கல்பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல, காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் தயாசிறி ஜயசேகரவுடன் சுமார் 10 நிமிடங்கள் வரை இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். விவகாரத்தை சமரசமாக தீர்க்கும் முயற்சியில் இவர்கள் தொடர்ந்து ஈடுபடவிருப்பதாக காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். இவர்களுடனான சந்திப்பையடுத்து தயாசிறிஜயசேகர அங்கிருந்து வெளியேறும் வேளையில் எதிர்க்கட்சித் தலைவரிடம் சுவாரஸ்யமாக எதனையோ கூறிவிட்டு சிரித்த வண்ணமே வெளியேறிச்சென்றார்.

“டிசம்பரில் கட்சியின் புதிய நிர்வாகம்”

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு கூட்டப்பட்டு கட்சியின் புதிய யாப்புக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுமெனவும் அதனையடுத்து யாப்புக்கமைய புதிய நிருவாகம் தேர்ந்தெடுக்கப்படுமெனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தில் இளம் தலைவர்கள் கட்சியைப் பொறுப்பேற்று நடத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே தனது நோக்கமெனவும் அவர் தெரிவித்தார்.

ஊடகங்கள் மூலம் தன்னைப் பதவி விலக்கக் கோருவோர். செயற்குழுக் கூட்டத்திலோ, பாராளுமன்றக் குழுக்கூட்டத்திலோ அவ்வாறான கோரிக்கையை இதுவரை விடுக்கவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சுயநல நோக்கத்துக்காக அரசு பக்கம்போக நாட்டம் கொண்டவர்கள் போலிக்காரணம் காட்டி என்னை விமர்சித்து குற்றச்சாட்டு சுமத்திவிட்டு அரசுடன் இணைந்து கொண்டனர். கட்சி மீது பற்றிருந்தால் அவர்கள் கட்சிக்குள்ளிருந்தே போராடி இருக்க வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்தார்.கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைக்குழு வழங்கிய சிபாரிசுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுவரும் புதிய யாப்பு கட்சியின் வருடாந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும். மீறுசீரமைப்புக் குழுவின் சிபார்சின் படி எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு வருடாந்த மாநாட்டைக் கூட்டவிருக்கின்றோம். இந்த வருடாந்த மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக யாப்பின் வரைவை சனிக்கிழமை கூடவிருக்கும் கட்சிச் செயற்குழுக் கூட்டத்துக்கு முன்வைக்கப்படவிருக்கின்றது.

வருடாந்த மாநாட்டில் கட்சியின் புதிய யாப்புக்கு அங்கீகாரம் பெறப்பட்டதும் அதனை 2011 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றது. அதனடிப்படையில் கட்சியின் எதிர்காலப் பணிகள் முன்னெடுக்கப்படும். யாப்புத் திருத்தத்துக்கமைய புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெறும்.

எதிர்காலத்தில் வரக்கூடிய இளம் தலைவர்கள் கட்சியைப் பிரச்சினைகளின்றி பொறுப்பேற்று நடத்தக்கூடிய விதத்தில் பாதையை சீராக்கிக் கொடுக்கப்படும். சஜித் பிரேமதாச உட்பட ஏனைய இளம் தலைவர்கள் இலக்கு நோக்கிப் பயணிப்பதற்கும் சவால்களை முறியடித்து வெற்றி காண்பதற்குமான வழிவகைகளைத் தேடிக்கொடுத்து அதற்கேற்ற விதத்தில் பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும்.

இன்று கட்சியிலிருந்து அரசு பக்கம் பாயவிரும்புவோர் கையிலெடுக்கும் ஆயுதம் என்னைக் கண்டிப்பதும் விமர்சிப்பதும் தான். ஏன் ஊடகங்கள் கூட அண்மைக்காலமாக என்னை தாறுமாறாக விமர்சித்து வருகின்றன. அது குறித்து நான் ஆத்திரப்படவோ, அலட்டிக்கொள்ளவோ மாட்டேன். எனக்கெதிராக எய்தப்பட்ட அம்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றைத் தாக்குப் பிடித்துள்ளேன். எதிர்காலத்திலும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் பலம் என்னிடம் இருக்கவே செய்கிறது.

கட்சித் தலைமைத்துவத்திலிருந்து என்னை வெளியேறுமாறு கட்சியில் ஒருவர் கூட இன்று வரையில் நேரடியாகக் கேட்கவில்லை. வெளியேறியவர்கள் கூட வேறு காரணம் கூறிச் சென்றுவிட்டனர். இப்போது சுயாதீனமாக இயங்கப் போவதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருப்பவர்கள் கூட இந்த நேரம் வரை என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படி அவர்கள் உத்தியோகபூவர்மாகத் தெரிவித்தால் பாராளுமன்றக் குழுவைக் கூட்டி அதற்குத் தீர்வுகாணத் தயாராக இருக்கின்றேன்.

கட்சியின் செயற்பாடுகளைக் கிராமிய மட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்பு கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இளைஞர் முன்னணியைப் பலப்படுத்தும் பொறுப்பு இளம் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவர்தன, நிரோஷன் பெரேரா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரசாரப் பொறுப்பு, மக்கள் மயப்படுத்தல், ஊடகச் செயற்பாடுகளுக்கான பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளோம்.எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய விதத்தில் குறுகிய காலத்தில் கட்சியை பலமுள்ளதாகக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“ரணிலின் விளக்கம் திருப்தி தரவில்லை”

ஐக்கியக் தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள் தங்களை திருப்தியடைய வைக்கவில்லையென சுயாதீனமாக இயங்கப் போவதாக எச்சரித்துள்ள எம்.பி.க்கள் நேற்று கூறியுள்ள அதேசமயம் செப்டெம்பர் 22 ஆம் திகதிவரை காலக்கெடுவும் விதித்திருக்கின்றனர்.

தலைமைத்துவ நெருக்கடிக்கு உடனடியாக ரணில் விக்கிரமசிங்க தீர்வு காணாவிடின் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப்போவதாக எச்சரித்துள்ள 25 ஐ.தே.க. எம்.பி.க்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர, செப்டெம்பர் 22 இற்கு முன்பாக சாதகமான பதில் கிடைக்காவிடின் தமது தீர்மானம் குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

“பாராளுமன்றம் செப்டெம்பர் 23 இல் கூடவுள்ளது.அத்தினத்திற்கு ஒருநாள் முன்பாக எழுத்து மூலம் சபாநாயகருக்கு நாம் அறிவிக்க வேண்டியுள்ளது. நாங்கள் சுயாதீனமாக அமருவதாயின் ஒரு நாளைக்கு முன்னர் எழுத்து மூலம் அறிவிக்கவேண்டும். இன்று ரணில் விக்கிரமசிங்க அளித்த விளக்கத்தையிட்டு நாம் திருப்தியடையவில்லை என்று தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

கட்சி மறுசீரமைப்பு இடம்பெறுவதாகவும் அதனை ஒருநாளில் நிறைவேற்றிவிட முடியாதெனவும் ரணில் நேற்று கூறியிருந்தார்.ஆனால் மறுசீரமைப்புக் குழுவினால் ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாகவும் கட்சி மாநாடு தொடர்ந்து தாமதிக்கப்படுவதாகவும் இன்னமும் திகதி குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்றும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.ஜூலையில் மாநாடு இடம்பெறும் என்று தலைவர் கூறினார், பின்னர் அது ஆகஸ்ட்டுக்கு பிற்போடப்பட்டது ஆனால் இது எப்போது இடம்பெறுமென எமக்குத் தெரியாது. இது நீதியற்றது என்று தயாசிறி இணையத்தளமொன்றுக்கு கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.