வவுனியா நகரசபையைக் கலைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கிறார் நாதன்!

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தெரிவாகிய தலைவர் எஸ்.என்.ஜி. நாதன் நகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீயின் மூலம் பதவிகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

நகரசபைத் தலைவரான எஸ்.என்.ஜி.நாதன் நகரசபையை நிர்வகிப்பதில் சர்வாதிகாரப் போக்கினை மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் பீடம் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இவற்றில் நகரசபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களைத் தாக்குகின்றமை, அவர்கள் மீது கண்மூடித்தனமான தண்டனைகளை வழங்குவது போன்ற சம்பங்களும் உள்ளடக்கம்.

இதேவேளை வன்னிப் போர் அழிவின் ஆண்டு நிறைவு வெற்றிநாளை இலங்கை அரசு கொண்டாடிய வேளை வவுனியா நகரசபை மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்து அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு நாதன் தலைமை தாங்கியருந்தமை தெரிந்ததே.

நகரசபைத் தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த வவுனியா மக்கள் மத்தியில் அதிர்ப்தி நிலைகள் நேரடியாக வெளிப்படத் தொடங்கின.

இதனை அடுத்து வவுனியா நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி ஏனைய நகர சபை உறுப்பினர்கள் 29 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றினைத் தயாரித்து நகர சபைத் தலைவரிடம் கையளித்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்க முடியாது எனத் தெரிவித்த அவர் அனைத்து உறுப்பினர்களையும் பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நகரசபையினை அவசரமாக கூட்டிய நகரசபை உறுப்பினர்கள் குறித்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த எஸ்.என்.ஜி. நாதன் இந்த விடயங்கள் தொடர்பில் உயர் மட்டத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் இந்தவிடயங்கள் குறித்து சபையில் விவாதிக்க முடியாது என்றும் கடுமையாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி நகரசபை உறுப்பினர்கள் நகரசபை மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.

சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாத இறுதிக்குள் இதற்கான சரியான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட நகரசபைத் தலைவர்,

இன்றைய கூட்டத்தில் நடைபெற்றவை குறித்து ஆளுநருக்கு விபரமாகத் தெரிவிக்கப் போவதுடன், உறுப்பினர்கள் ஒத்துழைக்காத காரணத்தினால், சபையைக் கலைத்துவிடுமாறு ஆளுநருக்கு சிபாரிசு செய்யப் போவதாகவும் செய்தியாளர்களிடம் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.