பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் ‐ நந்த கொடகே

பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென முன்னாள் தூதுவர் நந்த கொடகே கோரிக்கை விடுத்துள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சில அநீதிகள் இழைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பல வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 500 பேரும், பூசா தடுப்பு முகாமில் 800 பேரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் மேலும் 700 பேரும் இவ்வாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறு தமிழ் இளைஞர்களை தடுத்து வைப்பதன் மூலம் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்படுவதன் மூலம் இளைஞர் மனதில் விரக்தி ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
செல்வந்த புலம்பெயர் மக்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளை பயன்படுத்தி இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தவும், பழிவாங்கல்களை மேற்கொள்ளவும் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது அவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடத்துள்ளார்.
 
தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு உள ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளும், தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
1956ம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
1987‐88ம் ஆண்டுக் காலப் பகுதியிலேயே தமிழ் மொழி அரச கரும மொழியாக அறிவிக்கப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த மக்கள், சிங்களவர்களை கொடிய விலங்குகளாகவே நோக்கும் நிலைமை காணப்பட்டதாகவும் இதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யதார்த்தபூர்வமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதே தற்போதைய முதன்மைத் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.