புத்தரின் அத்துமீறலைத் தடுக்குமாறு மஹிந்தவிடம் ஆனந்தன் எம்.பி கோரிக்கை!

முல்லைத்தீவு நகரப்பகுதியில் புத்தர் சிலை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக விகாரை ஒன்று அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் என்னிடம் முறையீடு செய்துள்ளனர். இதற்கென பௌத்த மதகுரு ஒருவரும் வரவழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே முல்லைத்தீவுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையக்கட்டிடத்திற்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டு அங்கு வழிபாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

தமிழ்மக்கள் பௌத்த தர்மத்திற்கோ அதன் கோட்பாடுகளுக்கோ எதிரானவர்களல்லர். பௌத்தர்கள் நிரந்தரமாக வசிக்காத ஒரு பிரதேசத்தில் அடுத்தடுத்து இரு விகாரைகளை அமைக்கும் முயற்சியானது ஆக்கிரமிப்பு நோக்கிலானது என எமது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஆகவே, இப்படிப்பட்ட அநீதியான செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.