” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக் கொள்ளுங்கள்.” எரிக் சொல்ஹெய்ம்.

இலங்கை- அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஸ்தராக 1997 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே செயற்பட்டது.பின் மத்தியஸ்தர் பணியில் இருந்து விலகிக் கொண்டது. இவற்றின் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் உறவை மீண்டும் புதுப்பிக்க நோர்வே பேரார்வம் வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நோர்வே பிரதமர் Jens Stoltenberg இற்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் ஐ.நாவின் நியூயோர்க் அலுவலகத்தில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஐ.நாவின் 65 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்ற வந்திருந்தபோதே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்கின்றமை தொடர்பாகப் பரஸ்பரம் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்தனர். நோர்வே தரப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Jonas Gahr Støre, சர்வதேச அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தரப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் கலந்து கொண்டார். இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இப்படிக் கூறினார்.

அவர் முக்கியமாக தெரிவித்துள்ளவை வருமாறு:-

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் நாம் அந்நாட்டுடன் கட்டாயம் நல்லுறவைக் கட்டி எழுப்ப வேண்டும். இலங்கையுடன் நல்லுறவைப் பேணும் நோர்வேயின் நகர்வு குறித்து இலங்கைத் தமிழர்கள் பலரின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தேன்.

அவர்கள் எமது இந்நகர்வுக்கு பேராதரவை வெளிப்படுத்தினர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்ச்சைக்குரிய ஒரு தலைவர்தான். ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். மக்களின் பேராதரவையும், அமோக வாக்குகளையும் தேர்தலில் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான மிகவும் செல்வாக்கான அரசியல் தலைவர் அவர் என்பதை மாற்றுக் கருத்துகளுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் நோர்வேயுடன் நல்லுறவை பேணுகின்றமையில் பேரார்வமாக உள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்தருடன் ஒத்துழைக்கின்றமையே அதற்கான ஒரேயொரு மார்க்கமாக உள்ளது. தமிழர்கள் எதிர்காலத்தைச் சிந்தித்து செயற்படுதல் வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுடன் இணங்கி நடக்க வேண்டும்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.