சரணடைந்து காணாமல் போயுள்ள புலித் தலைவர்களின் கதி என்ன? சர்வதேச சமூகம் பதில் தரவேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்-போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு

வன்னி இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், போராளிகள் பலர் காணாமற் போன செய்திகளால் நாம் வேதனையும் கொதிப்பும் அடைகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ள விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் கதி என்ன? சர்வதேச சமூகம் பதில் தரவேண்டும்!

வன்னி இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், போராளிகள் பலர் காணாமற் போன செய்திகளால் நாம் வேதனையும் கொதிப்பும் அடைகிறோம்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், போராளிகள் எவரும் அதன் பின் செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ, அரசு சாராத பொது நிறுவனங்களையோ, பத்திரிகையாளர்களையோ, பாராளுமன்ற உறுப்பினர்களையோ சந்திப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.

ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் சென்ற விடுதலைப்போராளிகள் மீது சித்திரவதை, பாலியல் வன்முறை, மற்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் இடம் பெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

பாலியல் வன்முறைகள் மிகுந்த சூழலில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களையும் அரசு பொய்க் குற்றங்கள் சுமத்தி மனித உரிமை நிறுவனங்கள் சந்திக்க முடியாதபடி தடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கவனிப்பு அமைப்பு போன்றவை தடுத்துவைக்கப்பட்டுள்ள 12,000 போராளிகளில் மிகவும் கொடூரமான சித்தரவதைகளுக்கு ஆளான 290 போராளிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

சர்வதேச சமூகத்தினதும் குறிப்பாக ஐ.நா சபையின் உத்தியோகத்தர்களினதும, இராஜதந்திரிகளினதும் உறுதி மொழியின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களும,; போராளிகளும் வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்றனர்.

எனவே இவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய சட்ட தார்மீக கடமைப்பாடும் ஐ.நா சபைக்கும், இராஜதந்திரிகளுக்கும் உண்டு. ஆயினும் ஐ.நா சபை இராஜதந்திரிகள், வெளிநாட்டு அரசாங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களின் நிலை குறித்து மௌனம் சாதிப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய விடயமாகும்.

1949 ஜெனிவா உடன்படிக்கை 1 மற்றும், 11 நீங்கலாக இலங்கை அரசு கைச்சாத்து இட்டிருப்பதால் விடுதலைப் புலிகள் அமைப்பையும், அந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுவோரையும் நடத்தும் விதம் குறித்து ஐ.நா வுக்கு இலங்கை அரசு விளக்கம் தரவேண்டியவர்களாவர். ஐ நா. செயலாளரின் விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்கவும் இலங்கை அரசு மறுத்து வருகின்றது.

ஜெனிவா உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகள் போர்க் கைதிகள் விடயத்தில் அவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பகுதி 3 பிரிவு 1 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைந்த படை வீரர்கள் உட்பட சண்டையில் எந்தவகையிலும் தீவிரமாக ஈடுபடாதவர்களும், சண்டையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களும், மற்றும் வருத்தம், விழுப்புண், தடுப்புக்காவல் அல்லது வேறு காரணமாகத் தீவிரமாக ஈடுபடாதவர்களும் எந்தச் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும்”.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட செயற்பாடுகள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் (அ) உயிர் அல்லது ஆளுக்குத் துன்பம் இழைத்தல் குறிப்பாக சகலவித கொலைகள், உடல்ஈனம், கொடும்நடத்தை,மற்றும் சித்திரவதைகள் தடைசெய்யப்படுகின்றன.

மற்றும் ஜெனிவா உடன்படிக்கையின் 70,71 வது விதிகள் கூறுவதாவது:

கைது செய்யப்பட்ட அல்லது முகாமில், அல்லது இடைத்தங்கல் முகாமில் இருந்தாலும் வந்தடைந்த பின்னர் ஒரு வாரத்துக்குள், அதே போல் சுகவீனம் காரணமாக அல்லது மருத்துவமனைக்கு அல்லது வேறொரு முகாமுக்கு மாற்றப்பட்டால் ஒவ்வொரு போர்க்கைதியும் தனது குடும்பத்திற்கு கடிதம் எழுத அனுமதிக்கப்படவேண்டும். இவ் விடயங்கள் எல்லாவற்றிலும் ஐ.நா மனித உரிமை விதிகளையும், ஜெனிவா உடன்படிக்கை விதிகளையும் இலங்கை அரசு மீறிவிட்டதாகவே நாம் கருதுகின்றோம்.

அண்மையில் சிறீலங்காவில் இடம் பெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்கவென மூன்று பேர் அடங்கிய ஒரு குழுவை ஐ.நா சபை நியமித்துள்ளது. இந்தக்குழு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களினதும் போராளிகளினதும் நிலை பற்றியும் அக்கறை கொள்ள வேண்டுமெனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகிறது.

முக்கியமாக வடபகுதியில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற தெரியப்படுத்திய அல்லது தெரியப்படுத்தாத முகாம்களுக்குச் செல்லவும் ஐ.நா.சபை, செஞ்சிலுவைச் சங்கம், மற்றைய அரசசார்பற்ற அமைப்புக்கள் சென்று பார்வையிடவும் அனுமதிக்க வேண்டும். இவை நடந்தேறினால் மட்டுமே கடந்த 30 ஆண்டு காலமோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியும்,அமைதியும் கிடைக்குமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகின்றது. மனித உரிமைகளை மதிக்காத இலங்கை அரசினை எதிர்த்துக் குரல் கொடுப்பது மனித நேய ஆர்வலர்களின் கடமைகளில் முக்கியமானதென்பதையும் இத் தருணத்தில் நினைவுட்டுகின்றோம்.

சாந்தி சிவசோதி
போர்க்கைதிகள் விடுதலைக்குழு ஒருங்கு கூட்டுனர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.