சரத்பொன்சேகா கைதி எண். 0/22032 வழங்கப்பட்டுள்ளது

சரத்பொன்சேகா ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு 30 மாத கடுங்காவல் தண்டனையை ராணுவ கோர்ட்டு வழங்கியது. ஜனாதிபதி ராஜபக்சே அதற்கு ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து சரத் பொன்சேகா வெலிக்கடை சிறையி்ல் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயிலில் அவருக்கு கைதி எண். 0/22032 வழங்கப்பட்டுள்ளது. தனி அறையில் சிமெண்ட் தரையில் விரிப்பு ஒன்றை விரித்து தூங்குகிறார். கைதிகளுடன் வரிசையில் நின்று தட்டை கையில் ஏந்தி சிற்றுண்டியும் மதிய உணவும் வாங்கிச் சாப்பிடுகிறார்.

ஜெயிலில் அவருக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெலிக்கடை ஜெயிலுக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக்கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்வின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த வேலை அவருக்குப் பிடிக்காவிட்டால், நோட்டீஸ் அச்சடிக்கும் வேலை தரப்படலாம்.

அவர் இந்த வேலைகளை செய்யாவிட்டால் கடுமையான வேலை ஒன்றில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈழத்தமிழர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், சாப்பாட்டுக்காக சரத்பொன்சேகா கையில் தட்டை ஏந்தி வரிசையில் நின்றபோது, தடுப்பு முகாம்களில் சாப்பாட்டுக்காக வரிசையில் ஈழத் தமிழர்களின் நிலை அவருக்கு நினைவுக்கு வந்திருக்கும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும் என்றார்.

இதே வெலிக்கடைச் சிறையில்தான் பல தமிழ்ப் போராளிகள் கண்கள் பிடுங்கப்பட்டு, குரல் வளை நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.