ஆசியாவில் புதியதொரு பனிப்போர் – சிறிலங்கா யார் பக்கம்?

அண்மைக்காலமாக, சீனாவின் இராணுவ கட்டுமானமும் அதன் அச்சுறுத்தும் பாணியிலான தோற்றமும் அனைத்துலக சமூகத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது என ’சண்டே லீடர்’ என்ற ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழில் வெளியான பத்தி  

அதன் முழுவடிவம் வருமாறு,

அண்மைக்காலமாக, சீனாவின் இராணுவ கட்டுமானமும் அதன் அச்சுறுத்தும் பாணியிலான தோற்றமும் அனைத்துலக சமூகத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியப் பிரதமர் அண்மையில் சீனாவின் பிராந்திய இலக்குகள் எதிர்க்கப்படவேண்டும் என்று கூறுமளவுக்கு சென்றுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த இந்திய ஜெனரல் ஒருவருக்கு விசா அனுமதியை மறுத்ததன் மூலம் சீனா தனது பலத்தை வெளிக்காட்டுவதற்கு முயல்கிறது.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் சீனப் படைகளின் பிரசன்னம் தொடர்பாகவும் இந்தியாவின் அண்டை நாடுகளான மியன்மார், நேபாளம் மற்றும் சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குத் தொடர்பாகவும் இந்தியா கரிசனை கொண்டுள்ளது.

சீனாவின் பலப்பரிசோதனைக்கு இடமளிப்பதன் மூலம் இன்னொரு கார்கில் யுத்தம் ஏற்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதிக்காது என நம்புவோம்.

தென்னாசியாவில் நிலைகொள்வதற்கு சீனா முயல்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அண்மைய ஆண்டுகளில் சீனா தனது இராணுவ செலவீனத்தை நான்கு மடங்காக்கி அதன் இராணுவ பலத்தை நவீனமயப்படுத்தியது மட்டுமன்றி தனது இராணுவ நடவடிக்கைகளையும் விரிவாக்கியுள்ளது.

இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்கு முயல்வதாகவும் அரபுக் கடலுக்கு நேரடியாகச் செல்வதற்கான வழியைத் தேடுவதாகவும் சீனா மீது குற்றஞ்சாட்டப்படுவதுடன் சீனாவின் பாகிஸ்தானின் உதவியுடன் கறகோரம் பிரதான வழியை அடைவதுதான் சீனாவின் நலன் என்று கூறப்படுகிறது.

எண்ணெய் வளம் மற்றும் வர்த்தகப் பாதைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் சிறிய நாடுகளில் செல்வாக்குப் பெறுவதற்காக அவற்றுக்கு பொருளாதார சலுகைகளை வாரி இறைப்பதுடன் நெருக்கமான இராஜதந்திர உறவைக் கடைப்பிடிக்கும் சிநேகக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்படையைக் கொண்டிருக்கும் சீனா கணிசமானளவு கடற்பலத்தையும் வைத்திருக்கிறது. மலாக்கா தொடுகடல் முதல் பேர்சியன் குடாவரையான பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் துறைமுகம், விமானத் தளங்கள் போன்றவற்றின் அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்துவதன் மூலமும் கேந்திர உறவை நிலைநாட்டிக் கொள்வதன்மூலமும் சீனா இந்து சமுத்திரத்தில் தனது கடற் போக்குவரத்திற்கான பாதுகாப்பை உறுதிசெய்துள்ளது.

பாகிஸ்தானில் குவார்டா துறைமுகம், பங்களாதேஸில் சிற்றகொங் துறைமுகம் மியன்மாரில் சிற்வி ஆழ்கடல் துறைமுகம் ஆகியவற்றைக் கட்டியெழுப்பியுள்ளதுடன் தற்போது ஒப்பந்ததாரர் என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் ஒன்றை நிர்மாணித்து வருவதையும் நாம் மறந்துவிடலாகாது.

இந்தத் துறைமுகங்கள் இந்தியாவின் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டுள்ள முடிச்சுக்கள் என்றே பலராலும் கருதப்படுகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலவிய வலுச் சமநிலையை சீனா மாற்றிவிட்டது என்பதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது.

சீனாவின் இந்தப் புதிய செல்வாக்கு ஏற்கனவே இருக்கும் அமெரிக்காவின் செல்வாக்கைப் பாதிக்கக்கூடும். இறுதியில், இந்து சமுத்திரத்தில் தனக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என சீனா உறுதி செய்வதற்கு முதன்மையான காரணம் தனது வளர்ச்சியை அதிகரிப்பதற்குத் தேவையான வலுப்பாதுகாப்பே என்பதை ஏற்றுக்கொள்ள நேரிடலாம்.

பொருளாதார வல்லரசாக வரவேண்டும் என்ற சீனாவின் இலக்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா (165 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவுக்குக் கிடைக்கிறது) போன்ற நாடுகளில் தனது வர்த்தகத்திற்காக சீனா தங்கியிருக்கும் நிலையும் அது ஆக்கிரமிப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் தனது நலன்களில் முன்னேறுவதற்கு நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் என நாம் நம்புவதற்கான உத்தரவாதமாக அமைகிறது.

தற்போது உண்மையில் நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம்.

இந்தியா மற்றும் அமெரிக்காவைப்போலவே யப்பானுடனான சீனாவின் உறவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிறிலங்கா எந்தப் பக்கம் சார்ந்து நிற்பது என்று தெரியாததொரு நிலையில் உள்ளது. ஆசியாவில் இந்தியா, யப்பான் மற்றும் அமெரிக்கா ஒரு பக்கமும் சீனா மறுப்பக்கமும் என புதியதொரு பனிப்போர் ஆரம்பமாகும்போல் தோன்றுகிறது.

இந்த சூழ்நிலைக்கு வெளியே இருப்பதே எமது தேசிய நலனாகும். நாம் மிகவும் இறுக்கமான அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கவேண்டிய அதேவேளையில் இந்த நாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவினை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்கு எமக்கு மிகவும் முதிர்ச்சியான இராஜதந்திரம் தேவையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், எந்தவொரு எங்களது நடவடிக்கையும் அல்லது உறவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற எண்ணம் அதற்கு ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

இந்தியாவுக்குத் தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் எந்தவொரு நாட்டுடனும் நாம் எமது உறவைப் பலப்படுத்திக்கொள்ளக்கூடாது. இந்தியாவின் அச்சங்கள் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், அதனுடன் பாதுகாப்புக் கூட்டுறவு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.

இந்தியா தன் அணிசேராக் கொள்கையை விட்டுக்கொடுக்காதவகையில் இந்த உடன்படிக்கை வடிவமைக்கப்படவேண்டும். இது வடக்கிலும் தெற்கிலும் றோ முகவர்களைக்கொண்டு துணைத் தூதரகங்களை இந்தியா அமைப்பதற்கான தேவையையும் அல்லது கிழக்கில் துணைத் தூதரகம் அமைப்பதற்கான தேவையையும் இல்லாது செய்துவிடும்.

அவசர அடிப்படையில் அரசாங்கம் எமது வெளியுறவு நிர்வாக முறைமையை மாற்றி தேசிய நலன்களைத் தக்கவைக்கவேண்டிய தேவையுள்ளது. நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிப்பதற்கு ‘புலமை’ அணுகுமுறை மட்டுமன்றி ஒன்றிணைக்கப்பட்ட நடவடிக்கையும் அவசியமாகும்.

வெளியுறவுக் கொள்கையை நிர்வகிப்பது என்பது வெளிநாடுகளுடனான எமது உறவு, சர்வதேச நிறுவனங்கள், ஏனைய சர்வதேச அமைப்புக்கள், பிராந்திய அமைப்புக்கள், வர்த்தகக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் வேறு பல விடயங்களையும் உள்ளடக்குகிறது.

இன்று, இருதரப்பு இராஜதந்திரம் என்பதைத் தவிர, இன்னொரு விசேடமான அம்சமாக பன்முகப்படுத்தப்பட்ட இராஜதந்திரத்திற்கான தேவை எழுந்துள்ளது. அதிகரித்த, பரந்துபட்ட முக்கியமான விடயங்கள் இராஜதந்திரத்தில் அந்தளவுக்குச் சென்று மிகவும் சிக்கலானதாகவும் சவால் நிறைந்ததாகவும் மாறியுள்ளது.

தொர்பாடல் தொழினுட்பத்தின் அதிகரித்த வளர்ச்சி ஒரு இராஜதந்திரியின் பணியில் மேலும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இன்னமும் 50 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைப் போலவே இருக்கும் வெளியுறவு அமைச்சே முழுமையாக மீள ஒழுங்குபடுத்தப்படவேண்டியுள்ளது.

இந்த அமைச்சானது வெளிநாடுகளுடனான அரசியல் உறவை நடைமுறைப்படுத்தும் அலகாக இருத்தல்வேண்டும். இது நிச்சயமாக எமது நண்பர்களையும் உறவினர்களையும் நிலைநிறுத்தும் ஒரு இடமல்ல.

இந்தவகையில், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பல தூதுவர்களும் தமது பணி அந்த நாடுகளில் வசிக்கும் சிறிலங்காவாசிகளைப் பார்த்துக்கொள்வது என நினைக்கிறார்கள் போல தோன்றுகிறது. அவர்களை நியமித்தவர்களுக்குக்கூட இதனைவிட எதுவும் தெரியாது.

பொருளாதார அரசியல் பலம்வாய்ந்த மேற்கு நாடுகளிலிருந்து சிறிலங்கா தனிமைப்பட்டுவிட்டது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல.

எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கு நாம் எல்லா நாடுகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். தற்போது மேற்குலகை அச்சத்துடன் நோக்கும் நாம் எதையும் சிந்திக்காமல் செய்கிறோம்.

நாம் அதிக வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் நாடுகள் இவையே. நீண்ட கால வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் நாடுகளும் இவையே. இவை யாவும் கடந்த காலத்தில் இடம்பெற்றவையே.

கடந்த காலத்தில் எமக்கு உதவிய உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடுகளும் இவையே. மேற்குலக நாடுகளை எதிர்த்து அவற்றுக்கு இணையாக வேறு நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளலாம் என நாம் நினைத்தால் அது மிகவும் முட்டாள்தனமானது.

இறுதியாக பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் காலத்தை இழுத்தடிப்பவர்களை அல்லாமல் திறமைவாய்ந்த, தகுதியுடையவர்களை நியமித்து, போதிய வளங்களுடன் அவர்களுக்குப் பணிகளை வழங்கி அவற்றைக் கண்காணித்து வெளியுறவு நிர்வாகத்தை முக்கியமாகக் கருத்திற்கொண்டு முன்னரைவிட சிறப்பாகச் செயற்படுவார் என நம்புவோம்.

எமது வெளியுறவை வினைத்திறனுடன் கையாள்வது எமது தேசியநலனுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

 மொழியாக்கம் செய்திருப்பது தி.வண்ணமதி.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.