உருத்ரகுமாரன் பாதுகாப்புத் தொடர்பில் அமெரிக்கா அக்கறை

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது பிரதம மந்திரியாக கடந்த வார இறுதியில் தெரிவு செய்யப்பட்ட உருத்ரகுமாரனின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகாலமாக அமெரிக்காவில் வசித்துவருபவரும், அமெரிக்கச் சட்டத்துறை வல்லுநருமான திரு. விஸ்வநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் ஒரு அமெரிக்க பிரஜையாவார்.

இந் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. உருத்ரகுமாரன் வெளிநாடுகளிற்கு பயணம் செய்கின்ற போது அவரிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சிக்கல்களையே அமெரிக்கா கருத்திலெடுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ சட்ட ஆலோசகராக தேசியத் தலைவர் பிரபாரகனால் நியமிக்கப்பட்டு அந்தத் பணியில் தொடர்ந்து இருந்து வரும் உருத்ரகுமாரன் அவர்கள் நோர்வேஜிய அனுசரணைப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தேசியத் தலைவரால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூன்று தசாப்தங்களிற்கு மேலாக விடுதலைக்காக தன்னலமின்றி உழைத்து வரும் திரு. உருத்ரகுமாரன் அவர்கள் முன்னைநாள் யாழ் மேயரான அமரர் விஸ்வநாதனின் மகனாவர்.

இவர் விடுதலைப்புலிகளிற்கு சார்பான பல வழக்குகளை அமெரிக்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்து வாதிட்டவர் என்பதோடு, வரலாற்றுப் பதிவுள்ள கனடிய சுரேஸ் மாணிக்கவாசகம் வழக்கிலும் ஆஜராகியவராவார்.

நாடு கடந்த தமிழீழ அரசு சர்வதேச அளவில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தின் முதற்படியாகவே அமெரிக்காவின் இந்தப் பாதுகாப்புக் கரிசனை தற்போது நோக்கப்படுகிறது.

அடுத்தகட்டப் பாய்ச்சலிற்கு தமிழர்களை இட்டுச் செல்லும் பணியை நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொள்ளும் என்றே நம்பப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.