சரணடைய வந்த நடேசன், புலித்தேவனை படையினரே சுட்டுக்கொன்றதாக பொன்சேகா கூறினார்: சண்டே லீடர் ஆசிரியை 2வது நாளாக சாட்சியம்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நடேசன், ரமேஷ் மற்றும் புலித்தேவன் ஆகிய மூவரும் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தபோது படையினரே அவர்களை சுட்டுக்கொன்றதாக பிரதிவாதியான சரத் பொன்சேகா என்னிடம் கூறினார் என்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெற்ரிக்கா ஜான்ஸ் தெரிவித்தார்.

செய்தியை மறுக்கவோ அல்லது நீக்கி கொள்ளுமாறோ பிரதிவாதி கோரவில்லை. திருத்தத்திற்கே இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அச்செய்தியை கௌரவமாக மறுக்குமாறு எம்.பி.க்களான அனுரகுமாரவும் மங்களவும் என்னிடம் கோரினர். சரத்பொன்சேகா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று மறுக்குமாறு கோரினர். அது மோசடியான திருத்தம் என்று கூறினேன். அப்போது சரத்பொன்சேகா கூட்டணி உறுப்பினர்களின் அழுத்தத்திற்கு முகம்கொடுத்தார் என்றும் அவர் கூறினார்.

பிரதி வாதியான ஜனாதிபதி வேட்பாளருக்கு எமது நிர்வாகம் ஆதரவளிக்க தீர்மானித்தது. இது அவரின் வெற்றிக்கு பெரும் பங்கமாக இருக்கும் என்பதனாலும் தேர்தல் வெற்றியையும் ஜனாதிபதியாவதையும் தடுத்துவிடும் என்பதற்காகவுமே திருத்தத்தை பிரசுரிப்பதற்கு இணக்கம் தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று இரண்டாவது நாளாக சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என். பி.பி வராவெல, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் முதலாவது சாட்சியை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நெறிப்படுத்தினார்.

இதன் போது சாட்சியமளித்த பெற்ரிக்கா ஜான்ஸ் தொடர்ந்து அளிக்கப்பட்ட சாட்சியங்களில், முக்கிய பகுதிகள்:

கே:  கேள்விகளை கேட்கும் போது எப்போதாவது நீதிமன்றத்திற்கு வருவீர்கள் என நினைத்தீர்களா?

ப: இல்லை

கே: இறுதி கேள்விக்கு பிரதிவாதி அளித்த பதில் என்ன?

ப: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து நாட்டிற்கு திரும்புவது தொடர்பில் கூறினார். மஹிந்த என்னை அழைக்கவில்லை. சவேந்திரவையே அழைத்துள்ளார். அதுவும் விமானத்திற்குள் அழைத்துள்ளார். அப்போது யுத்தம் நிறைவடைந்து விட்டதாக சவேந்திர சில்வா கூறி விட்டார். எனினும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதற்கு சில மணிநேரம் இன்னும் இருந்தது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறிய தகவலின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானத்திலிருந்து இறங்கி மண்ணை முத்தமிட்டார். அத்தருணத்திலும் பிரபாகரன் மரணித்துவிட்டதாகவே ஜனாதிபதி நினைத்திருந்தார். அதே போல கோத்தபாயவும் சவேந்திரவுடன் கதைத்துள்ளார். அதேபோல வெள்ளைக்கொடியுடன் சரணடைய வருகின்ற புலிகளுக்கு இடமளிக்கவேண்டாம். அவர்களை கொலைசெய்யுமாறு யுத்தகளத்தில் நின்ற சவேந்திரவிடம் கோத்தபாய தெரிவித்துள்ளார். மூன்று புலிகளும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொல்லப்பட்டுள்ளனர். அங்கு 58 ஆவது படையணி இருந்துள்ளது.

கே: பிரதிவாதி அவ்வாறு கூறியதாலா நீங்கள் எழுதினீர்கள்?

ப: ஆம். புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நடேசன், ரமேஸ் மற்றும் புலித்தேவன் ஆகிய மூவரும் வெள்ளைக்கொடியுடன் வரும்போது இராணுவத்தினரே அவர்களை சுட்டுக்கொன்று விட்டதாக  பிரதிவாதி என்னிடம் கூறினார்.

கே: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி கூறிய விடயங்கள் எதனையாவது மறுத்தாரா?

ப: ஆம், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 8,12 ஆம் திகதிகளில் கூறியதில் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் குடும்பத்தாருடன் வரவில்லை. அவர்கள் பலியாகி விட்டனர் என்றார். சட்டவிரோதமான பணிப்பை கோத்தபாய ராஜபக்ஷவே விட்டார் என்றும் வெள்ளைத் துணியை ஏந்தியேனும் வரவில்லை. யுத்தத்திலேயே பலியானர்கள் என்றார்.

கே: உங்கள் சாட்சியின் பிரகாரம் இராணுவத்தினரே சுட்டுள்ளனர் என்று 8, 12 ஆம் திகதிகளில் உங்களிடம் தெரிவித்துள்ளார்.

ப: துப்பாக்கியால் சுடவில்லை. யுத்தத்திலேயே மரணித்துள்ளனர் என திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

கே: திருத்தத்தை பிரசுரிப்பதற்கு ஏன் இணக்கம் தெவித்தீர்கள்?

ப: புலிகளின் தலைவர்கள் பலியெடுக்கப்பட்ட செய்தியை மறுக்கவில்லை, சரணடைய வரும்போது பலியெடுக்கப்படவில்லை என்றும் யுத்தத்திலேயே கொல்லப்பட்டனர் என்றும் பிரசுரிப்பதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என்பதால் இது அவரின் வெற்றிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் தேர்தலின் வெற்றியையும் ஜனாதிபதியாவதை தடுத்துவிடும் என்பதற்காகவுமே இணக்கத்தை பிரசுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பத்திகையின் நிர்வாகம் அவருக்கு ஆதரவளிப்பதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தது என்பதனாலாகும் என்றார்.

முதலாவது சாட்சி இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்ததை அடுத்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் 11 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.