சிங்களவர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வரும் தமிழ் விவசாயிகள்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட எல்லைப்பகுதி தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ் விவசாயிகள் தொடர்ந்தும் சிங்களவர்களால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்டப் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் சுமார் 25 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர்.

இவர்கள் வெளியேற்றப்பட்டிருந்த காலப்பகுதியில் சிங்களவர்கள் இந்த நிலங்களை ஆக்கிரமித்திருந்தனர். அண்மையில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்த தமிழ் விவசாயிகள் இருவர் சிங்களவர்களால் அடித்து விரட்டப்படடுள்ளதாக செல்வராசா தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ள போதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பட்டிப்பளை பிரதேசச் சபையின் கீழ் வரும் தமிழ் கிராம மக்களே இவ்வாறு சிங்களவர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்தாண்டு பெரும்போக அறுவடையின் போது சிங்களவர்கள் தமிழ் விவசாயிகளின் காணிகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து பயிர்களின் அறுவடையை பறித்து எடுத்துச் சென்றுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலும் இதுபற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது.

அடாவடித்தனம் புரியும் சிங்களவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் சிங்களவர்களின் அடாவடித்தனம் நீடித்துவருகின்றது என்று செல்வராசா மேலும் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.