என் இதயம் மிகவும் வலிக்கின்றது….. ஜெயானந்தமூர்த்தி அண்ணா!!!

என் அன்புக்குரிய திரு. ஜெயானந்தமூர்த்தி அண்ணன்  அவர்களுக்கு   உங்கள் சகோதரன், ஜெயசங்கர் முருகையா (நா.க.த.அ. உறுப்பினர், பிரித்தானியா) ஆகிய நான் உங்களிடம் தனிப்பட்ட வகையில் விடுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் இது.

அண்ணா, சென்ற வாரம், நியூ யோர்க்கில் நடைபெற்ற நா.க.த.அ.இன் இரண்டாவது அமர்வைப் பற்றி  நீங்களும், உங்களைச் சார்ந்தோரும்   விட்டிருக்கும் மிகவும் அவதூறான  அறிக்கைகளைப் படித்து, மிகவும் மனவேதனையுடன் இத்திறந்த மடலினை நான் உங்களுக்கு வரைகின்றேன். 

நா.க.த.அ. ஆனது சர்வாதிகாரப் போக்கில் போகின்றது என்றும்,  நா.க.த.அ. ஆனது சில பிழையான சக்திகளின் பின்னணியுடன் உருவாகி இருப்பதாகவும்,  KP எனப்படும் குமரன் பத்மநாதனின்  செயற்திட்டங்களுடன்   நா.க.த.அ. ஆனது இயங்குகின்றது என்றும்,   நா.க.த.அ. இன் யாப்பு ஒரு கிராம அபிவிருத்தி சங்கத்தின் யாப்பைப் போன்று கூட இல்லை என்றும், உங்களையும் உங்களைச்  சார்ந்தோரையும் விட, மற்றைய  நா.க.த.அ. இன் உறுப்பினர்கள் (நானும் உட்பட)  எல்லோருமே துரோகிகள் என்றும், பதவிகளுக்கு  ஆசைப்பட்டவர்கள்  என்றும்,  மேலும்  அதன் முதன்மை நிறைவேற்றுனராகிய திரு. உருத்திர குமாரன் அவர்கள் மீது பல வீண்பழிகளையும் நீங்கள் சுமத்தி இருந்தீர்கள்.   

நா.க.த.அ. இன் யாப்பினை எழுதியவர்களுள் நானும் ஒருவன் என்ற வகையிலும், நா.க.த.அ. இன் இரண்டாவது அமர்வில் நேரில்  கலந்து  கொண்டு அங்கு நடைபெற்ற அனைத்தையும் நேரில் பார்த்தவன் என்ற வகையிலும், நா.க.த.அ. ஆனது அதன் லட்சியத்தினை நோக்கிய  ஜனநாயக பாதையில் செல்வதற்கு முன்னின்று உழைப்பவர்களுள் நானும் ஒருவன் என்ற வகையிலும்,  மேலும் எமது தேசத்தின் விடுதலையை நோக்கிய   வரலாற்றுப்    பார்வையுடனான      சரியான பாதையினை எமது  மக்களுக்குக்   காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒரு தன்மானமுள்ள ஈழத்தமிழ்க் குடிமகனாக எனக்கும் உண்டு என்று நான் கருதுவதனாலும்  உங்களுக்கு இந்த அன்பு மடலினை வரைவதற்கு  நான் தீர்மானித்தேன். இவை ஒரு சகோதரனாக நான் உங்களுக்குக் கூறப் போகும் எனது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே அண்ணா… 

ஜெயானந்தமூர்த்தி அண்ணா…..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆனது (அதன் முதன்மை நிறைவேற்றுனரும்) துரதிஷ்டவசமாக, நீங்கள் கூறியது போன்று, தமது பாதையிலிருந்து தவறி, ஒரு சர்வாதிகாரப் போக்கில் போகுமானால், அதனை முதன் முதலில் எதிர்ப்பவனாகவும் , நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து விலகிச்  செல்பவர்களில்  முதன்மையானவனாகவும் நான்தான் இருப்பேன் என்று நான் உங்களுக்கு உண்மையுடனும்,  உறுதியுடனும்,   பகிரங்கமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 

“வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கிய வண்ணம் பாரத மண்ணின் விடுதலைக்காய் பல்லாண்டு  காலமாக உழைத்த  இந்திய காங்கிரசும் ஒரு “வெள்ளையனின்” முயற்சியினால்தான்  முதன் முதலில்  உருவாக்கம்  பெற்றது. ஒரு வெள்ளை இனத்தவனால் உருவாக்கப்பட்டது என்பதற்காக, இந்திய மக்கள் காங்கிரஸ் இயக்கத்தினை ஏற்றுக் கொள்ளவில்லையா, என்ன? ஏன், நீங்கள் கூட முழுத் தமிழினத்தின்   துரோகியான “கருணா”வினால்தான் எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தப் பட்டீர்கள். இதற்காக, எங்கள் மக்கள் உங்களை எங்கள் ஈழத்தமிழினத்தின் “துரோகி” என்று முத்திரை குத்தி உங்களை ஒதுக்கி வைத்து விட்டார்களா அல்லது, உங்களை சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கின்றார்களா, என்ன?? நா.க.த.அ. ஆனது முதன் முதலில் KP இனால் அறிமுகப் படுத்தப்படுத்தப் பட்டது என்ற ஒரே ஒரு காரணத்திற்க்காக மட்டுமே,  நீங்களும், உங்களைச் சார்ந்தோரும் நா.க.த.அ. இனை ஏன் சந்தேகக் கண்களுடன்  பார்க்கின்றீர்கள்???  தீமைகளிலிருந்து நன்மைகள் பிறப்பதில்லையா? அல்லது, நன்மைகளிலிருந்துதான் தீமைகள் பிறப்பது இல்லையா? சிந்தியுங்கள் அண்ணா…

எமது விடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டம் தொடர்ந்தும் வேண்டுமா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியவர்கள்,  புலம் பெயர்ந்து எமது சொந்தம் பந்தங்களுடன் பாதுகாப்பாக, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நானோ அல்லது நீங்களோ இல்லவே இல்லை. மாறாக, அதனைத் தீர்மானிக்க வேண்டியவர்களும், அதற்க்கான முழுத் தகுதி உடையவர்களும், இருந்தவை  அனைத்தையும்   பறிகொடுத்தது  மட்டுமல்லாமல்,   இன்றும் எத்தனையோ இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் மத்தியில் இன்னமும் புலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தாயக உறவுகள் மட்டும்தான். இங்கிருந்து கொண்டு, ஆயுதப் போராட்டம்தான் வேண்டும் என்று  நாம் இன்னமும் தொடர்ந்து கூறுவோம் ஆனால், நானும் நீங்களும் எங்கள் பிள்ளைகளை, எங்கள் சகோதர, சகோதரிகளை  கரும்புலிகளாக  முதலில் போராட்டக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.   அண்ணா….. தயவு செய்து, ஏற்க்கனவே நொந்து, வெந்து போய் இருக்கும் எமது உறவுகளின் உயிர்களுடனும், உணர்வுகளுடனும் இங்கிருந்து கொண்டு நீங்கள் இனியும் விளையாட மாட்டீர்கள் என்று நான் நம்புகின்றேன். 

ஒரு சில அமைப்புக்களின் சுயநலம் நிறைந்த, அதிகார வலைக்குள் சிக்கி விடாமல், நா.க.த.அ. இனை சுதந்திரமான, ஜனநாயகமான, தனி மனித உரிமைகளை மதிக்கின்ற ஒரு மக்கள் அரசாங்கமாக கட்டி எழுப்புவதில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய யாப்பின் மூலம், கடந்த வாரம் நியூயோர்க்கில் வைத்து, நாம் ஒரு வரலாறு காணாத மாபெரும் வெற்றியினை ஈட்டியுள்ளோம். இங்கே அனைவரும் சமம். இங்கே எங்கள் மக்களுக்குத் தெரியாத அல்லது தெரியக் கூடாத என்கின்ற    இரகசியங்கள் என்று ஒன்றுமே இல்லை. இங்கே ஊழல்கள் கிடையாது. கடந்த வருடம்  முள்ளிவாய்க்காலில்  நடந்து  முடிந்த கொடுமையான  சம்பவங்களுக்குப்  பின்னரான இன்றைய கால கட்டத்தில்,  “தேசியம், இறைமை, தாயகம், கொள்கை” என்ற பெயரினில், புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களின் பணத்தை மட்டுமே குறி வைத்துக் கொண்டு, அதிகாரத்திற்க்காக அலையும், பணத்திற்காக எதனையும் செய்யத் துணிந்திட்ட,   ஒரு சில அமைப்புக்களின் கொடிய பிடியிலிருந்து எமது மக்களை விடுதலை செய்வது மட்டுமல்லாமல், எமது மக்களை மீண்டும்  சுதந்திரமானவர்களாக ஆக்குவதோடு, இந்த அமைப்புக்களிடம் எமது மக்கள் பல காலமாக தொலைத்து  விட்டிருந்த அதிகாரத்தினை பறித்தெடுத்து, அதனை மீண்டும் எமது மக்களிடமே  திரும்பவும்  ஒப்படைப்பதற்க்காகவும்தான்    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகும். 

“தேசியம்” என்ற  பெயரினில்,  தேசியத் தலைவரின்  கொள்கைகளுக்கே எதிராகவும், எங்கள்  தேசத்தின்   விடுதலைப்  போராட்டத்திற்கு விரோதமாகவும்,  எங்கள் மாவீரர்களின் தியாகங்களுக்கு களங்கம் ஏற்ப்படும் வகையிலும், செயற்பட்டுக்  கொண்டிருக்கும்   இப்படிப்பட்ட சுயநலம்  நிறைந்த  அமைப்புக்களின் அதிகாரப்பசிக்கு, உங்களைப்  போன்றோரும், அறிந்தோ அல்லது  அறியாமலோ, பலி போனதும்  மிகவும்  துரதிஷ்டமே.  அது மட்டுமல்ல,  முன்னைய  காலங்களில், எங்கள் தேசத்தின்  விடுதலைக்காக   இவ்வாறான  அமைப்புக்களின்  ஊடாக   உண்மையாகவும்,  நேர்மையாகவும்,  தியாக  சிந்தனைகளுடன்,  மிகவும்  கஷ்டப்பட்டு  உழைத்தவர்களில்  பலர் இன்று மௌனிக்கப்பட்டுள்ளதும், இவர்கள் இன்று அநீதியான  முறையில், அநியாயமாக   களங்கத்திற்கு உள்ளாகியிருப்பதும் மிகவும் துர்ப்பாக்கியமானதும், மிகவும் வேதனைப்பட வேண்டியதும் ஒன்றாகும். இப்புனிதர்களின் தியாகத்திற்கு நாம் மட்டுமல்ல,  ஒட்டு  மொத்த  ஈழத்தமிழ் இனமுமே ஈரேழு ஜென்மத்திற்க்கு இவர்களிடம் கடைமைப்பட்டுள்ளது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆனது, தமிழீழத்தின் விடுதலைக்காக  நேர்மையுடன்  உழைக்கும்  மற்றைய அனைத்து தமிழ் அமைப்புக்களுடனும் தோளோடு தோள் நின்று, எங்கள் தேசத்தின்  விடுதலையை நோக்கி  உழைப்பதற்கு உறுதி பூண்டுள்ளது.  ஆனால், சுயநலமிக்கதும், குறுகிய உள்நோக்கங்களும், தீயசிந்தனைகளும்   கொண்ட எந்தவொரு அமைப்பினதும் அதிகார வலைக்குள் தன்னை சிக்க வைத்துக் கொள்ளாமல், அது தன்னை ஒரு முழுச் சுதந்திரம் உள்ள எங்கள் மக்களின் அரசாங்கமாக இயங்கிக் கொள்ள விரும்புகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆனது, என்றும் உண்மைக்கும், நேர்மைக்கும், சத்தியத்திற்கும் தலை வணங்கும். அதே சமயம் ஆணவத்திற்கும், அதிகாரத்திற்கும், சுயநலத்திற்கும் அது என்றுமே தகுந்த பதிலடி கொடுக்கும். 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆனது,  புலத்தில் பல கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கும் எமது உறவுகளின் விடியலையும், எமது தமிழீழ தேசத்தின் விடுதலையையும்  இராஜ  தந்திர  ரீதியில்  போரிட்டு, சர்வதேச  சமூகத்தினரின்  அங்கீகாரத்துடன்  வென்றெடுப்பதற்காக,  புலம் பெயர்ந்து வாழும் மிகச் சாதாரண ஈழத்தமிழ் மக்களான எங்களினால் கட்டி எழுப்பப்பட்டுள்ள எங்கள் மக்களின் அரசாங்கம் ஆகும். எங்கள் மக்களுக்காக, எங்கள் மக்களினால் கட்டி எழுப்பப்பட்டுள்ள, எங்கள் மக்களின் அரசாங்கமே எங்களின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகும். நீங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினைக் களங்கப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, எங்கள் அரசாங்கத்தின் வேர்களான எங்கள் மக்களையே  நீங்களும்,  உங்களைச்  சார்ந்தோரும்   களங்கப் படுத்துகின்ற உங்கள் அனைவரினதும் அறியாமையை நினைந்து நினைந்து உங்கள் சகோதரனாகிய நான் மிகவும் வேதனைப்பட்டு உள்ளேன் அண்ணா…

விலை மதிக்க முடியாத எத்தனையோ மனித உயிர்களை நாம் இதுவரையில் பலி கொடுத்து விட்டோம். எத்தனையோ எமது சகோதர, சகோதரிகள் தங்களது உடல்களை எங்கள் கண்களின் முன்னேயே வெடித்துச் சிதறுவதனை நாம் வேதனையுடன்  பார்த்துப் பார்த்து  எங்கள் மனங்கள் வெதும்பி, நாம் எமது இதயங்களுக்குள்ளேயே  இரத்தக் கண்ணீர் வடித்த காலங்களும் உண்டு.  பல்லாயிரக்கணக்கான எமது சகோதரிகள் வாழ்விழந்து விதவைகளாக நம் கண்கள் முன்னே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகள் தமது அவையங்களை இழந்து முடமாகியுள்ளனர்.  எங்கள் தமிழ்ச் சகோதரிகளின் மானம்  சிங்களக்  காடையரின் கைகளிலே களங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  எமது விடுதலைப் போராளிகள் பலர் இன்றும் கூட சிங்களத்தின் கொடுஞ்சிறைகளினுள்ளே  வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். எமது தாயகம் முழுவதும் அந்நியரின் காலடிகளின் கீழ் சிங்களமயம் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த சமயத்திலும் கூட, நாம் சகோதர யுத்தம் செய்து கொண்டிருத்தல் நியாயம் ஆகுமா? வரலாறுதான் எங்களை மன்னிக்குமா?? உண்மையிலேயே, எமது தேசத்தின் விடுதலையையும், எமது மாவீரர்களின் ஆத்மாக்களையும் நீங்கள் உங்கள் நெஞ்சங்களிலே சுமந்தவர்களாக இருந்தால், தயவு செய்து வாருங்கள் அண்ணா, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கீழ் நாம் சகோதரர்கள் அனைவரும் ஒன்று பட்டு, ஒற்றுமையுடன் எங்கள் ஈழத்தமிழ்த்தாயின் அடிமை விலங்கினை உடைத்தெறியப் புறப்படுவோம்.  

தயவு செய்து, எங்களுடன் ஒன்று சேர்ந்து நீங்களும் போராட வாருங்கள் இல்லையேல், எங்களையாவது எங்கள் வழியில் போராட விடுங்கள். தயவு செய்து, எங்களுடன் சேர்ந்து நீங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு வாருங்கள். இல்லையேல்,  தயவு செய்து எங்களையாவது நீங்கள் ஒற்றுமையுடன் வாழ விடுங்கள். நாளைய வரலாறு உண்மையை மக்களுக்குக் கூறட்டும். எங்கள் மக்கள் நாளை தீர்மானிக்கட்டும் நம்மிருவரில் யார் சரி, யார் பிழை என்பதனை. தயவு செய்து எங்கள் மக்களின்  மேல்  நம்பிக்கை வைத்து, எங்கள் மக்கள் நாளை வழங்கப் போகும் தீர்ப்புக்கு மதிப்பளித்து, இன்று எங்களுடன் சேர்ந்து ஒற்றுமையுடன் போராட நீங்கள் வாருங்கள். தயவு செய்து எதிரியானவன்  எங்களைப் பார்த்து  ஏளனமாக  சிரிக்க  வைத்து விடாதீர்கள். தயவு செய்து  ஏற்க்கனவே  அடிமைப்பட்டு,   அவமானத்தில்  கூனிக்  குறுகிப்  போய் இருக்கும்   எங்கள்  ஈழத்தமிழ்த்தாயை  மேலும் அவள் கண்கள் கலங்க வைக்காதீர்கள். எம்மைப் பெற்றதற்காக அவளைப் பெருமைப்பட வைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் கூட நம்மிருவருக்கும் இருக்கின்றது என்பதனை தயவு செய்து நீங்கள் ஒரு கணமேனும் மறந்து விடாதீர்கள்… அண்ணா…

முள்ளிவாய்க்காலில் எங்கள் மக்களுக்கு நடந்தேறிய கொடுமைகளுக்குப் பின்னர், திக்கற்று, திசையற்று, செய்வதறியாது, அநாதரவாக  நின்ற எங்கள் ஈழத்தமிழினத்திற்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூலமாக, ஜனநாயக வழிமுறையில் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு, வழி காட்டியவரைத்தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை நிறைவேற்றுனராக நாம் பெரும்பான்மை வாக்குகளுடன் இன்று பெருமையுடன் தேர்ந்தெடுத்துள்ளோம். அப்படிப்பட்டவர்  மீதா ஆதாரம் எதுவுமே இன்றி, நாம் வீணாகப் பழி  சுமத்துவது? யார் மீது யார் பழி கூறுவது?? சொல்லுங்கள் அண்ணா…..எப்போது அண்ணா ஈழத்தமிழன் நன்றி மறந்தவன் ஆனான்??? அப்படிப்பட்ட  மதிக்கப்பட வேண்டியவருக்கு இணையாக அல்லது அவருக்கு எதிராக நீங்கள் பதவிக்காகப் போட்டியிடுவது தகுமா…? அது முறை ஆகுமா…?? இல்லை, அதுதான் நீதி ஆகுமா… அண்ணா…???

அண்ணா….. இறுதியாக ஒன்று… நானும் மாவீரர் குடும்பம் ஒன்றிலிருந்து வந்தவர்களுள் ஒருவன். அத்துடன், எமது தேசத்தின் விடுதலைக்காக, தலைவரின்  வழிநடத்தலின்  கீழ், ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுள் நானும் ஒருவன். எங்கள் தேசத்தின்    விடுதலைக்கான போரின் போது எனது இரத்தமும் கூட அங்கே எங்கள் தாய் மண்ணின் மீது சிந்தப்பட்டு இருக்கின்றது. தயவு செய்து உங்கள் மனச்சாட்சியைத்  தொட்டு நீங்கள் கூறுங்கள், நான் கூட உங்கள் கண்களில் துராகிதானா? என் போன்றோரையும்  துரோகிதான்  என்று  நீங்களும், உங்களைச் சார்ந்தோரும் உங்கள் மனச்சாட்சிகளுக்கு விரோதமாகக் கூறும் பட்சத்தில்,   உங்களையும் நீங்கள் சார்ந்தோரையும் தவிர, நா.க.த.அ. இன் மற்றைய உறுப்பினர்கள் அனைவருமே துரோகிகள்தாம், என்று நான் பகிரங்கமாக இங்கே ஒத்துக் கொள்ள  முன்வருகின்றேன். “நீ வேறு ஒருவனை குற்றமுள்ளவன் என்று உனது சுட்டு விரலினால் சுட்டிக் காட்டும் போது, உனது மீதி நான்கு விரல்களும் நீயே குற்றமுள்ளவன் என்று உலகத்திற்கு சுட்டிக் காட்டுகின்றன” என்று இயேசு மகான் கூறி இருக்கின்றார். இதன் அர்த்தம் உங்களுக்கும்  மிக நன்றாகப்   புரியும்  என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.  தயவு செய்து, இனிமேலாவது உங்களுடன் கருத்துக்களில் வேறுபடுபவர்களை   துரோகிகள் என்று நீங்கள் உங்களின் சுட்டு விரலினால் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக சுட்டிக் காட்டுவதனை நிறுத்துங்கள் என்று உங்களிடம் நான் உரிமையுடன் அன்பு வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றேன்… அண்ணா…

உங்கள் மனதினை நான் ஏதேனும் வகையினில் புண்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை நீங்கள் மன்னியுங்கள். நான் உங்களுக்கு இந்த அன்பு மடலினை எழுதுவதற்கு முடிவெடுத்தேன் ஏனெனில், என் இதயம் மிகவும் வலிக்கின்றது…அண்ணா…

உங்களினதும், நீங்கள் சார்ந்தோரினதும் மனமாற்றத்தை உளமார விரும்பும்… 

உங்கள் அன்புச் சகோதரன்,
ஜெயசங்கர் முருகையா.

நன்றி

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.