பிடித்துச் சென்ற தம்பி எங்கே என்று கேட்டமைக்கு சி.ஐ.டியினர் செருப்பால் அடித்தனர்! ஆணைக்குழு முன் அக்கா சாட்சியம்

காணாமல் போன உறவுகளை மீட்டுத் தர வேண்டும் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக நேற்று திங்கட்கிழமை மட்டு. மாவட்ட மக்கள் ஏராளமானோர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆணைக்குழு கடந்த மூன்று நாட்களாக அமர்வுகளை நடத்தியது. சனிக்கிழமை முதல் நேற்று திங்கட்கிழமை வரை ஆணைக்குழு மட்டக்களப்பில் பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்தது.

சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்த ஆணைக்குழு பின்னர் வவுணதீவு பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்டது.

அன்று இரவு காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தினரை சந்தித்து உரையாடியது. ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்தது.

நேற்று ஏறாவூர்பற்று, செங்கலடி ஆகிய பிரதேச செயலகங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்தது. காணாமல் போன, கடத்தப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி இங்கு நேற்று சுமார் 700 மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

சுமார் 35 பேர் வரை சாட்சியமளித்தனர். அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பெரும்பாலானவை கடத்தப்பட்ட,காணாமல் போன சம்பவங்கள் சம்பந்தப்பட்டனவாகக் காணப்பட்டன. செங்கலடிப் பிரதேச செயலகத்தில் வைத்துச் சாட்சியமளிக்க வந்தவர்களில் 90 சதவீதமானவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

இவர்கள் ஒன்றில் கணவன்மாரையோ அல்லது பிள்ளைகளையோ இழந்தவர்களாகக் காணப்பட்டனர்.

தவராசா சந்திராவதி (எல்லை வீதி, ஏறாவூர்) எனபவர் அவரது சாட்சியத்தில் தெரிவித்தவை வருமாறு:

“எனது மகன் கலைச் செந்தூரன் (14 வயது) நண்பர்கள் இருவருடன் ஏறாவூரிலுள்ள சாப்பாட்டுக்கடை ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்பொது மகனையும், நண்பர்களையும் இனம் தெரியாதவர்கள் பிடித்துச் சென்று விட்டனர்.

இச்சம்பவம் 2009.11.25 ஆம் திகதி இடம்பெற்றது. எந்த அமைப்புடனும் எனது மகனுக்கு தொடர்பு இல்லை. இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்தேன். பொலிஸாரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. எனது மகனை மீட்டுத் தாருங்கள்.”

சுந்தரம் பரமேஸ்வரி (பெரிய கொலனி -பங்குடாவெளி) என்பவர் சாட்சியத்தில் தெரிவித்தவை வருமாறு:-

“எனது தம்பி சின்னத்தம்பி என அழைக்கப்படும் சுந்தரம் நகுலேஸ்வரன் என்பவரை 2007.12.25 ஆம் திகதி கறுத்தப்பாலத்தில் நிற்கும் சி.ஐ.டி.யினர் நால்வர் மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோவில் ஜக்கட் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து பிடித்துச் சென்றனர். ஆனால் பிடிக்கவே இல்லை என்று பின்னர் கூறி விட்டனர்.

செங்கலடி கறுத்தப்பாலத்தில் வழமையாக நிற்பவர்கள் ஒருநாள் என்னுடன் தம்பி வந்தபோது விசாரித்தார்கள். அவர்களில் இருவரை நன்றாக தெரியும்.

அவர்களது பெயர்களும் தெரியும்.(பெயர்களைச் சொன்னார்) பின்னர் அவர்களுடன் இன்னும் இருவர் வீட்டுக்கு வந்து தம்பியைப் பிடித்துச் சென்றனர்.

நான் தம்பி எங்கே ? என்று இருவரிடமும் போய்க் கேட்டேன். எனக்கு செருப்பைக் கழற்றி அடித்தார்கள். இப்போது இருவரில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர் எங்கு என்று தெரியாது. கூட வந்த ஏனைய இருவரையும் அறிந்திருக்கவில்லை.

கடத்தப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று கடந்த வருடம் பத்திரிகைகளில் பிரசுரமானது. எனது தம்பியின் பெயரும் அதில் இருந்தது.

மகசின் சிறைச்சாலையில் இருக்கின்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அங்கு போனோம். அங்கு தம்பி இல்லை. எனது தம்பியை கண்டு பிடித்துத் தாருங்கள் .”

சுப்பிரமணியம் மாரிமுத்து (வந்தாறுமூலை) என்பவரின் சாட்சியம் வருமாறு:-

எனது மகன் இரத்தினகாமணி புண்ணியமூர்த்தி விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுபட்டபோது இயக்கத்தை விட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்.

அவரது இயக்கப் பெயர் சுடர்ஒளி. அவரை புலிகள் அமைப்பின் ஒரு குழுவினர் அவர்களுடன் இணைய வேண்டும் என்று பல தடவைகள் வற்புறுத்தி வந்தனர்..நாங்கள் மறுத்து விட்டோம். 2007.07.17 ஆம் திகதி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கிரானில் அலுவலகம் அமைத்து இருந்த குழு உறுப்பினர் பிடித்துச் சென்றார்.

( பிடித்துச் சென்றவரின் பெயரை குறிப்பிட்டார்) அவரை விசாரித்து பிள்ளையை மீட்டுத் தர வேண்டும்.”

கந்தக்குட்டி நவரட்ணராசா (மகிழவெட்டுவான் ஆயித்திய மலை) என்பவர் சாட்சியத்தில் தெரிவித்தவை வருமாறு:

“எனது அண்ணன் கந்தக்குட்டி குழந்தை வடிவேலு 1993.03.25 ஆம் திகதி வேளாண்மை வெட்டி, நெல் ஏற்றி டிரக்டரில் வந்தபோது செங்கலடி கறுத்தப்பாலத்தில் வைத்து இராணுவத்தால் கீழே இறக்கப்பட்டார்.

ஆனால் அவரைப் பிடிக்கவில்லை என்று இராணுவத்தினர் கூறி விட்டனர். ஆனால் இராணுவம்தான் அண்ணனை கீழே இறக்கி அழைத்துச் சென்றது என அண்ணனோடு டிரக்டரில் அன்று கூட வந்திருந்த சாரதி கூறினார். அண்ணாவை கண்டு பிடித்துத் தாருங்கள் .”

மாணிக்கம் சரஸ்வதி (யூனியன் வீதி கிரான்) என்பவர் சாட்சியத்தில் தெரிவித்தவை வருமாறு:-

“எனது குடும்பத்தில் இருந்து கணவன் மகன், மகள், மருமகன் ஆகிய நான்கு பேரை யுத்தத்தில் இழந்து விட்டேன். மருமகனை கிண்ணையடியில் வைத்து சுட்டுவிட்டனர். எனது கணவன் கோபாலப்பிள்ளை 1985 ஆம் ஆண்டு காணாமல் போனார்.

மகன் வசந்தகுமார் (19 வயது) 1998ஆம் ஆண்டு இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டார். எனது மருமகன் விநாயகம் கமலதாஸன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற குழு ஒன்றால் (குழுவின் பெயரைக் குறிப்பிட்டார்)2006.04.28 ஆம் திகதி கிண்ணையடியில் வைத்து சுடப்பட்டார்.

2007 மார்ச் 7 ஆம் திகதி எனது மகள் கோபாலப்பிள்ளை பாக்கியலெட்சுமி கொழும்பிலிருந்து கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொண்டு வீடு வந்து இறங்கியமையை அடுத்து அதே குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்டார்.இதுவரை எந்த தகவலும் இல்லை.

எனவே எனது கணவன், மகன், மகள் ஆகியோரை மீட்டுத் தர வேண்டும் என்று கோருகின்றேன்.”

உதயகுமார் கிருஷ்ணகுமாரி (சந்திவெளி) என்பவரின் சாட்சியம் வருமாறு:

“ஒரு நாளைக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என 2009.05.17 ஆம் திகதி வன்னியில் வைத்து இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய நாங்கள் வன்னியை விட்டுப். புறப்பட்டோம்.

எனது கணவனை வழியில் பிடித்தனர். எங்களை பஸ் மூலம் அனுப்பி வைத்தார்கள். எனது கணவன் பூசா முகாமில் இருக்கின்றார் எனத் தெரிவித்தார்கள். அங்கு சென்று பார்த்தேன்.

அங்கு எனது கணவன் இல்லை. எனது கணவனை கண்டு பிடித்துத் தாருங்கள் .”

நாகராசா மஞ்சுளாதேவி எனபவரது சாட்சியம் வருமாறு:-

“எனது கணவன் அமிர்தலிங்கம் உதயகுமாரை (23 வயது) கடந்த 2005/05/04 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வீட்டில் வைத்து கூட்டிச்சென்றார்கள். வந்தவர்கள் சிங்களம் கதைத்திருந்தனர். பொலிஸ் எனத் தெரிவித்திருந்தார்கள்.

கொண்டுபோகும்போது கையைக் கட்டியே ஏற்றிச் சென்றார்கள். ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் போய் கேட்டேன். பிடிக்கவே இல்லை என்று கூறி விட்டனர். எனது கணவனை கொண்டு செல்லும்போது எனது இரண்டாவது பிள்ளை பிறந்து 11 நாள்.

தற்போது நான் எனது பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். கணவனை மீட்டுத் தாருங்கள்.”

எச்.எம். முபின் (207 முனையாளடி வீதி ஏறாவூர்-6) என்பவரின் சாட்சியம் வருமாறு:-

“எனது தந்தை எ. கஜாத்து முகமது (63) வாகன உதிரிப்பாகம் விற்பனை செய்பவர். 2007.11.12 ஆம் திகதி ஏறாவூரில் இருந்து கறுவாக்கேணி சென்றபோது காலை 6.30 மணிக்கு தமிழ் குழு ஒன்றால் கடத்தப்பட்டார். (குழுவின் பெயரைக் குறிப்பிட்டார்) இக்கடத்தலை கிரானில் உள்ள அப்பாவின் நண்பர்கள் எமக்குத் தெரியப்படுத்தினர்.

கிரான் சந்தியில் வைத்து கடத்தப்படும்போது 100 மீற்றரில் இராணுவத்தினர் நின்றிருக்கின்றனர். குறிப்பிட்ட குழுவினர் எம்மிடம் வந்து அப்பாவை தீவுச்சேனையில் வைத்து இருக்கின்றனர் என்று பின்னர் தெரிவித்தனர்.

அப்பாவின் கடவுச்சீட்டை பெற்றுச் சென்றனர். வந்தவரைத் தெரியும் (பெயரை குறிப்பிட்டார்) அந்நபர் ஏறாவூர் பிரதேச சபையில் போட்டியிட்டவர். அந்நபர் அப்பாவை மீட்டுத் தருவார் என்று கூறி இருந்தார்.

மீட்டுத் தந்தால் தேர்தலுக்குரிய செலவை தருவோம் என்று தெரிவித்து இருந்தோம். ஆனால், அப்பாவை மீட்கவே முடியவில்லை. ஏறாவூர் பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.அப்பாவை மீட்கவே முடியவில்லை.

மரணச் சான்றிதழையாவது பெற முடியாமல் உள்ளது. மரணப் பதிவு கட்டாயம் வேண்டும். பெற ஏற்பாடு செய்யுங்கள்.” முடியுமானவரை நல்ல பதிலை தர முயற்சிப்பதாக ஆணைக்குழு தெரிவித்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.