நாடு கடந்த தமிழீழ அரசு படும் பாடு கண்டு பாராட்டுவதா? பரிதாபப் படுவதா?

புலத்தில் நடக்கும் பதவிப் போட்டியில் நாம் அடித்துக் கொள்ள இலங்கை இந்திய அரசுகளின் சதியும் ஒருசேர தமிழரின் நூறாண்டு கண்டு விட்ட தமிழீழத் தாயகக் கனவு முற்றாகவே கனவாகி விடுமோ என்ற பயம் பற்றிக் கொள்கிறது.  காரணம் ஈழத் தமிழினம் தனது தேசியம் சார்ந்த விடுதலைக்கான குரலை எழுப்பிய வேளை, எம கண்டமோ அல்லது ராகுகால நேரமாய் இருக்கலாமோ என்ற ஐயப்பாடு எனக்கு எழுகிறது.

1905ல் பிரித்தானிய ஆளுநர் யாழ்ப்பாண மற்றும் மட்டக்களப்பு தலைவர்களுடன் நடத்திய அரச தர்பார் எனப்படும் கூட்டத்தில் தமக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும் எனவும் வன்னிய் பிரதேசம் சுகாதாரக் கேடு நிறைந்த காரணத்தால் தாம் அங்கு குடியேற மறுப்பதாகவும் அதே வேளையில் அங்கே சிங்களவரோ அல்லது இந்தியரோ குடியமர்த்தப் படுவதைத் தாம் விரும்ப வில்லை எனவும் அவர்கள் கூறியதாக வரலாற்றுப் பதிவு உள்ளது. பின்னர் 1912 லும் 1924லும் யாழ்ப்பாண வாலிபர் சங்கம் அன்று தமிழரின் ஒரே அரசியல் தலைமையாக விளங்கிய நிலையில் தமிழரின் தன்னாட்சிக் கோரிக்கை வலுப் பெற்றது.

அன்றைய இந்திய விடுதலையை முன்னெடுத்து நடாத்திய மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், பால கங்காதரதிலகர் போன்றோர் யாழ்ப்பாணம் வந்து தமிழீழ விடுதலைக் குரலுக்கு வலுச்சேர்த்த பொழுது ஈழத் தமிழருக்கு தேசியமோ தேசமோ தன்னாட்சி உரிமையோ கிடையாது எனக் கூற அன்றைய பிரித்தானிய ஆட்சியாளருக்குக் கூட துணிச்சல் இருக்கவில்லை.

பிறப்பால் இந்தியன் அல்லாத பிரோஸ் கான் நேருவின் மகள் இந்திரா பிரிய தர்சினியை காதலித்த காரணத்தால் காந்தி வழங்கிய தமது பேரால் பெரோஸ் காந்தியாக மாறிய பெரோஸ்கானின் வழியில் வந்த ராஜீவும் அவரை மணந்ததால் இத்தாலிக் குடிமகள் சோணியாவும் காந்தியின் பெயரையும் காங்கிரஸ் கட்சியையும் தமதாக்கிக் கொண்டதால் இன்று சிங்களத்துடன் சேர்ந்து ஈழத் தமிழனுக்கு தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை கிடையாது எனக் கூரை மேல் ஏறிக் கூச்சல் போட்டால் நாம் ஏற்க வேண்டுமா?

ஆனால் அவர்களின் வாக்கையே தமக்கான வேத வாக்காகக் கொண்டு வீடிழந்து நாடிழந்து வாழும் வகையிழந்து நிற்கும் தமிழினத்தின் வேருக்கு விளைச்சல் தரும் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழரிடையே தமிழீழம் சாத்தியப் படாது புதிய உலக நடை முறைக்கு ஏற்ப நாம் ஏதோ சிங்களம் தருவதைப் பெற்று ஆறுதல் அடைய வேண்டும் என தமிழர் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை இந்திய அரசுகளின் புதிய பாடத் திட்டத்தின் படி எமக்குப் பாடம் நடத்த வருகிறது.

 1. வட்டுக் கோட்டையில் கருப்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி கலைந்து போனாலும் அங்கே தமிழரின் மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்ட வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனை முன்னிறுத்திப் 1977 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையும் எங்கே போயிற்று?
 2. இவர்களால் ஏற்று உலகறிய முன்வைக்கப் பட்ட திம்புப் பேச்சுக் கோரிக்கைகள் எங்கே போயின?
 3. இன்று எவருக்கும் தெரிந்து விட்ட எமது மக்கள் தாயகத்தில் படும் அவலவாழ்வைத் தாமும் பட்டியலிட்டுத் தாமே அவர்களின் பாதுகாவலர்கள் எனக் கூறும் இவர்கள் அவர்களுக்கான நீதியும் நிவாரணமும் கிடைக்க கொழும்பிலும் புதுடில்லியிலும் இருக்கும் செவிடர்களின் காதில் இரகசியம் பேசுவதை விட வேறு என்ன செய்கிறார்கள்?
 4. இவர்களுக்கு ஏனைய நாடுகளும் அரசுகளும் இருப்பதும் அவர்கள் மூலம் தேவையான அழுத்தங்களை ஏற்படுத்தி அந்த மக்களின் துயர துன்பங்களுக்கு முடிவு தேடவும் ஏன் தெரியவில்லை?

இவற்றை எல்லாம் விட்டு விட்டு நாடு கடந்த அரசுக்கு இவர்கள் வேட்டு வைக்க நினைப்பது தான் எவருக்கும் கவலை ஏற்படுத்தும் விடையமாக உள்ளது. இவர்களால் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேச முடியாது அப்படிப் பேசி அவர்களை உயிர் ஆபத்துக்குள் மாட்டிக் கொள்ளச் சொல்லும் தார்மீகமும் எம்மிடம் கிடையாது. ஆனால் அவர்களை நம்பி வாக்களித்தும் அவர்களின் தலைவர்கள் எனப் பேசிக் கொள்ளும் இவர்களுக்கு அந்த மக்களின் நல்வாழ்வும் பாதுகாப்பும் பெற்றுக் கொடுக்க வேண்டிய அவர்களின் தார்மீகக் கடமையை நாமா நினைவூட்ட வேண்டும்?

இவர்களால் ஈழத் தமிழரின் தாயகக் கனவு சிதறடிக்கப்படும் ஆபத்தை உணருவதால் இவர்களைப் பற்றி இத்தனை விரிவாக எழுத நேர்ந்த அதே வேளை, ஏற்கனவே உட்பூசலால் புலம் பெயர் தமிழ்ச் சமூகம் சின்னா பின்னப்பட்டுச் சிதறிக் கிடக்கிறது.

ஓற்றுமை என்று வெறும் வெற்றுக் கூச்சல்களை ஒலித்த படியே அதே குரல்கள் திரை மறைவில் குத்து வெட்டில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

 • இவர்களின் சதிகார அரசியலால் நாடுகடந்த அரசு மிகப் பெரும் சாவால்களை அது கருக் கொண்ட நாள் முதலே சந்தித்து வருகிறது.
 • முதலில் அதனை முன்னெடுத்த கே.பீ.யை ஒழித்துக் கட்டுவதில் வெற்றி கண்டனர்.
 • பின்னர் நாடுகடந்த அரசு பெருமுதலாளித்துவ ஆதிக்கத்துக்கு உள்ளாகிறது என்று பிரச்சாரப் படுத்தினர்.
 • நாடு கடந்த அரசு ஆலோசனைக் குழு உறுப்பினரின் கல்வித் தகமையும் துறைசார் புலமையும் கண்டும் அதனால் அது மக்களின் ஆதரவைப் பெறுவது கண்டும் மாற்றுச் சிந்தனையாக வட்டுக் கோட்டைப் பிரகடன மீள் வாக்கெடுப்பு எனக் கூறி காற்றிலே கயிறு திரித்தனர். அதுவும் செல்லாக் காசானதால் மக்களவை எனத் தேர்தல் நடத்தி மக்களிடம் பெற்ற பெருநிதியைப் பயன் படுத்தி என்ன எல்லாமோ செய்து பார்த்துவிட்டனர்.
 • இவர்கள் வசம் சிக்கி விட்ட பெருமளவு மக்களின் பணம் அதே மக்களின் அரசியல் செயற் பாட்டுக்கு ஆக்க வழியில் பயன்படாது அவர்களின் உயிர் மூச்சாக விளங்கும் நாடு கடந்த அரசைக் குலைக்கவும் சிதைக்கவும் பயன் படுவது தமிழ் மக்களைப் பீடித்த சாபம் எத்தகையது என உணர வைக்கிறது.
 • புலத்தில் நடக்கும் பதவிப் போட்டியில் நாம் அடித்துக் கொள்ள இலங்கை இந்திய அரசுகளின் சதியும் ஒருசேர தமிழரின் நூறாண்டு கண்டு விட்ட தமிழீழத் தாயகக் கனவு முற்றாகவே கனவாகி விடுமோ என்ற பயம் பற்றிக் கொள்கிறது.
 • ஓரு சிறு ஆறதலாக திரு உருத்திரகுமாரனின் அசாத்தியத் துணிச்சலும் அறிவும் ஆற்றலும் அவர் எதிர்ப்புகளை எதிர் கொண்டு வெற்றி கண்டு நிலைத்து நிற்கும் நிலை தெரிகிறது.

நாடு கடந்த அரசின் இரண்டாவது  அமர்வில் இடம் பெற்ற குளறு படிகளின் பின்னணியும் அதன் சூத்திர தாரிகளின் பெயர் விபரமும் கனேடியத் தமிழ்ப் பத்திரிகைகள் அம்பலப் படுத்தியது அறமே வெல்லும் என்ற உண்மையை காட்டி விட்டது. அதனை வெளிப்படுத்திய பிரதி நிதிகளின் நேர்மையை எவரும் பாராட்டாது இருக்கமுடியாது.

நாடு கடந்த அரசு படும் பாடு கண்டு தவிக்காத தமிழ் உள்ளம் உண்மைத் தமிழ் உள்ளமாக இருக்க முடியாது. இனியாவது தமிழினத்தை உண்மையும் வெளிப்படைத் தன்மையும் கொண்ட தலைமை வழிநடத்தும் வரலாறு படைக்கப்பட வேண்டும். எமக்கு உள்ள ஒரே அரசியல் தளமாக தனித் தமிழீழத் தாயகம் உருவாகும்வரை நாடு கடந்த அரசு ஒன்றுதான் இருக்க முடியும் என்பதை ஒவ்வொரு தமிழரும் மனதில் வைத்துச் செயற்பட வேண்டும்.

எனவே நாடு கடந்த அரசும் அதன் உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான தமது கடமையாக அவ்வப்போது அதிகார பூர்வமான அறிக்கைகள் மூலம் செய்திகளை மக்களுக்குத் தெரியப் படுத்துவது அவசியமாகும்.  ஏதோ ஒரு ஊடகத்தில் யாரோ ஒருவர் கூறுவதாக வெளியாகும் செய்திகளின் ஆதாரம் கேள்விக்கு உள்ளாகும் நிலை உள்ளது. முதல் அமர்விலும் இரண்டாம் அமர்விலும் எவர் என்ன செய்தார் சொன்னார் மற்றும் அவரது கொள்கை உறுதிப்பாடு என்ன என்பவை பற்றி வாக்காளர் தெரிந்து கொண்டால் மட்டுமே ஆரோக்கியமான மக்களாட்சி சாத்தியப்படும்.

நாடுகடந்த அரசு காணும் வளர்ச்சியும் அதில் உருத்திரகுமாரனும் ஏனைய உறுப்பினரும் ஆற்றும் சாதனைகளையும் கண்டு பாராட்டும் வேளையில் என்ன ஏது எப்படி ஆகுமோ என்ற பரிதவிப்பும் வாட்டுகிறது. இலங்கை இந்தய அரசுகளும் அவற்றின் கைக்கூலிகளும் ஆற்றும் சதி வேலைகளும் எம்மை எச்சரிக்கை கொள்ள வைக்கின்றன. இவற்றைத் தமிழினம் மனதில் ஆழமாக பதிய வைத்து செயற்பட்டால் அல்லாது ஈழத் தமிழினம் வரலாற்றிலும் இலங்கையின் வரை படத்தில் இருந்தும் விரையில் அழித்தொழிக்கப்பட்டுவிடும்.

அங்கே நடப்பது இனஅழிப்பு என அகில உலகமே அறிந்த நிலையிலும் இன அழிப்பு என்ற சொல்லை எவரும் பயன் படுத்தக் கூடாது என்ற எழுதப்படாத அறிவுறுத்தல் அமெரிக்காவின் அதிகார பீடங்களிலேயே வெளிப்படும் நிலை எமக்கு மிகவும் ஆபத்தானது. இன அழிப்பு என்ற சொல்லும் அதற்கான நீதி விசாரனை கோரும் செயற்பாடும் எமது முதல் முக்கிய ஆயுதமாக விளங்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகளால் மட்டுமே நாம் எமது தனித் தமிழீழத் தாயக உருவாக்கத்தை உறுதி செய்ய முடியும்.

இத்தனை வருடங்களுக்கு பின்னர் சோமாலியாவுக்கு ஒரு தீர்வை ஒபாமா வைக்க முடியும் என்றால் அவரால் நிச்சயமாகத் தமிழீழத்தையும் ஒருநாள் முன்னெடுக்கச் செய்ய முடியும். நாடு கடந்த அரசு இந்தத் திசையிலும் பயணிப்பது எமக்குப் பயனாக முடியும்.

நிறைவாக,

உருத்திர குமாரனை வாழ்த்தி வரவேற்கும் அதே வேளையில் நாடுகடந்த அரசின் தெரிவு செய்யப் பட்ட தலைவராக இருப்பதால் அவர் தமிழ் மக்கள் சார்பான சில முக்கிய முடிவுகளை உடனடியாக எடுப்பதன் மூலம் புலம் பெயர் மக்களிடையே உள்ள குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். புலிகள் அமைப்பின் தலைமைப் போட்டி முடிவு காணப்படுவது அவசியம். நாடு கடந்த அரசு புலிகளின் முன்னெடுப்பாக இருக்க வேண்டும் எனில் அந்த அமைப்பின் தலைவரும் தானே எனவும் அதன் சார்பில் தமது இயக்கம் ஆயுத வழி போராட்டத்தையும் வன் முறைகளையும் அறவே கைவிடுவதாகவும் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை உலக அரசுகள் விலக்கவும் கோரும் பகிரங்க அறிவித்தல் செய்ய வேண்டும். செய்வாரா?

கட்டுரையாளர்: எதிர்மன்னசிங்கம்
இன்போதமிழ் குழுமம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.