யாழ். சிங்களக்குடியேற்ற முயற்சி திட்டமிட்ட நாடகம்! – சரவணபவன்

குடாநாட்டில் மீளக்குடியமரப் போவதாக வந்துள்ள சிங்களக்குடும்பங்கள் தாங்கள் முன்பிருந்த காணிகளைக் கோராமல் அரச காணிகளில் குடியமர்த்துமாறு கோருவது சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்த நடத்தப்படும் நாடகமாகும். எனவே இந்த நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்த அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர சிங்களக் குடும்பங்கள் வருகை செய்துள்ளமை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

அண்மையில் தென்னிலங்கையிலிருந்து எவ்வித முன்னறிவித்தலுமோ உத்தியோகபூர்வ அனுமதியோ இன்றி வந்து யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்குடன் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள 500 சிங்களக் குடும்பங்கள் இங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இவர்கள் தாங்கள் 1983ஆம் ஆண்டுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் குடியிருந்ததாகவும் இப் போது தாங்கள் இருந்த வீடுகளில் வேறு நபர்கள் குடியிருப்பதால் அவற்றைத் தாம் கோரவில்லையெனவும் தம்மை அரச காணி களில் குடியேற்றவேண்டும் எனவும் இது தொடர்பாகத் தங்களுக்கு ஒரு சாதகமான முடிவுவரும்வரை அவ்விடத்தை விட்டு வெளி யேறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தாங்கள் முன்பிருந்த காணி களைக் கோராமல் இருப்பதும் அரச காணி களில் தங்களைப் புதிததாகக் குடியிருத்த வேண்டும் என கேட்பதும் மீள்குடியேற்றம் என்ற பொய்மையில் நிழலில் ஒரு சிங்களக் குடியேற்றத்தை யாழ்.குடாநாட்டுக்குள் ஏற் படுத்த நடத்தப்படும் ஒரு நாடகம் எனவே கருதவேண்டியுள்ளது.

இதுபற்றி யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் அவர்களில் ஒரு சிலர் முன்பு இங்கு வாழ்ந்த உண்மை தானென்றாலும் அவர்களுக்கு இங்கு சொந்தக்காணிகளோ வீடுகளோ இல்லையெனவும் இவர்களை இங்கு குடியேற்ற எவ்வித சட்ட திட்டமும் இல்லையெனவும் இவர்களை மீள்குடியேற்றுவது சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உடனடியாகவே இது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க யாழ்.குடாநாட்டில் முன்னர் வசித்த இந்தக் குடும்பங்கள் அங்கு குடியேறச் சகல உதவி ஒத்தாசைகளை வழங்கவேண்டும் எனவும் அதற்கான உதவி ஒத்தாசைகளை விரைந்து எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறு மயவின் தலைவரான வண.ஒமல்பே சோபித தேரர் வடக்கு கிழக்கிலிருந்து போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் இவர்களும் ஒரு பகுதியினர் எனவும் இது தொடர்பாக தான் மீள்குடியேற்ற அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்போவதாகவும் கூறியுள்ளார்.

இவர்களின் கூற்றுக்கள் இங்கு வந்த மக்கள் தாங்களாகவே மீள்குடியேறும் நோக்குடன் இங்கு வந்தார்களா அல்லது யாழ். குடாநாட்டில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கும் நோக்குடன் சிங்களக் கடும்போக்காளர்களால் திட்டமிட்டு அனுப்பிவைக்கப்பட்டவர்களா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

கிளிநொச்சியில் மரணமடைந்த போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில், வடபகுதி சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமெனவும் இந்தியத் தமிழ் மன்னர்களின் படையெடுப்பு காரணமாக பௌத்த விகாரைகள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டன எனவும் அவ்விடங்களில் மீண்டும் பௌத்த விகாரைகள் அமைக் கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டமையை நாம் மறந்துவிடமுடியாது.

இக்கூற்றிலிருந்து இலங்கை முழுவதும் சிங்களவருக்கே சொந்தம் என்ற இவரது இனவெறிச் சித்தாந்தத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும். இந்த சிந்தாந்தத்தை நடை முறைப்படுத்துவதின்;

ஒரு கட்டமே மீள்குடி யேற்றம் என்ற போர்வையில் மேற் கொள்ள விளையும் இந்தச் சிங்களக் குடியேற்றமாகும்.

1983ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதியில் பேக்கரிகள், உணவுக்கடைகள் வைத்துக்கொண்டும் அரச சேவைகளில் சிற் றூழியர்களாகவும் சிறு அளவிலான சிங்கள மக்கள் இங்கு இருந்தார்கள் என்பது உண்மைதான்.

அவர்கள் தங்கள் தொழில் நிமித்தம் வசித்தார்களேயன்றி இங்கு நிரந்தரமாகக் குடியிருக்கவில்லை, சொந்தக் காணிகளோ வீடுகளோ இருக்கவில்லை.

அவர்கள் இங்கு உழைத்து தென்னிலங் கையிலுள்ள தங்கள் ஊர்களுக்கே கொண்டு சென்றனர். அவர்கள் இங்கு நிரந்தரமாகக் குடியிருந்தவர்கள் எனவும் அவர்களின்  சொந்த இடம் யாழ்ப்பாணம் என்றும் கொள்ளமுடியுமா?

1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளுக்கு முன்னைய காலகட்டங்களில் தென்னிலங்கையின் பெருநகரங்கள் முதற்கொண்டு சிறு கிராமங்கள் வரை வடக்கிலிருந்து சென்ற வர்த்தக நிறுவனங்கள், பெரும் அரிசி ஆலைகள், உணவுச்சாலைகள், தென்னந்தோட்டங்கள் என தமிழர்கள் பலவிதமான தொழில்களை மேற்கொண்டனர்.

மேற்படி ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் காரணமாக அவர்கள் வடக்குக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

அவர்களில் ஏராளமானோர் பின்பு தென்னிலங்கைக்குத் திரும்பவில்லை.

அவர்களுக்கு தென்னிலங்கையில் காணிகளை வழங்கவேண்டும் அவர்கள் அங்கு குடியேற அனுமதிக்கப்படவேண்டும் என்று திஸ்ஸ அத்தநாயக்காவும் வண. சோபித தேரரும் குரலெழுப்புவார்களா?

1983இல் இங்கு தொழில்செய்ய வந்து திரும்பிப்போன சிங்களவர்கள் இங்கு வந்து குடியேறுவது சரியென்றால், தென்னிலங்கையில் தொழில்செய்து இனக்கலவரங்கள் காரணமாக விரட்டப்பட்ட தமிழர் அங்கு மீண்டும் செய்து குடியேறுவதில் என்ன தவறு இருக்கமுடியும்? இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி என்று இலங்கையின் அரசிய லமைப்பு சட்டம் பரிந்துரைக்கிறதா?

மக்கள் படும் துன்பத்தைத் தாங்கமுடியாத புத்தபெருமானின் பேரால் தன்னை துறவியாக நிலைநிறுத்திக் கொண்ட வண.சோபித தேரர் அரசியலுக்குள் புகுந்தது மட்டுமன்றி ஓர் இனத்தையே துன்பங்களுக்கும் அழிவுக்கும் வகையில் செயற்படுவதைப் புனிதமான புத்ததர்மம் ஏற்றுக்கொள்கிறதா?

இதை நாம் 500 பேர்கொண்ட ஒரு மக் கள் கூட்டத்தின் தன்னிச்சையான நடவடிக்கை எனப் பார்க்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தைத் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் ஒரு நிலப்பகுதியைக் குறைத்து நாடு முழு வதையுமே சிங்கள மயப்படுத்தும் ஒரு நீண்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருது கிறோம்.

இன்று இராணுவக் குடியிருப்புகள் என்ற பேரில் சிங்களக் குடியேற்றங்களைப் பெருந்தொகையில் நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிழக்கின் பல இடங்களில் முன்பு சிங்கள மக்கள் இருந்ததாகக் கூறப் படும் இடங்களில் இப்போது முன்பு இருந்த தொகையை விடப் பலமடங்கு குடும்பங்கள் கொண்டுவந்து குடியேற்றப்படுகின்றன.

மீன்பிடிக் கிராமங்கள் என்ற பேரில் பல தமிழ்க் கிராமங்களின் கடற்கரைப் பகுதிகள் சிங்களக் குடியிருப்புகளால் நிரப்பப்படுகின்றன.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பேரால் மணலாற்றிலுள்ள சிங்களக் குடியேற்றங்கள் நாயாறுவரை விஸ்தரிக்கப்படவுள்ளன.

இராணுவ முகாமுக்கு அருகில் விகாரைகள்,

அதுமட்டுமன்றி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவ முகாம்களுக்கு அண்மையில் உள்ள இடங்களில் எல்லாம் புத்த விகாரைகள் நிறுவப்படுகின்றன.

தொல் பொருள் ஆராய்ச்சி என்ற பேரில் தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்கள் புனித ஸ்தலங்கள் பௌத்த சின்னங்களாக நிறுவும் நோக்கில் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. அதேவேளையில் இந்து மத ஆலயங்களின் புனிதம் கெடும் வகையிலும் இந்து மக்கள் அவமானப்படுத்தப்படும் விதமாகவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

பல ஆண்டுகளாக வன்னி மண்ணின் பிரதான ஆலயமாக விளங்கிவந்த முறிகண்டி ஆலய எல்லைக்குள்ளேயே ஒரு பெரும் சுற்றுலா விடுதி அமைக்கப்படுகிறது.

கிளிநொச்சியின் காவல் தெய்வமாக விளங்கும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோயில் தேரோடும் வீதியின் ஒரு பகுதி முட்கம்பி வேலியிடப்பட்டு ஒரு படைமுகாம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறே இன்று அரசயந்திரத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் தமிழ்ப் பிரதேசங்களை சிங்களமயப் படுத்தும் நோக்குடனும் தமிழ்மக்களின் தேசிய தனித்து வத்தை இல்லாமல் செய்யும் இலக்குடனேயுமே மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாண மண்ணுக்கு எவ்விதத்திலும் சொந்தம் கொண்டா உரிமையற்றவர்களை அங்கு குடியேற்றத் துரித நடவடிக்கை எடுக்கும்படி கோரும் திஸ்ஸ அத்தநாயக்காவும் சோபித தேரரும் தமது சொந்த மண்ணிலிருந்து ஏறக்குறைய 20 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட மக்களை ஒருமுறை திரும்பிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இது என்ன நியாயம்?

வலிகாமம் வடக்கு, தீவுப்பகுதி, மூதூர் கிழக்கு போன்ற பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள் இன்னும் மீள்குடி யேற்றப்படவில்லை.

போரின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் இன்னும் சொந்த இடங்களில் குடி யேற அனுமதிக்கப்படவில்லை.

மீள்குடி யேற்றப்பட்டவர்கள் கூட எவ்வித அடிப்படை வசதியுமின்றி? கூடாரங்களில் பற்றைகளுக்கு நடுவேயே வாழும் நிலைமை நிலவுகிறது.

வெளிநாடுகள், அரசார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் கூட மக்களிடம் சரியான முறையில் சென்றடைவதில்லை.

ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வு பற்றியோ, நில உரிமை பற்றியோ தேசிய தனித்துவம் பற்றியோ அவரும் அக்கறைப்படுவதில்லை.

மாறாக அவர்களை வறுமையிலும்,

நோயிலும் தள்ளி துன்பங்களுக்குள் அமுக்கி அவமானப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளே மேற் கொள்ளப்படுகின்றன.

அதேவேளையில் இத்தகைய தமிழ்மக் கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மறைமுக ஆதரவு வழங்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ்க்கட்சிகள் தங்கள் வழி களைத் திறக்கவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.

எப்படியிருந்த போதிலும் இப்படியான தமிழ்மக்கள் விரோத நடவடிக்கைகள் இந் நாட்டின் சகல தேசிய இனங்களும் ஐக் கியப்பட்டு தேசத்தின் அபிவிருத்திக்குப் பங்களிக்கும் நிலைமையைச் சீர்குலைத்து இனங்களுக்கிடையேயான கசப்புணர்வையும் மோதலையும் ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

எனவே இப்படியான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.