இந்தியாவின் தலையீட்டால்தான் புலிகள் இயக்கத் தலைவரை முன்பு தோற்கடிக்க முடியவில்லை!

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்.பிறேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனை முன்பு தோற்கடிக்க முடியவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

”சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போரைத் தொடர்ந்து நடத்தி வே.பிரபாகரனைத் தோற்கடித்தார். அவருக்கு அதைத் தவிர மாற்று வழி எதுவும் இருக்கவில்லை.

வே.பிரபாகரனைக் கொல்கின்றமைக்காக ஜே.ஆர்.ஜயவர்தன போர் தொடுத்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி வைத்தது. இதுதான் ஆர்.பிறேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கும் நடந்தது.

பிரபாகரன் கொல்லப்படுகின்றமையையோ, தோற்கடிக்கப்படுகின்றமையையோ அன்று இந்தியா விரும்பி இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் அந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. மஹிந்த போரைத் தொடுத்தபோது பிரபாகரன் அழிக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பியது.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.