பென்ரகன் போன்ற பாதுகாப்பு கட்டடத் தொகுதியை கொழும்புக்கு வெளியே அமைக்க சிறிலங்கா அரசு திட்டம்

அமெரிக்காவின் ‘பென்ரகன்’ போன்றதொரு பாதுகாப்புக் கட்ட்டத் தொகுதியை கொழும்பின் புறநகர்ப் பகுதியில் நிர்மாணிப்பது தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் இராணுவத் தலைமையகம், கடற்படைத் தலைமையகம், விமானப்படைத் தலைமையகம் போன்ற முக்கியமான பாதுகாப்பு தலைமையகங்களை ஒரே கட்டடத் தொகுதியில் கொண்டு வருவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

பத்தரமுல்ல – பெலவத்தையில் உள்ள இராணுவத் தொண்டர்படைத் தலைமையகத்தின் முன்பாக உள்ள நிலத்திலேயே சிறிலங்காவின் பென்ரகனை அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமான பாதுகாப்புக் கட்டமைப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2001 ஜுலை 25ம் திகதி கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

ஒரே கூரையின் கீழ் முக்கிய பாதுகாப்புத் தலைமையகங்களை கொண்டு வரும் போது- அவை அனைத்தையும் ஒரு நேரத்தில் இலக்கு வைப்பது புலிகளுக்கு வசதியாகி விடும் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்ததை அடுத்தே இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மீளவும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதனிடையே பென்ரகன் போன்ற கட்டமைப்பு பெலவத்தையில் உருவாக்கப்படவுள்ள நிலையில் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையக நிலத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்துலக ஆடம்பர விடுதி ஒன்றை அமைக்கவே வெளிநாட்டு நிறுவனத்துக்கு கொம்பனி வீதியில் உள்ள இராணுவத் தலைமையக நிலப்பகுதி கொடுக்கப்படவுள்ளது.

ஹாங்கொங்கைச் சேர்ந்த நிறுவனம் கொழும்பில் ஆடம்பர விடுதி ஒன்றை நிர்மாணிக்க விருப்பம் வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் அந்த நிறுவனத்துக்கு இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அமைந்துள்ள நிலத்தை வழங்குவதற்கு அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, முக்கியமான அரச நிர்வாகக் கட்டமைப்புகளை கொழுமபு நகருக்கே வெளியே கொண்டு செல்லும் திட்டத்தக்கு அமைய பாதுகாப்புத்துறை சார்ந்த பல அமைப்புகள் இடம்மாற்றப்பட்டு வருவதை பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.