இயங்கா நிலையில் சிறிலங்கா கடற்படையின் பெரும்பாலான போர்க்கப்பல்கள் – கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல்

சிறிலங்கா கடற்படையிடம் உள்ள 50 வரையிலான போர்க்கப்பல்களில் இருபது கப்பல்களே இயங்கக் கூடிய நிலையில் இருப்பதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏனைய 30 வரையிலான கடற்படைக் கப்பல்கள் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளால்-இயங்க முடியாத நிலையில் கடற்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதல் படகுகள், உதவிக்கப்பல்கள், கரையோர ரோந்துப் படகுகள் என்பன செயலிழந்த கடற்கலங்களில் அடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்து 18 மாதங்களாகின்ற நிலையில் வெளியே தெரியக் கூடிய நிலையில் கடற்படைக் கப்பல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

பெருமளவு கடற்படைக் கப்பல்கள் இயங்க முடியாத நிலையில் இருப்பதற்குக் காரணம் சிறிய தொழில்நுட்பப் பிரச்சினைகள் தான். ஆனால் அதை அவர்கள் பழுதுபார்க்கவில்லை.

இயங்கக் கூடிய நிலையில் உள்ள கப்பல்களின எண்ணிக்கை மேலும் குறைவடையலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை இதுகுறித்து அந்த வாரஇதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் இந்தத் தகவல் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

இது தனிப்பட்ட ரீதியான கருத்து. கடற்படையின் தந்திரோபாயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களின் கருத்தே இது.  தேவைக்கேற்பவே ரோந்துக்காக கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடற்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் பயன்பாட்டு நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்“ என்றும் அவர் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.