அரசியலில் இருந்து விலகப் போவதில்லை – இரா.சம்பந்தன் அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகப் போவதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளார்.

உடல் நலனின்மை காரணமாக அரசியல் இருந்து விலகப் போவதாக இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அவர் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

“ யாரேனும் ஒருவர் இதுபற்றி யோசித்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் வெறும் கற்பனைகள் தான்.“ என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இரா.சம்பந்தன் நாட்டில் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இளம் உறுப்பினர் ஒருவரை நியமிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளார்.

“ கட்சித் தலைவரை மாற்றுவது தொடர்பான எந்த நகர்வும் மேற்கொள்ளப்படவில்லை. இவையெல்லாம் கட்டுக்கதைகள். கட்சித் தலைமையை மாற்ற வேண்டிய தேவையேதும் இல்லை.

இரா.சம்பந்தன் கட்சியின் அண்மைய கூட்டங்களில் பற்கேற்றுள்ளார். அவர் அரசியலில் இருந்து விலகும் திட்டம் ஏதும் கிடையாது“ என்று மாவை சேனாதிராசா மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகம் இன்று பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்படவுள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை நிரந்தர தலைமையகம் எதையும் கொண்டு செயற்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களிலேயே அதன் கூட்டங்கள், சந்திப்புக்கள் இடம்பெற்று வந்தன.

அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் விண்ணப்பித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு முன்னோடியாக பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றில் தலைமையகத்தை திறந்து வைக்கவுள்ளது.

தலைமையகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அங்கு நடைபெறும். தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

அதேவேளை, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவும் இங்கு கூடி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.