ஊடகங்களை சுதந்திரமாக செயற்பட விடு! – அரசுக்கு எதிராக ஊடக அமைப்புக்கள் போர்க் கொடி!!

சுதந்திரமான ஊடக நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் வழங்குமாறு கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு லிப்டன் சுற்று வட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சிறிலங்காவின் ஊடக அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது காவற்துறையினர் தாக்குதல் நடத்தியமைக்கு சிறிலங்காவின் ஐந்து ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸார் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாகவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும் செயற்படுவதாக இந்த ஊடக அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

அத்துடன், பொது மக்களுக்குத் தகவல்கள் வழங்கும் ஊடகவியலாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்தே கடமையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந் நிலையில், இச் சம்பவத்தோடு தொடர்புபட்ட பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை காரணமாக ஒரு சுயதணிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் இன்றைய சண்டே லீடர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

வாசகர்கள் தாங்கள் எழுதும் பொய்களை பணம் கொடுத்து வாங்குகின்றனர் எனும் தலைப்பில் இன்றைய சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக பெரும்பாலான சிறிலங்காவின் பத்திரிகைகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் இப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. மேர்வின் சில்வா போன்றவர்கள் குறித்த பரப்பான செய்திகளை வெளியிடுகின்ற நேரங்களைத் தவிர்ந்த, பத்திரிகைகள் வெளியிடும் பெரும்பாலான ஏனைய செய்திகளில் சதைப் பற்றான இறைச்சித் துண்டுகள் குறைவாகவே இருப்பதாக இப் பத்திரிகை விசனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிடும் போது, அச் செய்திகள் வாசகர்களுக்கு போதை தருவதாக அமைகின்றது.

ஆனால், இவைகளோடு சொல்லப்பட வேண்டிய உண்மைகள் குறித்து நிறையச் செய்திகள் எழுதப்படாமடல் இப் பக்கங்கள் வீடு, காணி விற்பனைக்கு, திருமணங்கள் போன்ற விளம்பரங்களாலேயே நிரப்பப்படுகின்றது. சில தினங்களில் இப் பக்கங்கள் வேலைக்குச் செல்லும் போது உங்கள் மதிய உணவை பக்குவமாக சுற்றி எடுத்துச் செல்வதற்கு மட்டும் துணை புரிகின்றன.

பாணின் விலை ஏற்றப்படுவது குறித்து செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளியிடுவதில்லை. அவ்வாறு வெளியிடுகின்ற வேளையில் அந்த பத்திரிகை நிறுவனம் அச்சுறுத்தப்படுகின்றது.

இதற்கு மாறாக உண்மையான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார்கள். ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன.

இதனாலேயே சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். அதேபோன்று சண்டே லீடர் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்’ என இப் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் பேணப்படுகின்ற முதல் 175 நாடுகளில் சிறிலங்கா 162 வது இடத்தில் இருப்பதாக பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.