தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எந்தவிதமான காரணங்களும் கிடையாது – கோதபாய ராஜபக்ஷ

இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எந்த இடத்திலும் சுதந்திரமாக வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.
 
சில நாடுகள் அனுதாப அடிப்படையில் புகலிடம் வழங்கி வருவதாக மக்கள் அறிந்து கொண்டால், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டு விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
புகலிடம் வழங்குவது குறித்து கடுமையான விதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
புகலிடம் வழங்குவதனை அவுஸ்திரேலியா நிறுத்தினால் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் நகர்வினை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் வௌ;வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுக்க முனைப்பு காட்டி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள செயற்பாடுகளை ஆரம்பிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த விடயங்கள் குறித்த அவுஸ்திரேலிய தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும், புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து அவுஸ்திரேலியாவுடன் நெருங்கிச் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் புலம்பெயர் மக்களினால் மேற்குலக நாடுகளில் பாரியளவு பிரச்சாரங்கள் நடத்தி வருவதாகவும், அந்தளவிற்கு இலங்கை அரசாங்கம் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புலம்பெயர் தமிழர்கள் ஒரு பகுதியினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டு திருப்தியுடன் சென்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், ஓரு வருட காலத்திற்குள் புகலிடம் நிராகரிக்கப்படும் நபர்களை நாடு கடத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்ட 70 வீதமான இலங்கைத் தமிழர்கள் ஒராண்டு காலப்பகுதிக்குள் இலங்கைக்கு திரும்புவதாக பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
 
காவல்துறையினரும், கடற்படையினரும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
நேரடியாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புகலிடம் கோரும் செயற்பாடு வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் வேறும் நாடுளுக்கு சென்று அங்கு புகலிடம் கோரும் புதிய உத்தியை சில சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.