கனடியத் தமிழ் காங்கிரஸ் மீது மீண்டும் சேறு பூசும் முயற்சி

கனடிய மண்ணில் தமிழர்கள் நலன் குறித்து காத்திரமாகச் செயற்பட்டு வரும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தற்போதைய கனடிய அரசிற்கு அகதிகள் கப்பல் விவகாரத்தில் பெருத்த தலையிடியாக இருந்து வருகிறது.

கப்பலில் வந்த அகதிகளின் நலனில் பெரும் அக்கறையுடன் செயற்படும் அந்த அமைப்பு இவ் அகதிகளின் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்கள் விவகாரத்தில் செயற்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே அவர்கள் செய்யும்  பணியைத் தாமும் செய்யவென இன்னொரு தமிழ்; அமைப்புப் புறப்பட்ட போதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. மற்றைய அமைப்பு இந்த அகதிகளிற்கு உதவுவதற்கென நிதி சேகரிப்பையே தமது முதன்மைப் பணியாக மேற்கொண்டு, அதற்கான நிதிச் சீட்டுக்களை மக்களிடம் விநியோகித்த போது அவர்களின் கபட நோக்கம் புரிந்து மக்கள் புறக்கணித்தனர்.

இந்நிலையில் கனடாத் தமிழ்க் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணனி திருடப்பட்டது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதோடு கனடிய தமிழ்க் காங்கிரஸின் தொண்டர்கள் மீதான காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதையொத்த பிரச்சாரங்கள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நின்ற போது அவர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தான் மகிந்தாவை விட அதிகளவு வாக்குப் பெற்றார் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவே அவரை ஆதரித்தது என்பதும் மக்கள் அறிந்ததே. எனவே தமிழர்கள் மகிந்தாவை எதிர்ப்பதற்கு ஏற்ற ஒருவராக சரத் பொன்சேகாவைத் தெரிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சரத் பொன்சேகாவின் கைது குறித்து கனடியத் தமிழ்க் காங்கிரஸிடம் கேட்ட போது, ஒரு அரசியல்வாதியாக பொன்சேகா கைது செய்யப்பட்டதை நாம் எதிர்க்கிறோம். அதற்காக சிங்கள மக்கள் போராட வேண்டும். ஆனால் ஒரு இராணுவத் தளபதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தே தமிழர்களின் கருத்து என்பதைத் தெரிவித்திருந்தது வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலித்து நின்றது.

சிங்கள மக்களை மகிந்தாவை எதிர்த்துப் போராடச் செய்வதன் மூலம் அவரை யுத்தக் குற்றவாளியாக்கும் முனைப்பைத் தீவிரப்படுத்தலாம் என்ற நோக்கோடும் சர்வதேச அரங்கில் இலங்கை இனப்பிரச்சினையை எடுத்துச் செல்ல இது உதவும் என்ற நோக்கிலுமே இந்தக் கருத்து சொல்லப்பட்டிருந்தது.

எனினும் மகிந்தாவை எதிர்த்து மக்களிற்கு விடிவு தேடித் தருவதற்காக நிதி சேகரிப்புக்களில் மாத்திரம் ஈடுபடும் தரப்பு கனடியத் தமிழ்க் காங்கிரஸ் சரத் பொன்சேகா விடயத்தில் கவலை கொண்டுள்ளது, சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றது என்ற கருத்தை விதைத்து தம்மை மகிந்தாவின் அடிவருடிகளாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு-கிழக்கு மக்களால் மகிந்தாவை எதிர்ப்பதற்கான சக்தியாக தெரிவு செய்யப்பட்ட சரத் பொன்சேகாவை வைத்து கனடியத் தமிழ்க் காங்கிரஸின் மீது சேறு பூசப் புறப்பட்டவர்கள் தாங்கள் மகிந்தாவின் ஆதரவாளர்கள் என்ற உண்மையையே தெரிவித்துச் சென்றுள்ளனர்.

எனவே இனிவரும் காலத்திலாவது இவ்வாறான சகோதர நிறுவன எதிர்ப்புக்களை தமிழ்த் தேசியத்தின் பெயரால் பிழைக்கும் நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.