குழு மோதல்களின் ஆடுகளம் ஆகிவிட்ட நாடு கடந்த அரசாங்கம் – கோபி

நாடுகடந்த அரசாங்கம் அமைப்பது பற்றிய செய்திகள், கருத்துகள் மற்றய ஊடகங்களில் வெளிவர ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அக்கட்டமைப்பின் அவசியம் பற்றியும், நாடுகள் மட்டத்தில் சனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்படக்கூடிய கட்டமைப்புகள் அமைப்பது பற்றியும் ஒரு பேப்பர் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தது.

இது தொடர்பில் ஒரு பேப்பரின் ஆசிரியர் குழு,  துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றதுடன், ஆர்வலர்களுடன் சில கலந்துரையாடல்களையும் மேற்கொண்டது. எமது தேடல்கள்,  நாடுகடந்த அரசாங்கத்தின் நடைமுறைச்சாத்தியம், அதன் கட்டமைப்பின் இயங்குகைக்கு, இன்றய உலக ஒழுங்கில் உள்ள சாதக, பாதக நிலமைகள் பற்றியதாக இருந்தனவே தவிர, தனிநபர்கள் அல்லது குழுக்களை மையப்படுத்தியதாக அமையவில்லை என்பதனை இங்கு குறிப்பிடவேண்டும்.

இக்கால கட்டத்தில், வெளிப்படைத்தன்மை கொண்டதான சனநாயக வழிமுறையிலான அமைப்புகளை உருவாக்குவது பற்றி பல்வேறு தரப்பினரும் கலந்துரையாடல்கள் நடாத்தி வந்தனர். அவை அனைத்தும், தமிழர்களின் நலனந் சாரந்து, பெரும்பாலும் ஒரே குறிக்கோளைக் கொண்டனவாக இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

கடந்த வருட இறுதியில், நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பாக சில அறிவித்தல்களை திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டப்பட்டதுடன். இச்செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த நாடுகள் மட்டத்திலான செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன. அதனை வரவேற்று நாம் சில கட்டுரைகளை பிரசுரித்திருந்தோம்.

துரதிர்ஸ்டவசமாக இச்செயற்குழுக்கள் அமைக்கப்பட்டதில் ஆரம்பித்த முரண்பாடுகள் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கிடையில் குழப்பத்தினை தோற்றுவித்தன. இச்செயற்குழவில் அங்கம் வகித்த சிலரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் செயற்குழுவிற்குள்ளும், வெளியிலும் முரண்பாடுகளையும் உருவாக்கியது. இதன் விழைவாக குழுக்கள் உருவாகி அவை தம்கிடையிலான மோதிக்கொள்வதையே முக்கிய செயற்பாடாக்கி கொண்டன. இதனை பயன்படுத்தி,  சில ஊடகங்கள் குழுவாத்தை முன்னிலைப்படுத்தி பிளவுகளை  மேலும் விரிசலாக்க  முனைந்தன.

ஏற்கனவே செயற்பட்ட கட்டமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதில்,  இச்செயற்குழுக்கள் வெற்றிபெறாமையும் இந்நிலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. கடந்த மே மாதத்தில் நடாத்தப்பட்ட தேர்தல்களிலும் குழுவாதம் துருத்திக்கொண்டு தெரிந்தது. செயற்குழுவைச் சார்ந்தவர்கள் தமக்கு சார்பானவர்களை களமிறக்க, இதர தமிழ்த்தேசிய கட்டமைப்புகளும் தமது சார்பானவர்களை போட்டியிட வைத்தனர். இத்தேர்தல் முறைகேடுகளுடன் நடந்தேறியமை அனைவரும் அறிந்ததே. நடந்து முடிந்த தேர்தல் நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்திறன், வெளிப்படைத்தன்மை, சனநாயகம் பேணுதல் என்பனவற்றை கேள்விக்குறியாக்கியது. தேர்தலில் நடந்த குழறுபடிகள், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏற்பட்ட இழுபறி என்பன, ஏற்கனவே முகிழ்த்திருந்த குழுவாதத்தினை நிலைகொள்ளச் செய்தன. இந்நிலைக்கு தனித்து நாடுகடந்த அரசாங்கம் உருவாக்க குழுவினர் மட்டுமல்லாது மற்றய தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், அமைப்புகளும் பொறுப்பேற்க வேண்டும்.

குழுவாதம் ஏற்படுத்திய குழப்ப நிலையில், நாடுகடந்த அரசவையில் காத்திரமான பங்களிப்பை வழங்கக்கூடிய ஆற்றலுடைய பலர் தேர்தலில் போட்டியிடுவதில் அக்கறை காட்டவில்லை. போட்டியிட்டவர்களில் பலருக்கு நாடுகடந்த அரசாங்க கட்டமைப்பு பற்றிய எத்தகைய கருத்தும் இருக்கவில்லை. போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், மிகவும் பொருத்தமானவர்கள் சிலர் வெளியேற வேண்டிய நிலமையும் ஏற்பட்டது. உதாரணத்திற்கு இரண்டு சம்பவங்களை குறிப்பிடலாம், தென் மேற்கு லண்டன் பகுதியில் அதிக வாக்குப் பெற்று வெற்றியீட்டிய டேவிட் பரராஜசிங்கம் செயற்திறன் கொண்ட ஒருவர். தேர்தலில் இடம்பெற்ற குழறுபடிகளின் காரணமாக கனவான் முறையில் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். 

பரிஸ் இல் மாவட்டம் 93 (லாக்கூர்னோவ், ஹொட்டேல் து வில், பொபினி)  பிரதேசத்தில்  போட்டியிட்ட   தமிழ் செயற்பாட்டாளருமாகிய கிருசாந்தி சக்திவாசன் (சாலினி) அதிகமான வாக்குகளை பெற்றிருந்தும், தேர்தல் நடாத்தியவர்கள், அங்கு முறைகேடுகள் நடைபெற்றதாகக்கூறி முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆற்றல் உள்ளவர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் நாடுகடந்த அரசின் மீதான நம்பகத்தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாகவே அமைந்துள்ளன.

முன்னுதாரணம் இல்லாத கட்டமைப்பான நாடுகடந்த அரசாங்கம் பற்றி புரிந்து கொள்வதும், அதன் நடைமுறைச் சாத்தியம் பற்றி விளக்குவதும் இலகுவானதொன்றல்ல. அதேசமயம் பழைய சித்தாந்தங்களில் ஊறியிருப்பவர்கள்,  இவ்வாறான புதிய அணுகுமுறையை பரிசீலிக்க மறுத்து வருகிறார்கள்.  மாறிவரும் உலக சூழலில் புலம் பெயர்ந்த சமூகங்களும் (Diaspora communities) அவற்றின் நாடுகடந்த செயற்பாடுகளும் சமூக, அரசியல், பொருண்மியத் தளங்களில் ஆய்வுப் பொருளாக மாறிவருவதனையும், இவை தொடர்பாக காத்திரமான கருத்துகள் புலமையாளர்களால் வெளியீடப்படுவதனையும் நாம் கவனத்தில் கொள்ள தவறிவிடுகிறோம். ஆனால் இவ்விடயத்தில் அக்கறை காட்டிவரும் அரசியல் சிந்தனை மையங்களின் கவனத்தை நாடுகடந்த தமிழீழ அரசு ஈர்த்துள்ளது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க கட்டமைப்பானது, ஒரு முன்னோடி அமைப்பாக செயற்படக்கூடிய தகமைகளை கொண்டிருந்தும், வினைத்திறனற்ற ஒரு அமைப்பாகவும்,  வெறுமனே குழு மோதல்களின் ஆடுகளமாகவும் மாறிவிட்டதையே காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான அவதானத்தை மேற்கொள்வதற்குரிய கால அவகாசம் போதுமானதாக இல்லாதபோதும், எதிர்காலத்தில் சிறப்பாக செயற்படக்கூடிய அறிகுறிகளை எதனையும் காணமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடவேண்டியுள்ளது.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற அதன் இரண்டாவது அமர்வின் பின்னர் தமிழ் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், கட்டுரைகள், பகிரங்கக் கடிதங்கள், செய்தி ஆய்வுகள் என்பனவற்றைப் நோக்கும்போது, அவை இக்குழுமோதல்களினை தூண்டிவிடும் தன்மையையும், நாடுகடந்த அரசாங்கத்தினை முற்றாகச்சிதைத்து விடும் நோக்கினையும் கொண்டிருப்பதை  அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  “முடிசூடிய துரோகம்”, “ஒப்பரேசன் இறைக்கை வெட்டல்”, “இதயம் வலிக்கிறது அண்ணா”, “அரசியல் கோமாளிகளின் கேலிக்கூத்தது” போன்ற தலைப்புகளில் தனிநபர்களின் மீதும் குழுக்களின் மீதும் கரி பூசும் வகையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றை முதன்மைப்படுத்தி பிரசுரித்திருக்கும் ஊடகங்கள்,  நாடுகடந்த அரசாங்க கட்டமைப்புப் பற்றி விளக்குவதற்கு, அல்லது விவாதிப்பதற்கு, அது பற்றிய நம்பிக்கையினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு,  குறைந்த பட்ச முயற்சிகளைத்தானும் மேற்கொள்ளவில்லை.

இறுதியாக நடைபெற்ற இரண்டாவது அமர்வில் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் யாப்பு விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதம அமைச்சராக திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்படடுள்ளார்.  துணைப்பிரதமர்களும் அமைச்சர்களும் உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுவார்களா அல்லது பிரதமர் தேரந்தெடுப்பாரா என்பதனையிட்டு சூடான விவாதங்கள் நடைபெற்றன. பிரதமரால் தெரிவு செய்வதற்கு ஆதரவாக அதிகப்படியான வாக்குகள் கிடைக்கப்பெற்றமையால் அந்நடைமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சரவையை கலைப்பதற்கும், யாப்பில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் தேவையான பெரும்பான்மை வாக்குகள் விடயத்தில் பலத்த வாதப்பிரதி வாதங்கள் நடந்திருக்கின்றன.

இதுபோன்ற சட்டவியல் சார்ந்த,  அறம் சார்ந்த விடயங்களில் கருத்துவேறுபாடுகள் இருப்பதும், அதையொட்டிய விவாதங்கள், கருத்து மோதல்கள்,  உறுப்பினரிடையேயும், பொதுமக்கள் மத்தியிலும் நடைபெறுவதும் இயல்பானதே. தீர்மானங்கள் யாவும் ஏகமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பது சனநாயகத்தின் உயிர்ப்புத்ன்மையை வெளிப்படுத்துவதாக அமைய மாட்டாது.  இருப்பினும் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது, குழப்பத்தை ஏற்படுத்துவது, பகிரங்கக் கடிதம் எழுதுவது என்பவற்றை நாகரீகமான நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

தாய்ப்பாராளுமன்றம் எனக் கருதப்படும் வெஸற்மின்ஸரர் பாராளுமன்றம் போன்று, மேற்குநாடுகளில் உள்ள ஆட்சிமன்றங்களின் நடைமுறைகளை பார்த்தும் அறிந்தும் வைத்துக் கொண்டு,  இந்தியா, சிறிலங்கா மற்றும் சில ஆசிய நாடுகளின் பாராளுமன்றங்களில் நடைபெறுவதைப்போல் காட்டுமிராண்டித்தனமாக உறுப்பினர்கள் நடந்து கொண்டமை தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பரந்துபட்ட தமிழ் மக்களிடையே, நாடுகடந்த அரசாங்கம் தொடர்பான சரியான புரிதல் இல்லாவிடினும், புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களை உள்ளடக்கியதான ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உடன்படுகிறார்கள்.

இவ்விடயத்தில போட்டிக்குழுக்களைச் சேர்ந்தவர்களிடையேயும்  மாற்றுக்கருத்துகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை அனுகூலமான நிலவரமாகக் கொள்ளலாம். இச்சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேறுவதே தமிழ்த்தேசியவாதிகளின் முன்னே விரிந்திருக்கிற பணியான இருக்கிறது. இதனை தவிர்த்து, குறகிய நலன்களுக்காக குழுமோதல்களை வளர்ப்பது, தமிழ் மக்களின் அரசியற்பாதையில் பின்னோக்கிய நகர்வாகவே அமையும். இத்தகைய குழப்பங்களுக்கும், மோதல்களுக்கும் மத்தியில், நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதம அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. உருத்திரகுமாரன் அவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவராக உள்ளார்.

இருப்பினும் இவ்வமைப்பினை சரியான திசைவழியில் நகர்த்திச் செல்லும் பாரிய பொறுப்பு அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதனை உணர்நது அவர் செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி: ஒரு பேப்பர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.