லக்ஸர் ஈ தய்பா அமைப்பு இலங்கையில் பயிற்சி பெறவில்லை – ஜீ.எல்.பீரிஸ்

தென் ஆசியாவின் முன்னணி தீவிரவாத அமைப்புக்களில் ஒன்றான லக்ஸர் ஈ தய்பா அமைப்பு இலங்கையில் எவ்வித பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
லக்ஸர் ஈ தய்பா அமைப்பு இலங்கையில் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவின் பூனேவில் நடைபெற்ற ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மிர்ஷா ஹிமாயத் இலங்கையில் பயிற்சி பெற்றுக் கொண்டதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
 
குறிப்பாக குண்டு தயாரிப்பு தொடர்பில் தாம் கொழும்பில் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
எவ்வாறெனினும், இலங்கையில் எந்தவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களும் நிலவவில்லை எனவும், எந்த அமைப்பும் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.
 
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டதாகவும் தீவிரவாதிகளின் செயற்பாடு காணப்படுவதற்காக எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய புலனாய்வுத் தொடர்புகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொருளாதார நோக்கங்களை அடைவதற்காக சீனாவுடன் உறவுகளைப் பேணிய போதிலும், இந்தியாவுடனான நெருக்கத்தில் குழப்ப நிலை ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயற்பட எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.