சீமானுக்காக முதல்வரை சந்திப்பேன் ‐ சீமான் மாதிரி ஒரு உணர்வாளனை யாராலும் உருவாக்க முடியாது – தங்கர்பச்சான்

இன்னிக்கு இருக்கிற ஆயிரமாயிரம் வசதிகளை வெச்சு விஞ்ஞானி களை உருவாக்கலாம்… விசித்திர மனிதர்களைப் படைக்கலாம். ஆனால், சீமான் மாதிரி ஒரு உணர்வாளனை யாராலும் உருவாக்க முடியாது. அவரைக் கைது செய்து வைக்கிற அளவுக்கு அவர் கொலை செய்தாரா…

கொள்ளை அடிச்சாரா..? எட்டு வருஷத்துக்கு இந்தியாவையே நிர்வகிக்கிறதுக்கு தேவையான கோடிகளை சுவிஸ் வங்கியில் பதுக்கி வெச்சிருக்காங்களே… அவங்களை உள்ளே தள்ளணுமா? இல்லை, சட்டைப் பையில சல்லிப் பைசாகூட இல்லாம, ஒட்டுமொத்த தமிழினத்துக்காகவும் குரல் கொடுக்கிற சீமானை தள்ளணுமா? ‐ தொண்டை நரம்பு புடைக்க தங்கர்பச்சான் இப்படிப் பேசியது மும்பையில் உள்ள தாராவி ஏரியாவில். கடந்த 10‐ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் அனல் தெறிக்க தங்கர்பச்சான் பேசிய பேச்சு, அவர் தமிழகத்துக்கு வருவதற்குள்ளேயே இங்கே சூட்டைக் கிளப்பிவிட்டது. சரி, தங்கர் பேச்சின் சொச்ச சூட்டையும் கேட்டுவிடுவோம்…

நிலத்தையும் நிம்மதியையும் ஒருசேரப் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டுமே கடைசிப் பொருளாகப் பத்திரப்படுத்தியபடி ஈழத் தமிழினமே நாதியற்று அலைகிறது. உறவுகளுக்குக் கைகொடுக் கவோ, ஒன்றுபட்டு நிற்கவோ உரிமைகளை உணரத் தவறிய தமிழனால் முடியவில்லை. தொன்மையையும், துடிப்பையும் மறந்தவனாக அனைத்து அடையாளங்களையும் இழந்தவனாக தமிழன் மாறிவிட்டான். தனக்கென ஒரு சரியான தலைவனைத் தேர்ந்தெடுக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை. நமக்கான எதிரி வெளியில் இல்லை. ஒவ்வொரு தமிழனின் உயிரையும் வாக்குகளாக்கி, நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தராமல் ஏமாற்றி அலையும் நமது அரசியல் கட்சிகள்தான் தமிழினத்தின் எதிரிகள். தண்ணீர் பிரச்னை தொடங்கி தலையில் இடிவிழும் பிரச்னை வரை தமிழன் நிர்கதியாக நிறுத்தப்பட்டு இருக்கிறான். இனம்தான் முக்கியம் என நினைத்திருந்தால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராடி நமக்கான தேவைகளைத் தீர்க்க முடியும்.

நீர் வளத்தை இழந்ததால், விவசாய ஜீவன்கள் பிச்சைக்காரர்களாகி நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். வலை வீசினால்தான் வாழ்க்கை என பிழைப்பு நடத்தும் மீனவர்கள், சிங்களவனின் துப்பாக்கிக்கு பலியாகி உயிரைவிடுகிறார்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை தரையில் நசுக்கிக் கொன்றது போதாது என இன்றைக்கும் முகாமுக்குள் அடைத்துவைத்து மீத வெறியையும் தீர்த்துக்கொள்கிறது வெறி பிடித்த சிங்கள அரசு. இனத்தின் மீது விழும் இத்தனை துயரங்களை 10 கோடி தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்றால்… நாளைய வரலாறு காறித்துப்பாதா?

நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்டவர்கள்கூட தனி நாடாக அங்கீகரிக்கப்படுகிறபோது, இத்தனை கோடி தமிழர்கள் இருந்து என்ன புண்ணியம்? போகிற இடத்தில் எல்லாம் உதை வாங்கத்தான் இந்த இனமா? தமிழனோட தலைகளை வாக்குகளாக்கி மத்திய அரசின் காலடியில்வைத்து அதிகாரம் பெற்றுக்கொண்டு, பின் நம்மையே அழிக்கிற காரியத்தை ஒரு நிமிடம் மனதுக்குள் நினைத்துப் பார்த்தீர்களேயானால்… நம் எதிரிகள் யார் என்பது உங்களுக்குத் தெரியும் அய்யா அரசியல்வாதிகளே… தேர்தல் நேரத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூறுபட்டு நில்லுங்கள்… ஆனால், இனம், மொழி, மண் என தமிழனுக்குப் பிரச்னை வருகிறபோது தயவுசெய்து ஒன்றாக நில்லுங்கள். இதற்காக உங்கள் கால்களில் விழவும் தயாராக இருக்கிறேன்.

எது தேசியப் பாதுகாப்புச் சட்டம்? மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் பேசினால் பாய்வதுதான் தே.பா.ச‐வா? என தங்கரின் தடதடப்பு எகிற எகிற… கூட்டமும் பொங்கியது. செந்தமிழன் சீமானை வெளியில் எடுப்போம்… செந்தமிழ் ஆட்சியை வென்று எடுப்போம் என அங்கிருந்த இளைஞர்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க… தங்கரின் பேச்சு வழக்கமான பாணிக்கு மாறித் துள்ளி இருக்கிறது.

சீமான் மேல் தமிழக முதல்வர் கலைஞருக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அவரைப் பார்த்தும், அவர் தமிழைப் பார்த்தும் வளர்ந்தவங்கதான் நானும், சீமானும். சீமானை கலைஞர் எந்த அளவுக்கு நேசிக்கிறார்னு மத்தவங்களுக்குத் தெரியாது. ஆனா, அவரோட மனசை நல்லா அறிஞ்சு வெச்சிருக்கிற எனக்குத் தெரியும். சீமானை விடுவிக்கச் சொல்லி நான் முதல்வரை நேரில் சந்திச்சு கோரிக்கை வைக்கப் போறேன். உலகத் தமிழர்கள் சீமானை எப்படிப் பார்க்கிறாங்கன்னு அவர்கிட்ட உரக்கச் சொல்லுவேன். அவரைவிட்டா நாங்க சொல்றதுக்கு வேற ஆள் இல்லையே..  என தங்கர் முடிக்க… கூட்டமே கலங்கியது.

தங்கரின் பேச்சு முதல்வரின் மனதை அசைத்துப் பார்த்தால் சரிதான்.

நன்றி ‐ விகடன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.