இலங்கை அரசுக்கு எதிராக தீவிரமடையும் மாணவர் போராட்டங்கள்

இலங்கையில் அரசாங்கத்துக்கெதிரான மாணவர் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அதன் காரணமாக கடந்த இரண்டு மாத காலத்துக்குள் மட்டும் 176 மாணவர்களுக்கு வகுப்புகளில் பங்கு பற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 27 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக போராட்டங்களின் போது பொலிசாரால் தாக்கப்பட்டு நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மாணவர் போராட்டங்களை அடக்க வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் உயர் கல்வி அமைச்சும் , அரசாங்கமும் அதற்கென அடக்குமுறை சட்டத்துக்கொப்பான பகிடிவதை மற்றும் வன்முறைத் தடுப்பு சட்டத்தின் கீழும்ää பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் இலகுவில் பிணையில் வெளிவர முடியாதபடியான சட்ட ஏற்பாடுகள் இருப்பதன் காரணமாக அதனைப் பயன்படுத்தி மாணவர்களை பயமுறுத்தி, அடிபணிய வைக்க அரசாங்கம் முயற்சித்த போதிலும் மாணவர் போராட்டங்கள் தணிவதாக இல்லை.

அதற்கு மேலதிகமாக ஊவா-வெல்லஸ்ஸை பல்கலைக்கழகத்தில் எதுவிதமான தொழிற்சங்கங்களோää மாணவர் அமைப்புக்களோ உருவாக்கப்படாதவாறு தடுப்பதிலும் அரசாங்கம் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றது. அதற்கென கலாசார உத்தியோகத்தர்கள் எனும் பெயரில் அரசாங்கத்தின் உளவாளிகள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் அடக்குமுறைச் சட்டங்களின் பிரகாரம் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடி நின்று கதைக்க முடியாது தடுக்கப்படுகின்றனர்.
மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஆண் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைவதை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் என்பன மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

மாணவிகளை மட்டும் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள விடுதிகளில் தங்க வைத்து, மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் மாணவர் போராட்டங்களைத் தணிக்கும் வழி வகைகள் குறித்தும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

வயம்ப பல்கலைக்கழகத்தை அரசாங்கத் தரப்பு பிரதேச அரசியல்வாதிகள் இருவர் தமது அராஜகம் மூலம் ஆட்டிப்படைத்து வருகின்றனர்.

இவையனைத்துக்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மாணவர் போராட்டங்களை அடக்குவதில் மூர்க்கமான பொலிஸ் அதிகாரிகளாக பெயர் பெற்ற பொலிஸாரில் ஒருவரான மஹிந்த பாலசூரிய தற்போதைக்கு இலங்கையின் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுகின்றார். பல்கலைக்கழக மாணவர் போராட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் தாக்குதல்களின் பின்னணியில் அவர் செயற்பட்டதாக மாணவர்கள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவ்வாறாக அரசாங்கத்துக்கு மனம் குளிரும் வகையில் அடக்குமுறைää அராஜகங்களை மேற்கொண்டு வருவதன் காரணமாக இலங்கை பொலிஸ் வரலாற்றில் என்றுமில்லாதளவுக்கு பொலிஸ் மாஅதிபருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு 180 பேரளவிலான விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் கூட பொலிஸ் மா அதிபருக்கு இந்தளவு பாதுகாப்பு வழங்கப்பட்டதில்லை.

அந்த வகையில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள அராஜக அடக்குமுறைகளுக்கான கட்டியம் கூறும் நிகழ்வாகக் கூட இதனை நாம் நோக்கலாம். அதாவது பொலிசாரை ஏவிவிட்டு தமக்கெதிரானவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறை வழியை அரசாங்கம் தீவிரமாக நாடப் போகின்றது என்பதே அதன் அர்த்தமாகும். மாணவர் அமைப்புகளின் போராட்டங்களைக் கூட அந்த வழியிலேயே அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படப் போகின்றன

இப்படியாக மாணவர் போராட்டங்களை அரசாங்கம் அடக்க முயற்சித்தாலும், மாணவர்களும் அடங்கிப் போகும் நிலையில் இல்லை. நாளை முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்க அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

இதில் உள்ள இன்னுமொரு முக்கிய அம்சம் இம்முறை மாணவர் போராட்டங்களின் போது தமிழ் மாணவர்களின் பங்களிப்பும் பாரியளவில் இருப்பதுடன், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் 1989ம் ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக தமிழ் மாணவர்களின் உரிமைகள் குறித்து பகிரங்கமாக குரல் கொடுக்க முன்வந்துள்ளமையாகும். இது ஒரு பாராட்டத்தக்க விடயமாகும். அனைத்துப் பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் உந்துல் பிரேமரத்ன அந்த வகையில் குறிப்பிடத்தக்க முன்மாதிரியொன்றை வெளிக்காட்டி வருகின்றார்.

ஆரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் என்றாலும் கைது செய்து சிறையில் தள்ள அரசாங்கம் தயங்காது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அண்மையில் எச்சரித்திருந்ததனை கொஞ்சமும் சட்டை செய்யாத வகையிலேயே மாணவர்கள் தமது எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

1994ம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கடைசி கட்டத்தில் கூட அரசாங்கத்துக்கெதிரான மாணவர்கள் போராட்டங்கள் இதே வடிவில் தான் நடைபெற்றன. அன்றைய கட்டத்தில் அணி திரண்ட மாணவர்கள் இன்னும் பல அமைப்புகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் வெற்றி கண்டனர். அதன் பிரகாரம் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடனேயே பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமும்ää அதன் வழி உருவான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கமும் பதவிக்கு வந்தன.

இன்றைக்கு அந்த அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் பாரிய பங்காற்றிய மாணவர் அமைப்புகளுடன் இணைந்து ஊடக அமைப்புக்களும் அரசாங்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளன.

வெற்றி யாருக்கு? காலம் தான் பதில் சொல்லும்..!!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.