செயற்கை நியூரான்கள் தயாரிப்பு

மூளை வியாதிகளுக்கு விரைவில் தீர்வு! மூளை நமது உடலை இயக்கும் அதிகாரி. மூளையின் ஒரு செல் பாதிக்கப்பட்டாலும் அது தொடர்பான உடல் உறுப்புகளின் இயக்கமும் முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு மூளை செல்லும் முக்கியமானவை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மூளை செல்லை (நியூரான்) செயற்கையாக வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

நியூரான் என்பது மூளைக்கும், உடலுக்கும் தகவலைக் கடத்தும் செல்களாகும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி ஆய்வுக்குழுவினர் இந்த நியூரான் செல்லை உருவாக்கி உள்ளனர். உடலில் தோற்பரப்பின் அடியில் உள்ள செல்லை குறிப்பிட்ட 3 ஜீன்களைக் கொண்டு முடுக்கிவிட்டு நியூரான் செல்லாக உருமாற்றி உள்ளனர். இது வழக்கமான நியூரான்கள்போல உணர்வுகளை கடத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. ஒரு வாரத்தில் 20 சதவீத அளவில் வேலைகளை வெற்றிகரமாக செய்யும் வகையில் முன்னேறியது.

இதற்கு முன்னோடியாக எலிகளின் செல்களில் குறிப்பிட்ட வைரசை உட்செலுத்தி மாற்றங்களை ஏற்படுத்தி நியூரான்களைப் போல செயல்பட வைத்தனர். அதில் வெற்றி கிடைத்த பின்னரே மனிதனில் சோதித்துப் பார்க்கப்பட்டது. தற்போது அதிலும் வெற்றி கிடைத்துள்ளது. நியூரான் உற்பத்தி விஞ்ஞான உலகில் ஒரு அளப்பரிய சாதனையாக கருதப்படுகிறது.

குறிப்பிட்ட செல்களை வேறு வகை செல்லாக மாற்ற முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் நிர்பணமாகி இருப்பதால் ஸ்டெம் செல் இல்லாமலும் பல வியாதிகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. சித்தம் கலங்கிய நிலை, அல்சைமர், பார்க்கின்சன் போன்ற ஞாபக மறதி வியாதிகள் உள்பட மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகளுக்கும் எதிர்காலத்தில் இந்த நியூரான் செல்கள் முலம் தீர்வு காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.