மட்டக்களப்பில் மாவீரர் மற்றும் முன்னாள் போராளி குடும்பங்கள் புலனாய்வுத்துறையால் விசாரணை! தடுத்துநிறுத்துமாறு அரியநேந்திரன் கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள், படையினரிடம் சரணடைந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள், மாவீரர்களின் உறவினர்கள் தொடர்பான தகவல்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் திரட்டிவருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்ப மாவட்டத்திலுள்ள கிராமசேவகர்கள் ஊடாகவே இந்த விபரங்கள் திரட்டப்படுவதாகவும் அதன் பின்னர் பொலிஸாரும் இராணுவத்தினரும் குறிப்பிட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதாகத் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கும் இந் நிலையில், இவ்வாறான தேவையற்ற நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது. அத்துடன் இந்த மாவட்டத்தின் அச்சமான சூழ்நிலையே உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பட்டிப்பளை சம்பவம் தொடர்பிலும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். சட்டத்தைப் பேணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸாரே சிவிலியன்களைச் சுட்டுக்கொல்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பட்டிப்பளை முனைக்காடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பிலேயே தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

குற்றம் செய்தோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுவத்துவதே பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் செயற்பட முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தான் சிறிலங்கா அரசதலைவரை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.