ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், மதிப்பிற்குரிய நவநீதம் பிள்ளை அவர்கட்கு,வன்னியிலிருந்து ஒரு தமிழ்மகன் அனுப்பும் மடல்

navaneethampillay250_26072008ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், மதிப்பிற்குரிய நவநீதம்பிள்ளை அவர்கட்கு, வன்னியிலிருந்து போரின் கொடுமையையும், அவலத்தையும் அனுபவித்த ஒரு சாதாரண பொதுமகன் அனுப்பும் மடல்:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்,
மதிப்பிற்குரிய நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கட்கு,

                                                                         அம்மணி!  வன்னியில் இருந்து இம்மடலை தமிழ் இணையத்தளம் ஊடாக தங்களின் கவனத்திற்கு அனுப்பி வைக்கின்றேன்.

இம் மடலை எழுதுவது, போரின் கொடுமையையும், அவலத்தையும் அனுபவித்த ஒரு சாதாரண பொதுமகன் உங்களின் கவனத்திற்கு எந்தவொரு மனிதனும் முறையிடலாம், என்பதற்காக இம்மடலை சுருக்கமாக எழுதி அனுப்புகின்றேன்.

இங்கு நாளாந்தம் சாராசரி 30 தொடக்கம்- 40 வரை பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். 50 ற்கு மேல் காயப்படுகின்றார்கள், இது உண்மையான நிலைமை, இதை நீங்களும் அறிவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் இங்கு நடப்பவற்றை அறிக்கையாக விடுகின்றீர்கள். அதற்கு எனது நன்றிகள். ஆனால் அந்த அறிக்கைகளை மதிக்கக்கூடிய அரசாங்கம் இங்கு இல்லை. நீங்கள் அறிக்கை விட, அதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பறிக்கை விட, திரும்பவும் நீங்கள் அறிக்கை விட, இங்கு அறிக்கை யுத்தம் தான் நடைபெறுமே தவிர வேறு ஒன்றும் நடைபெறப் போவதில்லை. மாறாக வன்னியில் இருக்கின்ற மக்களின் இறப்பு வீதமும், ஊனமுற்றோரின் வீதமும் தான் அதிகரிக்கும்.

நீங்கள் உடனடியாகவும், அவசரமாகவும் செய்ய வேண்டியது, ஐ.நா சபைக்கு சொந்தமான படைகளை இலங்கைக்கு அனுப்பி உடனடியாக யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களையும், ஜ.நா சபை என்றால் என்ன? ஜ.நா சபையை எவ்வளவு தூரத்திற்கு மதிக்க வேண்டும் என்பதையும் இலங்கை அரசிற்கு புரியவைக்க வேண்டும்.

ஆனால் பான் கீன் மூன் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளும், ஒரு தலைப்பட்சமாகவும் செயற்படுகின்றார் போல் தெரிகின்றது. சில வேளை தனது தாய்நாட்டிற்கு கட்டுப்பட்டு நடக்கின்றாரோ தெரியவில்லை. இலங்கை எப்போதும் தங்களது நாட்டிற்கு தேவையானதொன்று என்பதற்காவும் அப்படி செயற்படலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

உலகில் எங்கும் நடந்திராத கொடுமைகள் எல்லாம் இங்கு நடைபெறுகின்றது. ஒரு நாளைக்கு ஒரு மனிதன் மூன்று வேளை உண்பது வழமை. ஆனால் இங்கு ஒன்றைவிட்டு ஒருநாளைக்குத் தான் ஒரு தரம் மட்டும் கஞ்சி குடிக்கலாம். கஞ்சி என்றால் உங்களுக்கு தெரியுமோ தெரியவில்லை, அரிசியும், தண்ணியும் கொதித்தது தான் கஞ்சி.

இங்கு இருப்பவர்கள் இறைவனிடம் மன்றாடுவது காயப்படக்கூடாது, இறந்து விடவேண்டும் என்றுதான். ஏன் என்றால் இங்கு மருந்துகள் இல்லை. காயப்பட்டால் அணு அணுவாக இறக்க வேண்டும் அந்த வேதனையை தாங்கமுடியாது. கால், கை இல்லாதவர்களுக்கு மயக்க மருந்து ஏற்றாமல் அவர்கள் பார்த்திருக்க வெட்டப்படும். கப்பல் வர பிந்தினால் அவர்கள் இறந்து விடுவார்கள். கப்பல் வராமலும், மருந்துகள் இல்லாமலும் எவ்வளவு உயிர்கள் இறந்து போய்விட்டன இங்கு நடக்கின்ற துன்பங்களை எழுத்தில் எழுதமுடியாது.

நீங்கள் முடிவெடுக்க பிந்துகின்ற ஒவ்வொரு நிமிடமும் இங்கு ஒரு உயிர் பிரிந்து செல்கின்றது, என்பதை மனதில் வைத்து உடனடியாகவும், அவசரமாகவும் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்கள் மூலமாக எங்களுக்கு நல்லதொரு அமைதியையும், சமாதனத்தையும் பெற்றுத் தருவார் என்று ஆண்டவரிடம் இறைஞ்சிக் கேட்கின்றேன்.

நன்றி.

இப்படிக்கு
வன்னியில் இருந்து தமிழ்குடிமகன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.