சர்வக் கட்சிக் குழுவில் ஐ.தே.க. கலந்து கொள்ளாததேன்?

ravik_200px_09_19சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் அரசியல் தீர்வின் மாதிரியை வெளியிட்டால் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி தனது யோசனையை முன்வைக்கும்” என்று கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பங்குகொள்வதில் அர்த்தமில்லை என்று உணர்ந்ததன் பின்னரே அதில் தமது கட்சி கலந்து கொள்வதில்லை எனத் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் கூறினார். இனப்பிரச்சினை தீர்வுத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசிய கட்சி ஏன் கலந்துகொள்ளாமல் இருக்கின்றது என அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜனாதிபதி சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்ததும் ஐக்கிய தேசிய கட்சியும் அதில் இணந்துகொண்டது. அத்துடன் எமது கருத்துக்களையும் நாம் தெரிவித்து வந்ததுடன் குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் வழங்கி வந்தோம்.

பின்னர் பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்வதில் அர்த்தம் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். அதன் பின்னரே அதில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்தோம்.

காரணம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் எந்தவிதமான ஆக்கபூர்வமான விடயங்களும் இடம்பெறவில்லை. எனவே அதன் கூட்டங்களில் கலந்துகொள்வதில் அர்த்தமில்லை என்பதை ஐக்கிய தேசிய கட்சி உணர்ந்து கொண்டது எனினும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தால் ஐக்கிய தேசிய கட்சி தனது ஆலோசனையை முன் வைக்கும்.

தமிழ் மக்களுக்குத் தீர்வாக அரசாங்கம் எதனைக் கொடுக்கப் போகின்றது என்பதை நாங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அதன்பின்னர் எமது யோசனைகளை நாமும் முன்வைப்போம். இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஆரம்பத்திலிருந்து ஐக்கிய தேசிய கட்சி தெளிவான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றது. அரசாங்கத்தின் தீர்வு முறைமை எவ்வாறு அமையும் என்பதனையே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.