இறுக்கமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிகளும் களமுனை மாற்றங்களும்

200px-flag_of_sri_lanka_svgஇலங்கையின் பொருளாதாரம் பாரியதொரு நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. அதன் பொருளாதார கட்டமைப்பை காப்பாற்ற சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரப்பட்டுள்ளது.

எனினும் இது ஒரு தற்காலிக நிலையே தவிர முற்றான மீட்சி அல்ல என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. ஏனெனில் இலங்கை அரசின் தற்போதைய நிதி நெருக்கடிகளை தணிப்பதற்கு 25 பில்லியன் டொலர்கள் தேவை.

 

உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கூறியிருந்தது. தனது பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களையும் அது சமர்ப்பித்திருந்தது. ஆனால் உலகின் பொருளாதார வளர்ச்சிகண்ட நாடுகளின் இந்த சரிவு, ஆசிய நாடுகளை கடுமையாக பாதிக்கலாம் என்ற கருத்தையே உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் முன்வைத்திருந்தனர். அவர்கள் கூறியது போலவே உலகின் இந்த பாதிப்புக்கள் ஆசிய நாடுகளை இரண்டு மடங்கு அதிகமாக பாதித்துள்ளது.

 

இந்த நிலையில் பிற்ச் தரப்படுத்துடல் (ஊடிtஞிட கீச்tடிணஞ்ண்) வெளியிட்டுள்ள தனது தரப்படுத்துதலில் இலங்கை அரசின் முதலீட்டு துறையை தரமிறக்கியுள்ளது. ஆனால் பிற்ச் தரப்படுத்தல் கணிப்பு தவறானது என அரசாங்கத் தரப்பு வதாடிய போதும் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தற்போதைய நிலைமையின்படி அரசு பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகைக்கான மீள செலுத்துதல் பணம், மற்றும் அதன் சேவைகளுக்கான பணம் என்பவற்றை செலுத்துவதற்குக்கூட அரசிடம் போதிய நிதி இல்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

 

அரசுக்கு கடன் கொடுத்த நாடுகளிடம் மீள செலுத்தும் தொகைகளை சிறிது காலம் நிறுத்தி வைக்கும் படி கோரலாமா? என்ற திட்டத்தையும் அரசு தற்போது பரிசீலித்து வருகின்றது. மேலும் ஆசியாவின் பெரிய நாடுகளாக விளங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து நிதியை கடனாக பெற்று கொள்ளலாமா என்ற திட்டங்களையும் அரசு பரிசீலித்து வருகின்றது. எனினும் அவை வட்டி விகிதங்கள் அதிகமானவை என்ற அச்சமும் அரசுக்கு உண்டு.

 

பிற்ச் அமைப்பின் தரப்படுத்தலின் விளைவு நீண்டகால பொருளாதார பின்னடைவை அரசுக்கு ஏற்படுத்தும். ஏனெனில் முதலீடுகளை மேற்கொள்வதற்கோ அல்லது வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கோ இலங்கை ஏற்ற இடம் அல்ல என்ற தகவலை தான் இந்த அமைப்பின் தரப்படுத்துதல் உலகின் முதலீட்டாளர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளது. அதாவது இது இலங்கையின் வெளியுலக நிதி நிலைமை தொடர்பான கணிப்புக்களை வீழ்ச்சியடைய செய்யும்.
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3.56 பில்லியன் டொலர்களாக இருந்த இலங்கையின் கையிருப்பு கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 1.75 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பிற்ச் (ஊடிtஞிட) தனது தரப்படுத்தலில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் இந்த வீழ்ச்சிக்கு காலம் காலமாக இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் போர் கொள்கைகள் தான் காரணம்.

 

போரினால் கடந்த காலங்களில் இலங்கை அரசு 200 பில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹென அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த தொகையானது நேரடியாக போரினால் இழக்கப்பட்ட தொகை. ஆனால் போரினால் ஏற்பட்ட பொருளாதார அழிவுகள் மிக மிக அதிகம்.

 

அதன் தாக்கம் தான் தற்போது இலங்கை அரசின் பொருளாதாரத்தின் மீது பேரிடியாக இறங்கியுள்ளது. பொருளாதாரம் சீரழியுமாக இருந்தால் இலங்கை அரசினால் தற்போதைய போரை ஒரு எல்லைக்கு அப்பால் தொடர முடியாது.
இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு நிற்கும் இந்த வேளையில் வன்னி களமுனையும் எதிர்பார்க்காத பல திருப்பங்களை கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. யாரும் எதிர்பார்க்காத புதுக்குடியிருப்பு களமுனையை தமது தாக்குதல் களமுனையாக தெரிவு செய்துள்ள விடுதலைப்புலிகள் அங்கு பாரிய மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியிலும், இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் புதுக்குடியிருப்பு நகரத்தை கைப்பற்றும் முயற்சிகளில் சிரமங்களை சந்தித்த படைத்தரப்பு கடந்த வாரம் மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளதாகவே தெரிகின்றது. இந்த மோதல்களின் போது புதுக்குடியிருப்பு நகரம் இரு தரப்பிடமும் கைமாறிய வண்ணம் உள்ளது.

 

எனினும் நன்கு திட்டமிடப்பட்டு பலப்படுத்தப்பட்ட புதுக்குடியிருப்பு களமுனைகளுக்குள் படையினர் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் திட்டத்தையே விடுதலைப்புலிகள் கையாண்டு வருவதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு நோக்கி தென்பகுதியால் முன்நகர்ந்த 53 ஆவது தாக்குதல் படையணி, நடவடிக்கை படையணி எட்டு மற்றும் அதற்கு துணையாக நகர்ந்த நடவடிக்கை படையணி 3 என்பன மீது விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டுள்னர். இந்த படையணிகளின் நகர்வுகளை இலகுவாக்கும் நோக்கத்துடன் 58 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட் படையணிகள் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளால் நகர்வை மேற்கொண்டிருந்தன. கடுமையான மோதல்களின் பின்னர் இந்த படையணிகள் கடந்த 3 ஆம் திகதி புதுக்குடியிருப்பு சந்தியை அடைந்த போதும் விடுதலைப்புலிகளின் உக்கிரமான வலிந்த தாக்குதல்களை தொடர்ந்து அவர்கள் புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி வெளியேறியிருந்தனர்.

 

எனினும் மீண்டும் கடந்த 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தின் 53 ஆவது டிவிசன் மற்றும் நடவடிக்கை படையணி எட்டு என்பன புதுக்குடியிருப்பு சந்தி நோக்கிய நகர்வில் ஈடுபட்ட போது மீண்டும் அங்கு கடுமையான மோதல்கள் வெடித்திருந்தன.

 

இதனிடையே புதுக்குடியிருப்பு சந்தியை மையப்படுத்தி மோதல்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயம். புதுக்குடியிருப்புக்கு வடக்காக சாலை பகுதியில் இருந்து நகர்வை மேற்கொண்டு வரும் 55 ஆவது டிவிசன் படையணிகள் மீது விடுதலைப்புலிகளின் கொமோண்டோ அணிகள் ஊடறுப்பு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

 

கடந்த 5 ஆம் திகதி அதிகாலை 55 ஆவது படையணியின் 5 ஆவது கஜபா பற்றலியன் படையினரின் நிலைகளை ஊடறுத்து, அதன் பின்னணி நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளின் கொமோண்டோ அணிகள் வழங்கிய கட்டளைகளுக்கு அமைய மறுநாள் வெள்ளிக்கிழமை விடுதலைப்புலிகளின் அணிகள் வலிந்த தாக்குதலை படையினரின் முன்னணி நிலைகளை ஊடறுத்து மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்களை கேணல் லோரன்ஸ் கேணல் கீர்த்தி மற்றும் கேணல் சொர்ணம் ஆகியோர் வழிநடத்தியிருந்தாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

 

இந்த தாக்குதல்களின் போது 58 மற்றும் 55 ஆவது படையணிகளின் வசம் இருந்த குடா பகுதிகள் பல விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதை படைத்தரப்பு ஒத்துகொண்டுள்ளது. குடா கடல் பகுதிகளை கைப்பற்றிய விடுதலைப்புலிகள் பிரதான தரைப்பகுதியில் உள்ள இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

 

விடுதலைப்புலிகளின் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து 58 ஆவது படையணியுடன் இணைந்து செயற்பட்டுவரும் 2 ஆவது கொமோண்டோ றெஜிமென்ட் தாக்குதல் படையணி அங்கு நகர்த்தப்பட்ட போதும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட பாதுகாப்பு நிலைகளில் சிலவற்றை மட்டுமே கைப்பற்ற முடிந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

 

இந்த மோதல்களில் இராணுவத்தின் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் பலத்த இழப்புக்களை சந்தித்தும் வருகின்றன. விடுதலைப்புலிகளும் இராணுவத்தின் பின்னணி நிலைகளுக்குள் நடைபெற்ற சமர்களில் கொல்லப்பட்ட தமது உறுப்பினர்களின் சடலங்களை கைவிட்டே நகர்ந்து வருகின்றனர்.

 

இந்த மோதல் தொடர்ந்தால் 55 ஆவது படையணி இழப்புக்களை சந்திக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படையணி பிரதான நிலப்பகுதியை தவிர்த்து சுண்டிக்குளம் தொடக்கம், சாலை வரையிலுமான ஒடுங்கலான கடற்கரையோரம் நிலைகொண்டுள்ளது. இந்த பகுதியை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் பகுதி சதுப்பு நிலமும், நீரேரியும் உடைய பகுதியாகும். சுண்டிக்குளம் தொடக்கம் சாலை வரை சமர் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனிடையே விடுதலைப்புலிகளின் வேறு இரு அணிகள் கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை விசுவமடு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது. முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படையணியின் முன்னனி நிலைகளை ஊடறுத்து அதிகாலை 3.00 மணிக்கு விடுதலைப்புலிகளின் அணி ஒன்று தாக்குதலை நடத்திய அதே சமயம் 572 ஆவது பிரிகேட் படையினர் மீது விசுவமடு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன.

 

சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த சமரின் இழப்புக்கள் தொடர்பாக படைத்தரப்பு தகவல்களை வெளியிடவில்லை.

 

இருந்த போதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) 58 ஆவது படையணி நிலைகொண்டிருந்த தேவிபுரம் பகுதி மீது 600 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நிகழ்த்தி ஊடுருவியிருந்ததாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்திருந்தது. இந்த மோதல்களைத் தொடர்ந்து 200 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் விசுவமடு பகுதிக்குள்ள ஊடுருவியதுடன், தேராவில் பகுதியில் அமைந்திருந்த படையினரின் பீரங்கி தளத்தையும் கைப்பற்றியதாக படைத்தரப்கை ஆதாரம் காட்டி கொழும்பு இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

 

கடந்த புதன்கிழமை (11) முள்ளியவளை, குப்பிளான்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான சமர் நடைபெற்றுள்ளதாக இராணுவத்தரப்பு மீண்டும் அறிவித்திருந்தது. ஆனால் குப்பிளான்குளம், முள்ளியவளை என்பன படையினரால் சில மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

 

மேலும் கடந்த திங்கட்கிழமை (09) தொடக்கம் வன்னியில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக படையினரின் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பல பாலங்களும், பதுங்குகுழிகளும் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களை அகற்றுவதிலும் அதிக சிரமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறுகிய நிலப்பரப்பினுள் செறிவாக வாழும் மக்களுக்கும் கடும் மழை பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. ஏற்கெனவே எறிகணை வீச்சுக்கள் மற்றும் வான்குண்டு தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துவரும் இந்த மக்கள் மழை காரணமாக தொற்று நோய்களுக்கும் இலக்காகலாம் என்ன அச்சம் தோன்றியுள்ளது.

 

தற்போதைய மோதல்களை கருதும் போது பெருமளவான மோதல்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுவரும் அரசாங்கம் படைத்துறை ரீதியாக பாரிய தொரு வீழ்ச்சியை சந்திக்குமாக இருந்தால் அரசு முழு போரையும் இழக்கும் நிலைக்கே தள்ளப்படும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.