வன்னியில் இன்று 8 தமிழர்கள் படுகொலை; மருத்துவமனையும் செஞ்சிலுவைச் சங்கமும் இலக்கு: நேற்றைய தாக்குதலில் தேவாலயம் சேதம்

வன்னிப் பகுதி மீது நேற்றும் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் மருத்துவமனை, தேவாலயம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிமனை என்பன இலக்கு வைக்கப்பட்டன. இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணிமனையினை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு முன்பாக இன்று சிறிலங்கா படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள், இராசரத்தினம் (வயது 48) மற்றும் ஆர்.பிரதீபன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோம்பாவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம் பகுதியை நோக்கி இன்று முழு நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

உடையார்கட்டுப் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தேவிபுரம் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வலைஞர்மடம் பகுதியை நோக்கி நேற்று இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.

கோம்பாவில் பகுதியை நோக்கி நேற்று இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த கிறிஸ்தவ தேவாலயம் நோக்கி நேற்று இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது அந்த தேவாயலயம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.