இலங்கை விவகாரத்தை ஐ.நா. சபையின் 26 ஆம் திகதிய கூட்டத்தில் ஆராய சீனா எதிர்ப்பு; முடிவு இன்று தெரிய வரும்

800px-flag_of_the_peoples_republic_of_china_svgஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எதிர்வரும் 26 ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகிய போதிலும் சீனா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதால் அந்த வாய்ப்பு அனேகமாக அடிபட்டுப் போய்விட்டதாக நேற்றிரவு கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவித்தன.

ஆஸ்திரியா, மெக்சிக்கோ, கொஸ்ராறிக்கா உட்பட பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத பல நாடுகள் இலங்கை விவகாரத்தை மீண்டும் பாதுகாப்புச் சபையில் ஆராய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

“மற்றும் அலுவல்கள்” என்ற தலைப்பில் இலங்கை விவகாரத்தை கவனயீர்ப்பு விடயமாக நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான முன் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் அதற்கு முன்னோடியாக “மற்றும் அலுவல்கள்” என்ற அட்டவணையில் சேர்ப்பதற்கு மற்றும் பல நாடுகளும் ஆதரிக்க விருப்பம் தெரிவித்திருந்தன என்று அறியப்படுகிறது.

ஆனால், இலங்கையில் சிவிலியன்கள் சம்பந்தப்பட்ட நிலைமை குறித்து ஆராய்வதை மிகக் கடுமையாகத் தான் எதிர்ப்பதாக சீனா அறிவித்திக்கிறது. “இலங்கையில் நடைபெறுவது வெறும் உள்நாட்டு விடயம்” அதனால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. எனவே அந்த நாட்டின் விவகாரத்தை பாதுகாப்புச் சபையில் எந்த வடிவத்திலும் ஆராயவேண்டியதில்லை என்று சீனா நேற்றுக் கருத்து வெளியிட்டது.

இதே வாதத்தை முன்வைக்குமாறு பாதுகாப்புக் கவுன்ஸிலில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய நாடுகளிடம் ஐ.நாவில் உள்ள இலங்கை அதிகாரிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

எனினும் இது விடயத்தில் ஏனைய நிரந்தர அங்கத்தவர்களின் நிலையைப் பொறுத்தே தீர்க்கமான முடிவு இன்று 20 ஆம் திகதி தெரிய வரும் என்று கூறப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.