மனிதபிமான நிலைகள் மோசமடைவது குறித்து அவுஸ்திரேலியா கவலை

2143ss-jவடக்கில் இருதரப்பு மோதல்களுக்கு மத்தியில் பல்லாயிரக்ணக்கான பொதுமக்கள் சிக்குண்டுள்ள நிலையில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவது குறித்து அவுஸ்திரேலியா மிகுந்த கவலையடைந்துள்ளது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

வட பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே உக்கிர மோதல்கள் நடைபெறும் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் தொடர்ந்தும் சிக்கியுள்ள நிலையில், அப்பிரதேசங்களில் நிலவும் மிக மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து அவுஸ்திரேலியா மிகுந்த கவலையடைந்துள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு விவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார்.

ஸ்டீபன் ஸ்மித்தின் அலுவலகத்தால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்து அந்த அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்ததாவது: இந்நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை மிகுந்த அக்கறை செலுத்தி வருவதை நாம் வரவேற்கிறோம். மேற்படி மோதல்களில் அதிகளவான சிவிலியன்கள் காயமடைந்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் எமது கவலையை பகிர்ந்து கொள்கிறோம். அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதுடன், குறிப்பிட்ட சிறிய பிரதேசத்தில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

கடந்த 10ஆம் திகதி தென்னிலங்கையில் மத ஊர்வலமொன்றில் அமைச்சர்களையும் ஏனையவர்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவுஸ்திரேலியா தனது மனப்பூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்படும் பயங்கரவாத யுக்திகளை அவுஸ்திரேலியா கண்டிக்கிறது. அத்துடன், தமது கட்டுப்பாட்டின் கீழ் எஞ்சியிருக்கும் பிரதேசங்களிலுள்ள சிவிலியன்கள் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுக்கிறது.

மோதல்கள் நடைபெறும் வலயத்திலிருந்து சிவிலியன்கள் சுதந்திரமாக நகர்வதைத் தடுப்பதற்கு எந்தவொரு நியாயஸ்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மேலும் உயரிழப்புகள் ஏற்படாதிருப்பதை தவிர்க்கும் வகையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். மோதல்கள் நடைபெறும் வலயத்திலிருந்து சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்படி மோதல்கள் நடைöறும் இடங்களில் சிவிலியன்கள் இருக்கும் வரை சிவிலியன்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் தாக்குதல்கள் நடத்தப்படாதிருப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாடு மோதல்களில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் உள்ளது. சிவிலியன்கள் எங்கிருப்பினும் அவர்கள் இருக்கும் பிரதேசங்களிலிருந்தோ அன்றி அப்பிரதேசங்களின் மீதோ தாக்குதல் எதுவும் நடத்தப்பட கூடாது.

போர் இடம்பெறும் பிரதேசங்களில் உள்ளவர்களின் ஆரோக்கியம் தொடர்பிலும் அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதுடன் அப்பிரதேசங்களுக்கு சரியான முறையில் உணவு மற்றும் மருந்து விநியோகங்கள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு உடனடி முன்னுரிமை கொடுக்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கிறது.

மோதல்கள் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து காயமடைந்தவர்கள் மற்றும் சுகவீனமுற்றவர்களின் வெளியேற்றத்துக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். இந்த இடம்பெயர்வுகளும் உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உணவு வாகனங்கள் மற்றும் கப்பல்கள் மூலமான விநியோகங்களும் தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

தமிழர்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் இணைத்துக் கொள்ளக் கூடிய வகையில் சாத்தியமான அரசியல் சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம், அனைத்து இலங்கையர்களதும் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கு இணங்க அரசியல் தீர்வொன்று எட்டப்படுவது இலங்கையின் நீண்ட கால பாதுகாப்பிற்கும் சுபீட்சத்திற்கும் அத்தியாவசியமானதாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.