சிறிலங்கா அரசு கருணா மீது அக்கறை – பிள்ளையான் மீது??

mahinda2020karuna2020pillayan20kuluகருணா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது சிறிலங்கா அரசு பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் குழுவைவிட கருணா தலைமையிலான ஆயுதக்குழுவையே தமது செல்லப்பிள்ளையாக வளர்த்து வருவதோடு அக்குழுவையே முதன்மைப்படுத்தியும் வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களிலிருந்து பிள்ளையான தலைமையில் செயற்பட்டு வந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆயுதக்குழுவின் முகாம்கள் சில அகற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு நகரில் தாமரைக்கேணி மற்றும் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையான் குழு முகாம்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசின் அழுத்தமும் காரணமாகவும் கருணா குழுவினர் தொடர்ந்தும் ஆயுதங்களுடன் நடமாடும் நிலையில் அவர்களினால் தங்களது உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையின் காரணமாகவும் பிள்ளையான் தனது முகாம்களை குறைத்துவருவதாகவும் தெரிகின்றது.

இதேவேளையில், ஏற்கனவே கருணா தலைமையிலான ஆயுதக்குழு முகாம்கள் தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசில் அலுவலகங்களாகவும் செயற்பட்டுவரும் நிலையில் இவ்வலுவலகங்கள் சில புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி அங்கு ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக புலிகள் அறிவித்திருந்தனர்.

புலிகளின் தாக்குதல்களுக்கு தமது அலுவலகங்கள் இலக்காகலாம் என்ற அச்சம் மற்றும் பாதுகாப்பின் நிமிர்த்தமும் கருணா குழுவின் முகாம்களாகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் அலுவலகங்களாகவும் செயற்பட்டு வந்த செட்டிபாளையம் மற்றும் பெரியகல்லாறு போன்ற சில முகாம்களும் மூடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.