இலங்கை அரசாங்கம் சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் ‐ ஐநா பாதுகாப்புப் பேரவை தலைவர்: சீனா இரண்டாவது தடவையாக தடுப்பு

un-goodஇலங்கை அரசாங்கம் சிவிலியன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றுக்கு இணங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கை குறித்து விவாதிக்கப்படுவதனை சீனா இரண்டாவது தடவையாக தடுத்து நிறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்காத நாடுகளான ஒஸ்ட்ரியா, மெக்ஸிக்கோ மற்றும் கொஸ்டாரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை விவகாரம் குறித்து பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தன.
 
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அமர்வுகளின் போது இலங்கை விவகாரம் ஏனைய விடயங்கள் என்ற தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
குறித்த நாடுகளின் வேண்டுகோளை பல உறுப்பு நாடுகள் ஏற்றுகொண்டிருந்த போதிலும், சீனா இந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது.
 
இலங்கையின் சிவிலியன் நிலைமைகள் குறித்து பாதுகாப்பு பேரவையில் பேச வேண்டிய அவசியமில்லை என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
 
இலங்கை விவகாரம் உள்நாட்டு பிரச்சினை எனவும், அது உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.