பலவந்தமாக ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது ‐ ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்

tissa3பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் கட்டயப்படுத்தப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரியான ரஸாக் என்பவரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒப்புதல் வாக்குமூலத்தை தாம் எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலம் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எழுதப்பட்டது என்றும், தமது முதன்மை மொழியான ஆங்கிலத்தில் வாக்குமூலத்தை எழுத அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் சார்ஜன்ட் ரஸாக்கின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் வாக்குமூலம் எழுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது வாக்கு மூலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை தாம் தீர்மானிக்கவில்லை எனவும், அதனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை நிற்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆரம்ப காலம் மூலம் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சமூகம் சார் பிரச்சினைகளுக்காக தாம் குரல் கொடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அங்கம் வகித்த காணாமல் போனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்ற அமைப்பிற்கு பல்வேறு வழிகளில் ஊடக ரீதியான பங்களிப்பை தாம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதியும், வாசுதேவ நாணயக்காரவும் எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து போராட்டங்களை வழிநடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் அவலங்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து அவற்றை ஜெனீவாவிற்கு எடுத்துச்செல்ல தாம் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விடயங்கள் குறித்து தாம் தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த போதிலும் அவை பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் தாம் மேற்கொண்ட ஊடகம் சார் நடவடிக்கைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை சட்டத்திற்குப் புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் நாட்டி அவசரகால சட்டம் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரை விடுதலை செய்ய தாம் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசியல் ரீதியான தலைமைத்துவம் வழங்கப்பட்ட அமைப்பிலேயே தாம் முதலில் பணியாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப்புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், இந்திய அமைதி காக்கும் படையினர் மற்றும் ஏனைய துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக நிர்க்கதியான சிறுவர்கள் உரிமைகளுக்காக தாம் குரல் கொடுத்து வந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தம்மிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் முழுக்க முழுக்க பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் அழுத்தம் காரணமாக பெற்றுக்கொள்ளப்பட்டதென ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 23ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆலோசகர் வாசுதேவ நாணயக்காரவிற்கு உயர்நீதிமன்ற நீதவான் தீபாலி விஜேசுந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.