எதிரியின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் நடந்தேறவும் இல்லை, இனி நடக்கப்போவதும் இல்லை : சி.இளம்பருதி

ilamparuthi_02_04_06_09எதிரியின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் நடந்தேறவும் இல்லை, இனி நடக்கப்போவதும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

எதிரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது முகம் கொடுத்து நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றோம்.

எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றனர். நிலங்களை நாம் இழந்தது நெருக்கடியை ஏற்படுத்துகின்றதுதான். இதனை எதிரி தனது பெருவெற்றியாக பரப்புரை செய்கின்றான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அண்மைய நாட்களிலும் சிங்களப் படைகளின் முன்னணிப் படைகள் பாரிய சிதைவுகளை சந்தித்திருக்கின்றன. பாரிய உயிரழிவுகளை சந்தித்திருக்கின்றன.

அவர்களின் முன்னணிப் படைகள் சிதைவடைந்து கொண்டிருக்கின்றன. இதனைச் சிங்களப் படைத்தரப்பு எதிர்பார்க்கவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் நடந்தேறவும் இல்லை. இனி நடக்கப்போவதும் இல்லை.

படை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எமது உறுதியான நிலைப்பாட்டில் எமது மக்களின் வளமான எதிர்காலம் நோக்கிய திருப்பங்கள் ஏற்பட்டே தீரும்.

உயிரும் உடலும் போல் ஒன்றாக நிற்கும் நாம் இன்னும் பற்றுறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரண்டு முறியடிப்போம்.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் கொடுத்திருக்கின்ற உயர் அழுத்தத்தை தாக்குப் பிடிக்கமுடியாமல் மக்கள் சிலர் எதிரிகளின் பிடிக்குள் செல்கின்றனர். அவர்கள் எதிரியின் சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். இதற்காகவா இந்தளவு துன்ப துயரங்களை இதுவரை காலமும் பட்டோம்.

உறுதியாக நாம் விடுதலையை வென்றெடுக்கும் காலம் எல்லா வகையிலும் கனிந்து வருகின்றது. நெருக்கடிகள் இருக்கின்ற போதிலும் நமது மக்கள் அவற்றை பொறுத்து அவலங்களின் மத்தியில் வாழ்கின்ற நிலைமை பெரும் விடுதலைப் பங்களிப்பாகும்.

புதுக்குடியிருப்பு நகர் பிடிப்பு, விடுதலைப் புலிகள் அழிப்பு என்ற எப்போதோ நடந்து முடிந்திருக்க வேண்டிய சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரல்களை நாம் சில தந்திரோபாய ஊடுருவல் தாக்குதல் நடவடிக்கைகளில் தகர்த்துள்ளோம்.

எதிரியின் நடவடிக்கைக் காலம் காலக்கெடுக்களை தாண்டி படையினரின் இழப்புக்களை அதிகமாக்கி அவர்களின் களப் படைக் கட்டமைப்புக்களில் சிதைவுளை ஏற்படுத்தி அவர்களின் உளவுரணை வீழ்த்தி வருகின்றோம்.

கடைசிக் கட்டமாக சேடம் இழுத்த நிலையில்தான் படையினர் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அவர்களின் நகர்வுகளை தேக்கி தாக்குப்பிடித்து தொடர்ந்து பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி உளவுரணை உடைத்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கு எமது மக்களின் முழுப்பங்களிப்பும் உண்டு.

நேற்று முன்நாள் (புதன்கிழமை) அதற்கு முன்நாள் புதுக்குடியிருப்பின் நான்கு முனைகளில் உச்சகட்ட பலத்துடன் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நகர்வுகள் மீதான முறியடிப்புத் தாக்குதல்களில் 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவில் காயமடைந்துள்ளனர்.

இந்த நாட்களுக்கு முதல் மூன்று நாட்களில் 480 படையினர் கொல்லப்பட்டது எதிரியாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். இவை எல்லாம் படையினரின் உளவுரணை உடைக்கும் தாக்குதல்களாகும். நாம் ஒரு வலுவான இயக்கம். இலகுவில் எம்மை அழித்துவிடலாம் என எதிரி கணக்குப் போட்டு விடலாம் என நினைக்கின்றான்.

சிறிலங்கா சொல்வது போல நாம் 17 சதுர கிலோ மீற்றர்களுக்குள் உள்ள இயக்கம் அல்ல. தமிழ் மக்கள் இருக்கும் இடம் எங்கும் வியாபித்து நிற்கும் உலகு எங்கும் கூட வியாபித்து தமிழ் மக்களின் உள்ளங்களின் உணர்வாக இருக்கும் விடுதலை அமைப்பு.

எம்மை இலகுவில் அழித்து விடலாம் என்ற எதிரியின் கணக்கை தகர்க்கும் வல்லமை எம்மிடம் உண்டு. அதனை நாம் உறுதியாகச் செய்வோம். எவரும் அஞ்சவோ கலங்கவோ ஐயுறவோ தேவையில்லை. உறுதியுடன் தளராது குழப்பம் இல்லாது செயற்படுங்கள். எதிரியின் தாக்குதல்களில் உங்களின் உயிர்களை காத்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார் சி.இளம்பருதி.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.