தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரிக்கக் கோரி நியூசிலாந்தில் ‘உரிமைப்போர்”

img_5511தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சர்வதேசம் அங்கீகரிக்கக்கோரி நியூசிலாந்தில் ‘உரிமைப்போர்” நடாத்தப்பட்டுள்ளது.

ஒக்கிலாந்து நகரில்  நேற்று சனிக்கிழமை (21.03.2009) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மக்கள் பெரும் திரளாக வந்து தங்கள் உரிமைக்கான குரலை வெளிப்படுத்தினர்.

‘தமிழீழ விடுதலைப் புலிகள் எமது பாதுகாப்பு அரண்”

‘எமக்குத் தேவை தமிழீழம்”

‘பிரபாகரன்தான் எமது தலைவர்”

என்ற பல கோசங்களையிட்டவாறு மக்கள் ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

இங்குள்ள சிங்களவர்கள், இது நடைபெறுவதற்கு முன்பதாக நியூசிலாந்தின் ஒக்கிலாந்து நகரத்தின் பிரதான வீதிகளில் தமது வாகனங்களில் சிங்கக் கொடியையும் நியூசிலாந்து கொடியையும் இணைத்தவாறு வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசீலாந்து தமிழ் மக்கள் இந்த ‘உரிமைப்போரில்” , தாயகத்தில் உணவு மருந்து வசதி இன்றி அல்லல்படும் மக்களின் அவலத்தையும் போரின் கொடுமைகளையும் சித்தரிக்கும் புகைப்படங்களையும் பதாகைகளையும் கொண்டுசென்றனர்.

நியூசீலாந்தே எமக்கு உதவு” ‘உலகமே எமக்குத் தேவை சமாதானம்” எனவும் கோசமிட்டனர். இதில் பங்குபற்றிய நியூசீலாந்துவாழ் தமிழ் மக்கள் முதன்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழீழத் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இங்குள்ள வேறு இனத்தவர்களும் இவர்களுடன் இணைந்துகொண்டு தங்கள் ஆறுதலைiயும் ஆதரவையும் தெரிவித்தனர். பேரணியின் இறுதியின்போது, நியூசீலாந்து தமிழ் சங்கம் சார்பாக டாக்டர். சிவா வசந்தன் உரையாற்றினார்: ‘ஐ.நா இன் செயலாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிங்கள அரசை உலுக்கியுள்ளது.

அதனால், அனைத்து நாடுகளிலுமுள்ள சிங்களவர்களை எமது போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு வற்புறுத்தி வருகிறது. இதனை நாம் எம் கண்முன்னே காணுகிறோம். எனவே, புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடைந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக நின்று தமிழீழத்தை வென்றெடுக்கவேண்டும். இந்திய அரசு ஏப்பிரல் 14 ஆம் திகதிக்கு முன் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கேட்டுக்கொண்டதையடுத்து சிங்கள அரசு கொடூரமாக மேலும் பொதுமக்களை தாக்கி வருகிறது.

இதனால், இன்னும் நாம் எமது போராட்டங்களை வலுப்பெறச்செய்து நியூசீலாந்து மற்றும் வெறிநாடுகளின் கவனத்தையீர்த்து ‘தமிழீமே” எமக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும் என அவர்களை உணரச் செய்யவேண்டும். புலம்பெயர் வாழ் தமிழரிலேயே எமது தமிழீழ விடுதலையின் வெற்றியும் பலமும் தங்கியுள்ளது” என்றார்.

இவரைத் தொடர்ந்து, மகளிர் அணி சார்பாகப் பேசிய திருமதி நர்மதா : ‘தமிழர்கள் பலம்பெற்ற இராச்சியங்களைக்கொண்டு சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ்ந்த வரலாற்றைக்கொண்டவர்கள். அந்த வரலாற்றை மீளவும் பெறுவதற்கு எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெறவேண்டும்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.