இலங்கை அலுவலகங்களுக்கு சென்னையில் தீவிர பாதுகாப்பு

சென்னையிலுள்ள இலங்கையின் பிரதித் தூதரகம் உட்பட அங்குள்ள இலங்கை அலுவலகங்களின் பாதுகாப்பு நேற்று வெள்ளிக்கிழமை முதல் பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இலங்கை வங்கி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்தும் நேற்று சென்னையில் இலங்கையின் பிரதித்தூதரகம் மீது தாக்குதல் நடத்தும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதை அடுத்துமே இந்த பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாநகர பஸ்ஸில் வந்த 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஈ.வெ.ரா. பெரியார் சாலையிலுள்ள இலங்கை வங்கிக்கு முன்பாக இறங்கி அங்கு பாதுகாப்புக் கடமையில் ஆயுதங்களுடன் நின்ற சப் இன்ஸ்பெக்டரையும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் தாக்கிவிட்டு வங்கி எல்லைக்குள் நுழைந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வங்கி முகாமையாளரின் சொகுசுக் காரின் பின் கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டதுடன், வங்கி அலுவலகக் கண்ணாடிக் கதவுகளும் கண்ணாடி ஜன்னல்களும் கற்களால் வீசித் தாக்கப்பட்டன.

ஐந்து நிமிடங்களுக்குள் இவற்றை அவர்கள் செய்வது விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல் கடமையில் இருந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் குழு இலங்கை வங்கிக்கு வந்து விசாரணைகளை நடத்தினார்கள்.

வங்கியைத் தாக்கியவர்கள் இலங்கை வங்கியில் பணி செய்யும் 35 ஊழியர்களையும் தாக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

“நாங்களும் தமிழர்கள் தான் உங்களைத் தாக்குவது எமது நோக்கமல்ல. ஒதுங்கிக் கொள்ளுங்கள்’ என அவர்கள் கூறியதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்திய போது இலங்கை வங்கியின் இரும்புப் பெட்டகத்தில் 50 கோடி ரூபாவுக்கு மேல் பணம் இருப்பில் இருந்ததாகவும் ஆனால், அவர்கள் வங்கிக்குள் சென்று தாக்காமல் வாசலில் நின்று தாக்கிவிட்டுச் சென்று விட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, தாக்கப்பட்ட இலங்கை வங்கியைச் சென்னையிலுள்ள இலங்கைப் பிரதி உயர் ஸ்தானிகர் ஹம்சா நேரில் சென்று பார்வையிட்டதுடன் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் பாதுகாப்புத் தொடர்பாக உரையாடியுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள பிரதி இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துக்கும் தூதகர அதிகாரியின் இல்லத்துக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் திருத்த வேலைகள் நடைபெறுவதுடன் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், இலங்கை வங்கி தாக்கப்பட்ட நேரம் அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த சப் இன்ஸ்பெக்டரும் மூன்று கான்ஸ்டபிள்களும் காவல் கடமையை சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு பணியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் கமிஷனர் இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தரணிகள் என்று தெரியவந்துள்ளதாகவும் யார் யார் இதில் ஈடுபட்டிருந்தனர் என்று விசாரணை நடத்தி வருவதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமிஷனர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு தலையிடாமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து முத்துக்குமார் என்ற 30 வயது இளைஞன் சென்னையில் வியாழக்கிழமை தீக்குளித்து மரணமான சம்பவத்தையடுத்து அங்குள்ள இலங்கை வங்கிக் கிளையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.