புலம்பெயர் நாடுகளிலும் சிங்களவர்களால் தமிழர்களின் குரல்வளைகள் நசுக்கப்படுகின்றன

nerudal-tamil-2புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களிற்கு எதிராகவும் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்த சிங்களவர்கள் தற்பொழுது வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

நியூசிலாந்தின் பல பாகங்களிலும் (ஒக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்சேர்ச்) தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், அமைதிப்பேரணி ஆகியனவற்றிற்கு எதிராக ஒவ்வொரு தடவையும் நியூசிலாந்த்தில் உள்ள சிங்களவர்கள் எதிர்செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ் மக்களை நிழற்படங்கள் எடுப்பதும், அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது.

 

கடந்த சனிக்கிழமை (21.03.2009) நியுசிலாந்து தமிழ் இளையோரால் ஒழுங்கு செய்யப்பட்ட “உரிமைப்போர்” நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழர்களின் நியாயமான போராட்டத்தை இழிவுபடுத்தும் வாசகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானதும் சிங்கள அரச பயங்கரவாதத்தினால் சளைக்காது மேற்கொள்ளப்படும் இன அழிப்பை நியாப்படுத்துவதுமான வாசகங்களைத் தாங்கிய ஊர்திகளுடன் சிங்களவர்கள் வீதிவலம் சென்றுள்ளனர்.

 

இதன்போது தமிழ் மக்கள் அனைவரும் நியூசிலாந்து சட்டத்தை மதித்து, தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறு விளைக்காது  அந்த ஊர்தி வலத்தைக் குழப்ப முயற்சிக்கவில்லை.

 

மறுநாள் (22.03.2009) சிங்களவர்கள் ஒக்லாந்து நகரில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

பௌத்த பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பை நியாயப்படுத்தும் பதாகைகளைத் தாங்கிவாறு சிங்களவர்கள் தெருக்களின் நடைபாதைகளில் நின்று கூச்சலிட்டனர்.

 

ஓக்லாந்து தமிழ் மக்கள் தமிழீழ தேசியக்கொடி, தமிழீழ தேசியத்தலைவரின் உருவப்படம், நியூசிலாந்து தேசியக்கொடி ஆகியவற்றுடன் கீழேயுள்ள வாகங்கள் எழுதக்கப்பட்ட பதாகைகளை அவர்களது ஊர்திகளில் தாங்கியவாறு நியூசிலாந்து சட்டத்திற்கு அமைவாக அமைதி ஊர்தி வலம் வந்தனர்.

 

1. உடனடிப் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
2. எமது மக்களுக்கான உணவு, மருந்துப்பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படவேண்டும்.
3. தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்மக்களுடைய ஏகபிரதிநிதிகள்.
4. தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

இவ்வாறு அமைதியாக ஊர்தி வலம் வரும்போது குழந்தையுடன் தாயார் ஒருவர் கையில் தமிழீழ தேசிய கொடியுடன் ஊர்திக்குள் இருந்தார்.

 

இவர்களுடைய ஊர்தி சிங்களவர்களுடைய கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்ற பகுதியை கடந்து சென்றபோது அந்நிகழ்வில் பங்கு பற்றிய சிங்களப் பெண்ணொருவர் தமிழ் தாயாரிடம் இருந்த தமிழீழ தேசியக் கொடியை திடீரென பலவந்தமாக பறித்ததுடன், கொடியின் தடியால் தமிழ் தாயாரைத் தாக்கியுள்ளார்.

 

அங்கு நின்ற நியூசிலாந்து காவல்துறையினர் தமிழ்தாயாருடைய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உடனடியாக அங்கிருந்து அவரை நகருமாறு கேட்டுக்கொண்டனர்.

 

தமிழீழத் தேசியக்கொடியினை மீளவும் பெறாமல் நகரமாட்டேன் என உறுதியாக நின்ற தாயாருக்குப் பக்க பலமாக தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுகூடினர்.

 

நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்ட காவல்துறையினர், தமிழீழ தேசியக் கொடியினை மீளவும் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததுடன், சிங்களவர்களின் போராட்டத்தையும் இடைநிறுத்திக் கலையுமாறு கேட்டுக்கொண்டனர்.

 

இதற்கமைய அவர்கள் கலைந்துசென்ற பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து காவல்துறையினர் தமிழீழ தேசியக்கொடியை எதுவித சேதமுமின்றி ஒக்லாந்து வாழ் தமிழர்களிடம் ஒப்படைத்தனர். 

 

“சிங்களப்பேரினவாதம் தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களுக்கு எதிரான பேரினவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பது இதிலிருந்து தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.

‘தமிழர்களின் குரல்வளைகள் அவர்களது சொந்த நாட்டில் நசுக்கப்படுவதோடு மட்டுமல்லாது புலம்பெயர்நாடுகளிலும் நசுக்கப்படுகின்றது” இது இன்று புலம்பெயர் நாடுகளில் தனிமனித சுதந்திரத்திற்கு சவாலாக மாறியுள்ளதால், இதற்கு எதிராகவும் கிளர்நதெழும் கட்டாயத்திற்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் நிகழும்போது தமிழ் மக்கள் நிழற்படம், காணொளிப்படம் எடுத்து ஆதாரங்களை சேகரிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.